↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

திருநாவலூரில் வெட்டப்பட்ட மகன் அபாயகரமான நிலையில் இருப்பதால் வில்லன் நடிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அருகே உள்ள வண்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பரிமேல் அழகர். பா.ம.க மாவட்ட துணை செயலாளராக இருந்து வந்தார்.

இவர் கைதி, சரவண பொய்கை போன்ற சினிமா படங்களில் வில்லன் மற்றும் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்துள்ளார். மேலும் பல டி.வி. சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர் ஆரம்பத்தில் தி.மு.க.வில் இருந்தார். அப்போது நடந்த பஞ்சாயத்து தேர்தலில் இவர் போட்டியிட்டார். இவரை எதிர்த்து அதே ஊரை சேர்ந்த அ.தி.மு.க. ஒன்றிய முன்னாள் செயலாளர் ராஜா தரப்பினர் போட்டியிட்டனர். இதில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர்களுக்குள் தொடர்ந்து முன் விரோதம் இருந்து வந்தது. அடிக்கடி இருதரப்பினரும் மோதிக்கொண்டனர்.

4 வருடங்களுக்கு முன்பு ராஜாவின் தம்பி ரமேஷ் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பரிமேல் அழகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்கு இருந்து வந்தது. பரிமேல் அழகருக்கு 4 மகன்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் அர்ஜுனன். சமீபத்தில்தான் 5 ஆண்டு வக்கீல் படிப்பு படித்து முடித்திருந்தார். 2 வாரத்துக்கு முன்பு அவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது ராஜா, அவரது தம்பி பிரபு, தந்தை ராமச்சந்திரன் மற்றும் அவர்களது தரப்பை சேர்ந்தவர்கள் அர்ஜுனனை சரமாரியாக தாக்கினார்கள். பல இடங்களில் அரிவாள் வெட்டும் விழுந்தது.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் கோமா நிலைக்கு சென்றார். தற்போது புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பரிமேல் அழகர் உடனிருந்து கவனித்து வந்தார். இதற்காக கோரிமேட்டில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி இருந்தார். மகனின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வந்தது. இதனால் வேதனையடைந்த பரிமேல் அழகர் விடுதி அறை மின் விசிறியில் தூக்குமாட்டி நேற்று தற்கொலை செய்து கொண்டார். அவருடைய உடல் நேற்று சொந்த ஊரான வண்டிப்பாளையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று மாலை அவருக்கு இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

அரிவாளால் வெட்டப்பட்ட மகனின் உடல் நிலை மோசமாக இருந்ததை பார்த்து பரிமேல் அழகர் தற்கொலை செய்திருப்பதால் அவருடைய தரப்பினர் கொந்தளிப்பில் உள்ளனர். எனவே அவர்கள் எதிர்தரப்பினரை தாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வண்டிப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பதட்டம் நிலவுகிறது. இதையடுத்து டி.எஸ்.பி. சங்கர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வண்டிப்பாளையத்துக்கு செல்லும் ஜங்ஷன் ரோட்டிலும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். பரிமேல் அழகரின் சித்தப்பா வண்டிப்பாளையம் சுப்பிரமணியம் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top