நாட்வெஸ்ட் டி20 போட்டியில் நேற்று முன் தினம் நடந்த ஆட்டத்தில் நார்தாம்ப்டன்ஷைர்- வொர்செஸ்டர்ஷைர் அணிகள் மோதின.
இதில் முதலில் விளையாடிய வொர்செஸ்டர்ஷைர் அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 211 ஓட்டங்களை எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய நார்தாம்ப்டன்ஷைர் இலக்கை வேகமாக துரத்தியது.
15 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 145 ஓட்டங்கள் குவித்து வெற்றிக்கு அருகில் சென்றது. இதனால் வொர்செஸ்டர்ஷைர் அணித்தலைவர் டேரில் மிட்செல் புதிய உத்தியைக் கையாண்டார்.
16வது ஓவரின் போது விக்கெட் கீப்பர் பென் காக்ஸின் கால்காப்பு, கிளவ்களைக் கழற்றச் சொல்லி, அவரை ஃப்ளை ஸ்லிப் என்கிற பொஸிஸனில் நிற்கச் சொன்னார்.
இதனால் விக்கெட் கீப்பர் இல்லாத நிலை ஏற்பட்டது. இதைக் கண்ட நடுவர்கள் விதிமுறைப்படி இது சரியா என நீண்டநேரம் விவாதித்தார்கள்.
பிறகு விதிமுறைப்படி சரியானதுதான் என முடிவு எடுத்து ஆட்டத்தைத் தொடரச் செய்தார்கள். 18 ஓவர்கள் வரை விக்கெட் கீப்பர் இல்லாமலே ஆட்டம் நடைபெற்றது. டோனி இது போன்ற உத்திகளை அதிகம் கையாள்வார்.
இது தொடர்பாக வொர்செஸ்டர்ஷைர் அணியின் இயக்குநர் ரோட்ஸ் கூறுகையில், எதிரணி ஓட்டங்கள் குவிப்பதைத் தடுப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
இந்திய அணித்தலைவர் டோனி, இது போன்று செய்வார். அதைப் பார்த்தபோது அருமையான யோசனையாகப்பட்டது. அதனால் விக்கெட் கீப்பரை ஃப்ளை ஸ்லிப்பில் நிற்கச் சொன்னோம் என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment