திசை மாறிய பறவைகளாக இருந்தாலும், இரண்டும் ஒரு காலத்தில் ஒருகூட்டு பறவைகள்தானே? பிரகாஷ்ராஜ்- லலிதகுமாரியைதான் சொல்கிறோம். பிரிந்து வாழ்ந்தாலும் சில விஷயங்களுக்காக அவ்வப்போது பேசிக் கொள்ளதான் செய்கிறார்கள் இருவரும். அண்மையில் சிஎஸ்கே என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இந்த விஷயம் வெளிப்பட்டது.
சார்லஸ், ஷபி, கார்த்திகா என்றொரு படம். அதாவது சி.எஸ்.கே. சென்னை சூப்பர் கிங்ஸ் என்று பெயர் வரும்படி அமைத்துக் கொண்டது இயக்குனர் சத்தியமூர்த்தியின் சாமர்த்தியம். இவர் பிரகாஷ்ராஜிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர். லலிதகுமாரியின் மகளுக்கு இவர்தான் ட்யூஷன் மாஸ்டர். லலிதகுமாரியிடம், அக்கா அக்கா என்று உடன்பிறவா தம்பி லெவலிலேயே பழகினாராம் சத்தியமூர்த்தி. ஒருநாள், ‘அக்கா என்னை பிரகாஷ்ராஜ் சார்ட்ட அசிஸ்டென்ட்டா சேர்த்து விடுங்களேன்’ என்று இவர் கேட்க, சத்திய மூர்த்தி மீதிருக்கும் நல்ல அபிப்ராயம் காரணமாக லலிதகுமாரியும் சிபாரிசு செய்தாராம். அதற்கப்புறம் அவரிடம் சேர்ந்து தொழிலை கற்றுக் கொண்டு இன்று முதல்படமாக இந்த சிஎஸ்கே!
அன்று செய்த உதவியை என்றும் நினைத்திருக்கும் சத்தியமூர்த்தி, இந்த படத்தில் லலிதகுமாரியையே காஸ்ட்யூம் டிசைனர் ஆக்கிவிட்டார்.
விழாவில் சற்றே நெர்வஸ் ஆக காணப்பட்ட சத்தியமூர்த்தி, தனது உரையை தடுமாற்றத்தோடு துவங்கினாலும், படத்தின் வசனகர்த்தா கோவி லெனின் பேச்சில் சரளமான நகைச்சுவை மற்றும் எதார்த்தம்! அதை அவர் வாயாலேயே கேட்டுவிடுவோம்-
“நண்பர் சத்யா என்னிடம் இத்தனை பக்கத்திற்கு வசனம் இருந்தால் போதும் என்றார். அவர் கேட்டதைவிட பத்து பக்கம் கம்மியாகத்தான் நான் எழுதிக் கொடுத்தேன். காரணம், இது த்ரில்லர் படம். வசனத்தைவிட காட்சிகள்தான் முக்கியம். நான் எழுதிக்கொடுத்ததில் டைரக்டர் வடிகட்டியதுபோக, அதனைப் பேசிய நடிகர்-நடிகைகள் தங்கள் வசதிக்கேற்ப வடிகட்டிக்கொண்டார்கள். படத்தில் இடைவேளைக்குப் பிறகு, நாயகியைத் தேடி அலைவதுதான் ஹீரோவின் வேலை. அதனால் ‘கார்த்திகா.. கார்த்திகா…’ என்பதுதான் ஹீரோவுக்கான வசனம். நாயகிக்கோ தன்னைத் துரத்துபவர்களிடமிருந்து தப்பிக்கும் போராட்டத்தில், ‘ஆ.. ஓ..’ என்று அலறுவதே பெரிய டயலாக். இப்படிப்பட்ட கஷ்டமான வசனங்களை இந்தப் படத்தில் நான் எழுதியிருக்கிறேன். பெரும்பாலான இடங்களில் மவுனத்தையே வசனமாக்க முடியும் என்று காட்டியிருப்பதுதான் இந்தப் படத்தின் புதுமை-புரட்சி. டைரக்டர் சத்யா, கேமராமேன் ஸ்ரீசரவணன், இசையமைப்பாளர் சித்தார்த்தா மோகன் உள்ளிட்ட டீம்தான் இந்தப் படத்தின் தூண்கள். சத்யாதான் ரியல் ஹீரோ” என்றார் கோவி.லெனின்.
பாடல்களை தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு வெளியிட்டு வாழ்த்தினார்.
0 comments:
Post a Comment