
இந்திய கிரிக்கெட் அணியின் துணைத்தலைவர் விராட்கோஹ்லி, இரண்டு நாட்களுக்கு முன்பு அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் பயிற்சியில் ஈடுபட்டுவிட்டு திரும்புகையில் அங்கு இருந்த ஆங்கில நாளிதழின் நிருபரை பார்த்து திடீரென கண்டபடி தகாத வார்த்தையால் திட்டியுள்ளார்.
இந்த விவகாரம் அனைத்து ஊடகங்களிலும் விஸ்வரூபம் எடுத்தது, வருங்கால அணித்தலைவராக உருவாகி வரும் விராட் கோஹ்லி பொது இடத்தில் நிருபரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட விதம் ரசிகர்களை மட்டுமின்றி முன்னாள் வீரர்களையும் முகம் சுழிக்க வைத்தது.
இதற்கிடையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் கோஹ்லியால், அவமதிக்கப்பட்ட அந்த நிருபர் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் டால்மியாவுக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார்.
அத்துடன் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கவனத்துக்கும் கொண்டு சென்றதால் இந்த பிரச்சினை மேலும் வலுத்தது.
அதோடு அங்குள்ள சட்டவிதிப்படி விராட்கோலி மீது வழக்கு தொடர வழிமுறை உள்ளதா? என்றும் அந்த நிருபர் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் சர்ச்சை குறித்து விசாரணை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரியம், கோஹ்லி தவறாக நடந்து கொண்டது தெரியவந்ததால் அவரை எச்சரிக்கை செய்துள்ளது.
இது குறித்து இந்திய கிரிக்கெட் செயலாளர் அனுராக் தாகூர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இரண்டு நாட்களுக்கு பிறகு பெர்த்தில் நடந்த சம்பவம் குறித்து வாரியத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
சம்பந்தப்பட்ட வீரர் (விராட்கோஹ்லி) இந்திய அணியின் கண்ணியத்தையும், மாண்பையும் கட்டி காக்கும் வகையில் எல்லா நேரங்களிலும் நடந்து கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம், இந்திய அணி நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பு வைத்துள்ளது.
இதுபோன்ற சம்பவம் வருங்காலத்தில் மீண்டும் நடக்காத வகையில் பார்த்து கொள்ள வேண்டும் என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிரிக்கெட் செய்திகளை சேகரிப்பதிலும், கிரிக்கெட்டை பிரபலப்படுத்துவதிலும் ஊடகங்களின் பங்களிப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் மதிக்கிறது.
சம்பந்தப்பட்ட அனைவரும் பிரச்சினையை மறந்து உலகக் கிண்ண போட்டித் தொடரில் இந்திய அணியின் அடுத்தடுத்த போட்டிகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கோஹ்லியின் மோசமான செயலுக்கு இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் கவாஸ்கர், அவுஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவ்வாக், மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் அணித்தலைவர் பிரையன் லாரா, இந்திய முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கோஹ்லி கொஞ்சம் முதிர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் நடந்த சம்பவத்துக்காக சம்பந்தப்பட்ட நிருபரிடம் அவர் வருத்தம் தெரிவிப்பது தான் பிரச்சனைக்கு சரியான தீர்வு எனவும் கூறியுள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.