தங்க சுரங்கம் நிலக்கரி சுரங்கங்கள் கூட சமயத்தில் வற்றிப் போகலாம். ஆனால் கே.பாக்யராஜ் சொல்கிற விஷயங்களும், அவரை பற்றி மற்றவர்கள் சொல்கிற விஷயங்களும் வற்றவே வற்றாது போலிருக்கிறது. பொதுமேடைகளில் சொல்லிய விஷயத்தையே சொல்லி சொல்லி போரடிக்கிற ‘சவுக்கு’ மாஸ்டர்களுக்கு மத்தியில் கே.பாக்யராஜ் மட்டும் நல்ல ‘சரக்கு’ மாஸ்டர். அவ்வளவு விஷயங்கள் இருக்கும் அவரது பேச்சில்.
தயாரிப்பாளர் கே.தனஞ்செயன் தான் சார்ந்த திரைத்துறை ஜாம்பவான்களுடன் சேர்ந்து களமிரங்கியிருக்கும் பாஃப்டா என்கிற பிலிம் இன்ஸ்டியூட் துவக்க விழாவில் இயக்குனர் மகேந்திரன், கே.பாக்யராஜ், பார்த்திபன், நாசர், மனோபாலா, கார்த்திக் சுப்புராஜ், கே.ராஜேஷ்வர் என்று பலரும் கலந்து கொண்டார்கள். விழா அமர்க்களப்பட்டது என்பதை தனியாக வேறு சொல்ல வேண்டுமா என்ன? வழக்கம் போல பாக்யராஜ் பேச்சில் ஏகப்பட்ட உள்ளடக்கம். ஆனால் அவரைப்பற்றி மனோபாலா ஒரு விஷயம் சொன்னார் பாருங்கள்… அதுதான் அதையெல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டது.
தேவர் பிலிம்சுக்கு கதை சொல்லப் போயிருந்தார் கே.பாக்யராஜ். சின்னப்பா தேவர் கார்ல ஏறிக்குங்க. அவர் ஸ்டூடியோவுக்கு போய் சேர்றதுகுள்ள கதையை சொல்லிடுங்க. அதுல கடவுள் பக்தி இருக்கணும். பெண்கள் சென்ட்டிமென்ட் இருக்கணும். ஒரு சஸ்பென்சும் இருக்கணும் என்பது கே.பாக்யராஜுக்கு இடப்பட்ட கட்டளை. கார்ல ஏறி ஒரு நிமிஷத்துக்குள் கதையை சொல்லி முடித்திருந்தார் அவர். எப்படி தெரியுமா?
கடவுளே… யார் இந்தப் பெண்ணைக் கற்பழித்தது..?
இதுதான் அவர் சொன்ன ஒரு வரிக்கதை. கடவுளே-வில் கடவுள் வந்துட்டாரா? யார் இந்த பெண்ணை-யில் சஸ்பென்ஸ் வந்துருச்சா? கற்பழித்தது- வில் சென்ட்டிமென்ட் இருக்கா? அதுதான் பாக்யராஜ் என்று மனோபாலா சொல்ல, அரங்கத்தில் எழுந்த கைதட்டல்கள் அடங்க வெகு நேரம் ஆனது.
விழாவில் பேசியவர்கள் எல்லாருமே இங்கு பயிலும் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கப் போகிற திரையுலக ஜாம்பவான்கள். அதையெல்லாம் கேட்ட மாத்திரத்தில் நமக்கு ஒன்றே ஒன்றுதான் தோன்றியது. ‘கடவுளே… இந்த மாணவர்கள் ஏழேழு ஜென்மத்திற்கும் கொடுத்து வைத்தவர்கள்! ’
0 comments:
Post a Comment