உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி 310 ரன்களைக் குவித்தது. 311 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தானோ 39 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. உலககோப்பை போட்டியின் பி பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான்- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான லீக் போட்டி நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த கெயில் - ஸ்மித் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். கெயில் 4 ரன்களிலும் ஸ்மித் 23 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் இணைந்த பிராவோ - ராம்டின் ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிராவோ 49 ரன்கள் எடுத்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். களத்தில் இருந்த ராம்டின் 51 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். கடந்த போட்டியில் சதம் அடித்த சிமோன்ஸ் அரை சதம் அடிக்க ரசல் அதிரடியாக விளையாடி 13 பந்தில் 42 ரன்கள் சேர்க்க மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 310 ரன்கள் குவித்தது.
311 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் படுமோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தத் தொடங்கியது. முதல் 4 ஓவர்களில் ஒரே ரன் எடுத்த நிலையில் 4 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து மிகவும் பரிதாபமான நிலையில் பாகிஸ்தான் இருந்தது. பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் சற்றே சுதாரித்து ஆடி கவுரமான ஸ்கோரையாவது எடுக்க முடியுமா எனப் போராடினர். சொகிப் மசூத் மற்றும் உமர் அக்மல் ஜோடி ஆளுக்கு ஒரு அரை சதம் அடித்து அணியை கவுரவமான ஸ்கோர் எட்ட உதவியது. 25.3 ஓவர்களில், அணியின் ஸ்கோர் 105 ஆக இருந்தபோது, மசூத் 50 ரன்களில் அவுட் ஆனார்.
அணியின் ஸ்கோர் 139 ரன்களாக உயர்ந்தபோது உமர் அக்மல் 59 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதைத்தொடர்ந்து அப்ரிடி சில அதிரடி பவுண்டரிகளை விளாசி பாகிஸ்தானுக்கு நம்பிக்கையூட்டினார். ஆனால் அவரும் 28 ரன்களுக்கு நடையை கட்டினார். சொகைல் கான் 1 ரன்னில் அவுட் ஆனார். இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் 39 ஓவர்களில் 160 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
முதல் போட்டியில் இந்தியாவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருந்த பாகிஸ்தான், அதைவிட மோசமாக மே.இ.தீவுகளிடமும் தோற்றுள்ளது. இதனால் பாகிஸ்தானின் உலக கோப்பை கனவு கலையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
0 comments:
Post a Comment