↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை தமிழில் வர்னணை செய்யும் விஜய் டிவிக்கு ரசிகர்களிடமிருந்து போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. மாறாக கிண்டலடிக்க ஆரம்பித்து விட்டனர் புள்ளையாண்டான்கள்! நடப்பு உலக கோப்பை போட்டிகளை தமிழ், மலையாளம், கன்னடம் உட்பட 6 மொழிகளில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்புகிறது. இதற்காக அந்தந்த பிராந்திய சேனல்களுடன் கூட்டிணைவு வைத்துக் கொண்டுள்ளது ஸ்டார் சேனல். தமிழில் ஸ்டார் குரூப், சேனலான விஜய் டிவி இருப்பதால், முக்கிய போட்டிகளை அதில் தமிழில் நேரடி வர்னணை செய்கிறார்கள்.

இந்த அறிவிப்பு வெளியானபோது, தமிழ் ரசிகர்கள் ஆர்வத்தில் துள்ளியது என்னவோ உண்மைதான். ஆனால், விஜய் டிவியில் வர்ணனை செய்வதை கேட்டுவிட்டு எள்ளி நகையாட ஆரம்பித்து விட்டனர். தெரியாத்தனமாக வர்னணையைக் கேட்டோர், ஏண்டா கேட்டோம் என்று தலைசுற்றி ரிமோட்டை தேடிப் பிடித்து அமுக்கித் தள்ளுகிறார்களாம். பட்டன்களை!

இதற்கு காரணம், ரசிகர்கள் வைத்திருந்த அதிகபட்ச எதிர்பார்ப்புதான் என்றால் அது மிகையில்லை. ரேடியோ மிர்ச்சி போலவோ, சூரியன் எப்.எம். போலவோ படபடவென காமெடி வெடிகளை கொளுத்தி போட்டபடி கமெண்ட்ரி கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்த தமிழ் ரசிகர்களுக்கோ, "அதே கரட்டாண்டி" கதை போல "ஆகாஸவாணி ஸெய்திகள் வாஸிப்பது சரோஜ் நாராயண்ஸ்வாமி" என்பது போன்ற உணர்வுதான் கிடைத்துள்ளது.

தமிழிலில் வர்னணை சொல்கிறேன் என்று கூறிவிட்டு, அதிகபட்சமாக ஆங்கில கலப்பில் பேசுவதும் ரசிகர்களின் அதிருப்திக்கு காரணம். கிரிக்கெட் பார்ப்பவர்களில் பெரும்பாலான ரசிகர்களுக்கு ஆங்கிலத்தில் கூறும் கமெண்ட்ரி நன்றாகவே புரியும். அந்த அளவுக்கு பழக்கமும் உள்ளது. எனவே அதேபோல தமிழிலிலும் பேசிக் கொண்டிருப்பதை ரசிகர்களில் பெரும்பாலானோர் ரசிக்கவில்லை. புதுமையை எதிர்பார்க்கிறார்கள்.

தமிழில் வர்ணனை செய்பவர்கள், தூய்மையான தமிழில் பேசினாலும் பரவாயில்லை. ஹிந்தி ஹிரோயின் 'எனக்கு கொஞ்சம்.. கொஞ்சம் தமிழ் வருது' என்று கொஞ்சுவதை போல உள்ளது சிலரின் வர்னணை. சடகோபன் ரமேஷ், ஸ்ரீராம், ஹேமங்க் பதானி போன்ற முன்னாள் வீரர்களை வைத்தும், பாலாஜி போன்றோரை வைத்தும் தமிழில் கமெண்ட்ரி கொடுக்கிறது விஜய் டிவி. சடகோபன் ரமேஷ் வர்னணை மட்டுமே இயல்பாக, நார்மலாக உள்ளது.


பெரும்பாலான வர்ணனைகள், பொதுவான தமிழக பேச்சு வழக்கில் இல்லை. உதாரணத்திற்கு, இருதினங்களுக்கு முந்தைய யு.ஏ.இ-இந்தியா போட்டியின்போது விஜய் டிவி வர்ணனையாளர் ஒருவர் பேசுகையில், நெனச்சின்டு இருந்தேன், போட்டுண்டே இருக்காங்க, சட்டுன்னு தெரியிறது, பேசிண்டு இருக்கார், எவ்ளோ ஷ்ரமம் அது, விக்கெட்ட பத்தி அஸ்வின் தெரிஞ்சிண்டாரு... இதுபோன்ற வார்த்தைகளை கேட்கும்போது, அது பொதுவான தமிழக வழக்கு மொழியோடு இல்லையே என்ற கருத்தே எழுகிறது.

பேசாமல், நெல்லை சிவாவை அழைத்து வந்து "ஏலே.. கோஹ்லி.. ஏம்ல, கொத்திகிட்டு இருக்கே.. சும்மா சமுட்டி அடிக்க வேண்டியதுதானல".. என்று கமெண்ட்ரி கொடுக்க வைக்கலாமே. அதுவும் சரிப்பட்டு வராவிட்டால் மெட்ராஸ் பாஷை இருக்கு.. கோயம்பத்தூர் பாஷை இருக்கு.. மதுரை பாஷை இருக்கு.. இதுபோன்ற ஸ்லாங்குகளில் பிரமாதமாகப் பேசக் கூடியவர்கள் எக்கச்சக்கமாக உள்ளனர். கூப்பிட்டு வந்து கலக்கலாமே...!

எதிலும் புதுமையை செய்யும் தமிழ் தொலைக்காட்சி சேனல் என்ற பெருமை கொண்ட விஜய் டிவியில், தமிழில் கிரிக்கெட் வர்னணை செய்யும் முயற்சி பாராட்டத்தக்கதே. ஆனால் வழக்கம்போல கமெண்ட்டரியைக் கொடுத்து அவர்களும் சறுக்கி விட்டனர். சற்று மேம்பட்டால் நல்லது...!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top