↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

விராத் கோஹ்லிக்கும், பத்திரிகையாளருக்கும் இடையிலான மோதல் குறித்து கருத்து சொல்ல எனக்குத் தகுதி இல்லை. அதுகுறித்து எனக்குத் தெரியவும் தெரியாது. அதுகுறித்து நான் கருத்து சொல்லவும் விரும்பவில்லை என்று கூறியுள்ளார் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். 

அனுஷ்கா சர்மா குறித்து இந்துஸ்தான் டைம்ஸ் இதழில் வெளியான கட்டுரையால் கோபமடைந்தார் கோஹ்லி. இதையடுத்து ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்து செய்தி சேகரிக்க வந்துள்ள அந்த நாளிதழின் செய்தியாளரிடம் மிகக் கடுமையாக நடந்து கொண்டு மோசமான வார்த்தைகளால் திட்டித் தீர்த்து விட்டார். 

ஆனால் உண்மையில் கட்டுரையை எழுதியவர் இந்த செய்தியாளர் அல்ல. இதுகுறித்து பின்னர் தெரிய வந்ததும் தர்மசங்கடமாகிப் போன கோஹ்லி, அந்த செய்தியாளரிடம் நேரில் மன்னிப்பு கேட்க .தயங்கிக் கொண்டு வேறு ஒரு செய்தியாளர் மூலம் மன்னிப்பு கேட்டார்.

இந்த விவகாரத்தில் கோஹ்லிக்கு ஆதரவாக இந்திய கிரிக்கெட் வாரியமும், இந்திய அணி நிர்வாகமும் உள்ளன. ஒப்புக்குக் கூட இந்த இரு தரப்பும் அந்த செய்தியாளரிடம் மன்னிப்பு கேட்கவில்லை. இதையடுத்து ஐசிசியில் புகார் கொடுத்துள்ளார் அந்த செய்தியாளர். வழக்குத் தொடரவும் அவர் முடிவு செய்துள்ளார். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பெர்த் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அஸ்வின் அளித்த நீண்ட பதில்...

எங்களை ஆதரிக்க, இந்திய அணிக்கு ஆதரவாக இங்கே பத்திரிகையாளர்கள் வந்துள்ளீர்கள். மிகப் பெரிய அளவில் வந்திருப்பது உண்மையிலேயே எங்களை நெகிழ வைத்துள்ளது. கிரிக்கெட்டை மிகவும் பொறுப்பான முறையில் ரிப்போர்ட் செய்ய வேண்டியது ஊடகத்தின் கடமையாகும். அதை பொறுப்பான முறையில் கொண்டு சேர்க்க வேண்டும். மக்களுக்கு எப்படித் தர வேண்டுமோ அந்த முறையில் தர வேண்டும். இருப்பினும் சில நேரங்களில் மீடியாக்களின் போக்கு மகிழ்ச்சி தருவதில்லை. இது எனது கருத்து. அதேசமயம் பெரும்பாலான நேரங்களில் வீரர்களுக்கு மீடியாக்கள் தரும் ஆதரவு பாராட்டுக்குரியதாகவே உள்ளது.

சம்பவத்தன்று என்ன நடந்தது என்று உண்மையிலேயே தெரியாது. கண்டிப்பாக எனது எல்லைக்குள் அந்த விவகாரமும் இல்லை. எனவே என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாத நிலையில் அதுகுறித்து நான் கருத்துக் கூறவும் முடியாது. அதில் நான் நேர்மையாக இருக்கிறேன். என்ன நடந்தது என்பது தெரியாது. நடந்ததை விட்டு விட்டு, அடுத்து நடக்கப் போகும் போட்டி குறித்து அனைவரும் பார்ப்போம். எங்களால் முடிந்தவரை அந்தப் போட்டியை சிறப்பாக முடிக்க முயற்சிப்போம் என்றார் அஸ்வின்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top