↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
பாகிஸ்தான் அணியைவிட, தென் ஆப்பிரிக்கா அணி மிகவும் மேம்பட்டு இருப்பதால் அந்த அணிக்கு எதிரான போட்டியை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று பேட்டிங் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணி வீரர்களுக்கு எச்சரிக்கை கலந்து அறிவுரை வழங்கியுள்ளார். 

உலக கோப்பை கிரிக்கெட் தொடர்பாக, ஆங்கில தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு சச்சின் சிறப்பு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா வரும் ஞாயிற்றுக்கிழமை களம்காண உள்ளது. பாகிஸ்தான் போட்டியை போலவே, இதையும் நினைத்துக் கொண்டு இந்திய வீரர்கள் மைதானத்திற்குள் செல்ல கூடாது.

பாகிஸ்தானுக்கு எதிராக அதிகமாக சிங்கிள் ரன்களை இந்திய வீரர்கள் சேர்த்தனர். ஆனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின்போது சிங்கிள் ரன்களை எடுக்கும்போது மெத்தனமாக இருக்க கூடாது.

தென் ஆப்பிரிக்க வீரர்கள் மிகவும் துரிதமாக செயல்பட கூடியவர்கள். அந்த நாட்டு வீரர்களின் 'த்ரோ' வேகமாக வரும். பவுண்டரி எல்லைக்கோட்டிலும் ஃபீல்டிங்கில் அவர்கள் பாகிஸ்தானை விட மிகவும் வலிமையானவர்கள். எனக்கு தெரிந்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சிங்கிள் ரன்கள் எடுப்பது என்பது மிகவும் கஷ்டமான காரியம்.

இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கத்தை, தொடக்க பேட்ஸ்மேன்கள் தர வேண்டும். ரன்களை ஓடும்போதும் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அப்போதுதான் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்த முடியும்.

தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் டெய்ல் ஸ்டெயின்தான் அவர்களின் துருப்புச் சீட்டு. சந்தேகமேயின்றி, ஸ்டெயின் மிக சிறப்பான ஒரு பந்து வீச்சாளராகும். அவரது பந்து வீச்சு நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக உள்ளது. ஸ்டெயினை எதிர்கொள்வதற்கு முன்கூட்டியே பயிற்சி எடுப்பது இயலாத விஷயம். எல்லா பவுலர்களை போலவே ஸ்டெயினுக்கும் சில நாட்கள் திறமைக்கு ஏற்ப பந்து வீச முடியாத தருணங்களும் ஏற்படும். அதை சரியாக கணித்து இந்திய பேட்ஸ்மேன்கள் பயன்படுத்த வேண்டும். ஸ்டெயினிடம் எச்சரிக்கையாக இருக்கும் அதே நேரத்தில், வாய்ப்பு கிடைக்கும்போது பந்தை விரட்ட தயங்க வேண்டாம்.

பாகிஸ்தானுடன் 15 ரன்களில் அவுட் ஆனதால் ரோகித் ஷர்மாவை குறைத்து எடை போட முடியாது. அடுத்த முறையே அவர் மீண்டு வருவார். அதே நேரம் கோப்பையை தூக்க வேண்டுமானால் அனைத்து வீரர்களுமே சிறப்பாக விளையாட வேண்டும். ஒரு சிலரை மட்டுமே நம்பிக்கொண்டு இருக்க கூடாது. இவ்வாறு சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.

இதனிடையே இந்தியா-தென் ஆப்பிரிக்கா போட்டியை காண சச்சின் ஆஸ்திரேலியா பயணப்பட உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் மைதானத்தில் அமர்ந்து பார்க்கப்போகும் முதலாவது உலக கோப்பை இதுவாக இருக்கும் என்றார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top