↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
உலக கோப்பை அரையிறுதி போட்டியில் 95 ரன்கள் வித்தியாசத்தில், இந்தியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலியா. முன்னதாக டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்து 328 ரன்களை விளாசியது. இதையடுத்து இந்தியா பேட் செய்த இந்தியா 233 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.
டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்து, 50 ஓவர்களில், 7 விக்கெட் இழப்புக்கு 328 ரன்களை எடுத்தது. 329 ரன்கள் விளாசினால் பைனலுக்கு செல்லலாம் என்ற நிலையில், இந்தியா விரட்டலை ஆரம்பித்தது. முதலில் நிதானமாக ஆட்டத்தை தொடங்கிய இந்தியா, 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்திருந்தது.
தவானின் அதிரடியால் ஸ்கோர் சற்று வேகம் பிடிக்க ஆரம்பித்த நேரத்தில், 12.5வது ஓவரில் ஹசில்வுட் பந்தில், பவுண்டரி எல்லையில் நின்ற மேக்ஸ்வெல்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் தவான். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 76 ரன்களாக இருந்தது.
இதன்பிறகு ரோகித்துடன், கோஹ்லி ஜோடி சேர்ந்தார். ஆனால் இந்த ஜோடி நீடித்து நிற்கவில்லை. 15.3வது ஓவரில், ஜான்சனின் பவுன்சரில் ஹேடினிடம் கேட்ச் கொடுத்து, கோஹ்லி 1 ரன்னில் அவுட் ஆனார். ஆனால், அவர் 13 பந்துகளை சந்தித்து தடுமாறியபிறகு விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் மைதானத்திலுள்ள ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். டிவியில் பார்த்த ரசிகர்கள், பலரும் டிவியை ஆப் செய்தனர். 18வது ஓவரில் இந்தியா 91 ரன்கள் எடுத்திருந்தபோது, ரோகித் ஷர்மா 34 ரன்களில் அவுட் ஆனார். ஜான்சன் வீசிய முந்தைய ஷாட் பிட்ச் பந்தில் அபாரமாக சிக்சர் அடித்த ரோகித், அடுத்த பந்திலேயே பௌல்ட் ஆனார்.
அணியின் ஸ்கோர் 108 ரன்களாக இருந்தபோது, 7 ரன்களில் ரெய்னா வெளியேறினார். 26 ஓவர்கள் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு, 121 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து டோணி, ரஹானே அணியை சரிவில் இருந்து மீட்க தொடங்கினர். இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப்பில் 70 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஸ்டார்க் பந்தில் ஹேடினிடம் கேட்ச் கொடுத்து 44 ரன்களில் அவுட் ஆனார் ரஹானே. 38 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களை எடுத்திருந்தது.
ஸ்கோர் 208ஆக இருந்தபோது, ஜடேஜாவும், 231ஆக இருந்தபோது டோணியும், ரன் அவுட் ஆனார்கள். இந்திய தரப்பில் டோணிதான் அதிகபட்சமாக 65 ரன்கள் எடுத்தார். வேறு பேட்ஸ்மேன்கள் யாரும் அரை சதம் கூட அடிக்கவில்லை. ஜேம்ஸ் பால்க்னர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்டீவ் ஸ்மித் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
ஆஸ்திரேலிய இன்னிங்ஸ்: முன்னதாக, முதல் 10 ஓவர் பேட்டிங் பவர் பிளேயில், ஆஸ்திரேலியா 1 விக்கெட்டை இழந்து 56 ரன்களை எடுத்தது. ஆனால் ஸ்மித் மற்றுன் பின்ச் 3வது விக்கெட்டுக்கு 182 ரன்கள் சேர்த்தனர். அதை உமேஷ் யாதவ் 35வது ஓவரில் உடைத்தார். உமேஷ் யாதவ் வீசிய 35வது ஓவரின் முதல் பந்தில் 105 ரன் எடுத்திருந்த ஸ்மித், ரோகித்திடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். நீண்ட நேரமாக போராடி அந்த பார்ட்னர்ஷிப் உடைக்கப்பட்டது.
இதன்பிறகு அதிரடி காண்பித்த மேக்ஸ்வெல்லை அஸ்வின் நடையை கட்ட செய்தார். அவர் 23 ரன்களில் அவுட் ஆனார். அப்போது ஆஸ்திரேலியா ஸ்கோர் 232 ரன்கள். இதற்கு அடுத்த ஓவரில் அதாவது 39வது ஓவரில், உமேஷ் யாதவ் பந்தில் ஆரோன் பின்ச் அவுட் ஆனார். 116 பந்துகளை சந்தித்து கட்டைபோட்டு அவ்வளவு நேரம் நின்று சதத்தை நெருங்கிய நேரத்தில், 81 ரன்னில், உமேஷ் யாதவின், ஷாட் பிட்ச் பந்தில் தவானிடம் கேட்ச் கொடுத்து வீழ்ந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 234 ரன்களாகும்.
அதன்பிறகு மைக்கேல் கிளார்க் மற்றும் ஷேன் வாட்சன் ஆகியோர் புதிய பேட்ஸ்மேன்களாக களமிறங்கினர். பார்ட்னர்ஷிப் அமைந்துவிடாமல் இவர்களையும் பிரித்தால், இந்திய அணியால், ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்த முடியும் என்ற நிலையில், மோகித் ஷர்மா பந்து வீச்சில் ரோகித்திடம் கேட்ச் கொடுத்து, கிளார்க் 10 ரன்னில் நடையை கட்டினார். அப்போது ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 248 ரன்னாக இருந்தது. இதன்பிறகு, பால்க்னர் களமிறங்கினார். அவர் 21 ரன்களில் உமேஷ் யாதவ் பந்தில் கிளீன் பௌல்ட் ஆனார்.
50 ஓவர்கள் இறுதியில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகள் இழப்புக்கு, 328 ரன்களை எடுத்தது. ஜான்சன் 27 ரன்களுடனும், ஹாடின் 7 ரன்களுடனும் களத்தில் நின்றனர். இந்திய தரப்பில் உமேஷ் யாதவ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை சாய்த்தார். முன்னதாக, பேட்டிங்கிற்கு சாதகமான சிட்னி மைதானத்தில், வெற்றி, தோல்விக்கு டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருந்த நிலையில், டாசில் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.
இரு அணிகளிலுமே கடந்த காலிறுதியில் ஆடிய அதே வீரர்கள் உள்ளனர். எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. டேவிட் வார்னரும், ஆரோன் பின்ச்சும், தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஷமி வீசிய முதல் ஓவரில் 2 ரன்களே கிடைத்த நிலையில், உமேஷ் யாதவ் வீசிய 2வது ஓவரில் ஆஸ்திரேலியா 12 ரன்களை எடுத்தது. ஷமி வீசிய அடுத்த ஓவரில் 1 ரன் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்தது. இதனிடையே யாதவ் வீசிய ஆட்டத்தின் 4வது ஓவரின் முதல் பந்தில் டேவிட் வார்னர் அவுட் ஆனார்.
பந்து பேட்டின் விளிம்பில் பட்டு கோஹ்லியிடம் கேட்சானது. வார்னர் ஏழே பந்துகளில் 12 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, பின்ச்சுடன், ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில், ஸ்மித் ஓரளவுக்கு அதிரடியாக ஆட, பின்ச் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் 10 ஓவர்கள் கட்டாய பேட்டிங் பவர் பிளே எனப்படும். இந்த ஓவர்களில், ஃபீல்டர்களுக்கு கட்டுப்பாடு உண்டு. எனவே அதிரடியாக ஆட பேட்ஸ்மேன்கள் முயல்வார்கள். ஆயினும் உமேஷ் யாதவ் மற்றும் ஷமி கட்டுக்கோப்பான பந்து வீச்சால் ஆஸ்திரேலியா 56 ரன்களை எடுத்தது.
அதேநேரம் பிற அணிகளுக்கு எதிராக முதல் பத்து ஓவர்களில் மேலும் டைட்டாக பந்து வீசிய இந்திய வீரர்கள் இம்முறை சற்று அதிக ரன்களை கொடுத்து விட்டனர். எனவே இரு அணிகளுக்கும் இது பப்பாதி வெற்றிதான். அடுத்த 10 ஓவர்களில் ஸ்பின்னர்களான ஜடேஜாவும், அஸ்வினும் அதிக ஓவர்கள் வீசினர். மோகித் ஷர்மா கணிசமாக பங்களித்தார். 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 105 ரன்களுக்கு 1 விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது. எனவே விக்கெட் வீழ்ச்சிக்காக இந்தியா ஏங்கியது. முதல் 20 ஓவர்களுக்குள் 6 பவுலர்களை டோணி மாற்றியது இதற்கு சான்றாகும்.
Home
»
sports
»
sports.tamil
»
worldcup
» இந்தியாவை 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலியா!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment