நடப்பு உலகக்கிண்ணத் தொடரில் இரு அணிகளும் பட்டையை கிளப்பி வருவதால் யார் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
நியூசிலாந்து அணி 7வது முறையாக அரையிறுதியில் விளையாடுகிறது. இதுவரை ஆடிய 6 அரையிறுதியில் தோற்று இருந்தது.
தற்போது சொந்த மண்ணில் 26 ஆண்டுக்கு பிறகு நடைபெறும் போட்டியில் இறுதிப்போட்டிக்கு முதல் தடவையாக தகுதி பெற்றுவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது.
நியூசிலாந்து துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு என அனைத்து துறைகளிலும் அசத்தி வருகிறது. மேலும் வலுவான துடுப்பாட்ட வரிசையால் எதிரணிகளை மிரட்டி வருகிறது.
இந்த அணியில் குப்டில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார். அவர் இதே வேகத்தில் தென்ஆப்பிரிக்காவை துவம்சம் செய்யலாம்.
மேலும் அணித்தலைவர் மெக்குல்லம், வில்லியம்சன், டெய்லர், ஆண்டர்சன், எலியோட் ஆகிய துடுப்பாட்டக்காரர்கள் உள்ளனர்.
பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட் முதுகெலும்பாக உள்ளார். அவர் 19 விக்கெட் கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார். தென்ஆப்பிரிக்க துடுப்பாட்டக்காரர்களுக்கு இவர் கடும் சவாலாக இருப்பார். இது தவிர சவுத்தி, வெட்டோரி, போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர்.
எதிரணியான தென் ஆப்பிரிக்கா, இதுவரை 2 முறை அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தபோதிலும், ஒருமுறை கூட இறுதி போட்டிக்கு சென்றதில்லை.
1992ல் மழை விதியால் இங்கிலாந்திடம் தோற்றது. 1999ல் அவுஸ்திரேலியாவுடன் மோதிய பரபரப்பான ஆட்டம் ‘டை'யில் முடிந்தது. பின்னர் சூப்பர் சிக்சில் தோற்று வெளியேறியது.
நடப்பு உலகக்கிண்ணத் தொடரில் முற்றிலும் மாறுபட்ட அணியாக தென் ஆப்பிரிக்கா வலம் வருகிறது. டிவில்லியர்ஸின் தலைமை அந்த அணிக்கு கூடுதல் பலமாக இருக்கிறது.
அணித்தலைவர் டிவில்லியர்ஸ் தவிர அம்லா, டுபிளசி டுமினி, மில்லர், ரச்சவ் போன்ற மிரட்டல் துடுப்பாட்டக்காரர்களும் நியூசிலாந்து அணிக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கின்றனர்.
ஸ்டெய்ன், மோர்க்கல், பிலாண்டர், அப்பாட், இம்ரான் தாகீர் ஆகிய சிறந்த பந்துவீச்சாளர்கள் அந்த அணியில் உள்ளனர். இம்ரான் தாகீரின் சுழற்பந்து வீச்சு அந்த அணிக்கு பக்கபலமாகவே உள்ளது.
பலம் வாய்ந்த இவ்விரு அணிகள் முதன்முறையாக இறுதிப் போட்டியில் நுழைய கடுமையாக போராடுவார்கள் என்பதால் இந்த மோதல் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment