வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் வந்த 35 வயதான சையத் பரீத்கான் என்பவர், நாகாலாந்தில் கார் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 23 மற்றும் 24-ம் தேதிகளில் நாகா பழங்குடியின பெண் ஒருவரை பல்வேறு பகுதிகளுக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சையத்தை கைது செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சையத், திம்மாபூரில் உள்ள மிகவும் பாதுகாப்பு நிறைந்த மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த பலாத்கார சம்பவம் தொடர்பாக சையத் மீது நாகா பழங்குடியின மக்கள் கடும் கோபத்தில் இருந்தனர். சையத்திற்கு தக்க தண்டனை வழங்க நினைத்த அவர்கள், ஆயிரக்கணக்கில் திரண்டனர். திம்மாபூர் மத்திய சிறையை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர், பாலியல் குற்றவாளி சையத்தை சிறைக்கு வெளியே இழுத்து, ஊர்வலமாக அழைத்து சென்று ஊருக்கு மையப்பகுதியில் வைத்து அடித்துக் கொலை செய்தனர்.
அப்படியும் கோபம் தணியாத பழங்குடி மக்கள், அங்கிருந்த வாகனங்களையும் தீ வைத்து கொளுத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் உண்டானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவத்தை அடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவும் போடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அம்மாவட்ட போலீஸ் அதிகாரி மெரென் ஜாமீர் கூறுகையில், ‘சுமார் 4000 ஆயிரம் மக்கள் திரண்டுவந்து சிறையை உடைத்து உள்ளே சென்றனர். சிறையின் இரண்டு கேட்டையும் அவர்கள் உடைத்தனர். குற்றவாளியை வெளியே தரதரவென்று இழுத்து சென்றனர். நிர்வாணமாக அவரை அழைத்து சென்று நகரின் மையப்பகுதியில் வைத்து அடித்து கொலை செய்தனர். நாங்கள் அவரை பொதுமக்களிடம் இருந்து காப்பாற்றுவதற்கு முன்னதாகவே பொதுமக்கள் அவரை பலமாக தாக்கிவிட்டனர். பொதுமக்கள் கொடூரமாக நடத்திய தாக்குதலில் குற்றவாளி உயிரிழந்தார்.
வானில் துப்பாக்கியால் சுட்டபின்னரே பொதுமக்கள் அங்கிருந்து ஓடினர். பின்னரே சடலத்தை நாங்கள் மீட்டோம். இந்த துரதிஷ்டவசமான சம்பவத்தை அடுத்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் விதமாக மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தோம். பொதுமக்கள் சிறையை உடைப்பதை தடுப்பதற்கு நாங்கள் அனைத்து நடவடிக்கையும் எடுத்தோம். நாங்கள் கண்ணீர் புகை குண்டுகளையும் வெடிக்க செய்தோம். ஆனால் பொதுமக்கள் எப்படியோ உள்ளே நுழைந்துவிட்டனர். மாவட்டத்தில் நிலையை கட்டுக்குள் கொண்டுவர அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. விசாரணை நடைபெற்று வருகிறது‘எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
0 comments:
Post a Comment