↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

உலக கோப்பை நாக்-அவுட் போட்டிகளில் எதிலுமே வெற்றியே பெறாமல் அதிர்ச்சி தோல்வியடையும் வழக்கம் கொண்ட தென் ஆப்பிரிக்கா, நடப்பு உலக கோப்பையில், இலங்கைக்கு எதிராக, புதன்கிழமை நடைபெற உள்ள காலிறுதி (நாக்அவுட்) போட்டியில், அந்த அவப்பெயரை நீக்க துடித்துக் கொண்டுள்ளது. டி வில்லியர்ஸ், ஆம்லா, மில்லர் போன்ற பேட்ஸ்மேன்களும், ஸ்டெயின், மோர்கல் போன்ற முன்னணி பவுலர்களும், தென் ஆப்பிரிக்காவின் இந்த கனவுக்கு வடிவம் கொடுப்பார்களா என்று ரசிகர்கள் எதிர்பார்க்க தொடங்கியுள்ளனர்.

நடப்பு உலக கோப்பையில் லீக் சுற்றுகளில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளிடம் தோற்ற தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, யு.ஏ.இ போன்ற நாடுகளுக்கு எதிராக இமாலய வெற்றிகளை பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.

ஏ பிரிவில் இடம் பிடித்த இலங்கையும், நியூசிலாந்து மற்றும், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிடம் மட்டும் தோல்வியடைந்து, பிற நாடுகளுடன் அபாரமாக வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை நடுவேயான காலிறுதி நாக்-அவுட் போட்டி சிட்னி மைதானத்தில், இந்திய நேரப்படி நாளை காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ், ஆம்லா, மில்லர், டுமினி போன்ற அதிரடி வீரர்கள், எத்தகைய பந்து வீச்சையும் எதிர்கொள்ள தயாராக உள்ளனர். பந்து வீச்சில், ஸ்டெயின், மோர்க்கல், இம்ரான் தாகிர் ஆகியோர் அந்த அணிக்கு பலம் சேர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக குறைந்த பந்துகளில் 150 ரன்களை எடுத்து டி வில்லியர்ஸ் சாதனை படைத்த மைதானம்தான் சிட்னி என்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும்.


இலங்கை அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சங்ககாரா எதிரணிகளை அச்சுறுத்தும் ஃபார்மில் உள்ளார். தொடர்ந்து 4 சதங்கள் அடித்ததன் மூலம், ஒருநாள் போட்டி வரலாற்றில் அடுத்தடுத்து, நாற்சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 6 போட்டிகளில் 496 ரன்களை குவித்து நடப்பு உலக கோப்பையில் அதிக ரன் குவித்த வீரர்களில் முதலிடத்திலுள்ளார். ஓப்பனிங் பேட்ஸ்மேன் தில்ஷனும் அடித்து நொறுக்கி வருகிறார்.

தென் ஆப்பிரிக்காவிடம் எல்லா உலக கோப்பைகளிலும் கண்டுவரும் ஒரு பிரச்சினை என்னவென்றால், ஆரம்பத்தில் அசத்திவிட்டு, நடுவில் கோட்டைவிடுவதுதான். தென் ஆப்பிரிக்கா 1991ல் உலக கிரிக்கெட் அரங்கத்தில் பிரவேசிக்க மீண்டும் அனுமதிக்கப்பட்டது. 1992 உலக கோப்பை தொடங்கி கடந்த 2011 உலக கோப்பை வரை, நாக் அவுட் சுற்றில்தான், நாக்கு தள்ளி மூர்ச்சையாகி விழுந்து வருகிறது தென் ஆப்பிரிக்கா.


1992 உலக கோப்பையில், காலிறுதி நாக்அவுட் சுற்றாக இல்லை. எனவே அதை தாண்டி, நாக்-அவுட் சுற்றான அரை இறுதிக்கு வந்த தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்தை எதிர்கொண்டது. ஆனால், மழை காரணமாக மாற்றப்பட்ட விதிகளின் படி 1 பந்துக்கு 22 ரன்கள் அடிக்க வேண்டும் என்று சுத்த அபத்தமாக அறிவிக்கப்பட்டது. இதனால் அதிருஷ்டத்தை நொந்தபடி தோற்று வெளியேறியது தென் ஆப்பிரிக்கா.

1999 உலக கோப்பையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரை இறுதி போட்டியில் ஆலன் டொனால்டின் தேவையில்லாத ஓட்டத்தால், ஆட்டம் டையில் முடிந்தது. ஏற்கனவே லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதை கணக்கிட்டு அந்த அணியே பைனலுக்கு சென்றது. தென் ஆப்பிரிக்காவின் மிக சோகமான தோல்வியாக அது பதிவானது.


சொந்த மண்ணில் நடந்த 2003 உலக கோப்பையில், மழை காரணமாக ஆட்ட விதி மாற்றப்பட்ட போட்டியில், விதியை சரியாக கணிக்காமல் ஆடி தோற்றது தென் ஆப்பிரிக்கா.

2011ல் காலிறுதி போட்டியின்போது நியூசிலாந்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது தென் ஆப்பிரிக்கா. இதுபோல முக்கிய தருணங்களில் காலை வாரி விடுவது தென் ஆப்பிரிக்காவின் வாடிக்கை. ஒவ்வொரு முறையும், கோப்பையை வெல்லும் அணியாக கணிக்கப்படுவதும், ஆனால் நடுக்கத்தின் காரணமாக முக்கிய போட்டிகளில் தோற்பதும் தென் ஆப்பிரிக்காவுக்கு கை வந்த கலை.

அதேநேரம், இலங்கை அணி, முக்கிய கட்டங்களில் சிறப்பாக ஆடக்கூடியது. டி20 சாம்பியனாகியுள்ள இலங்கை, கடந்த இரு உலக கோப்பைகளின்போதும், இறுதி போட்டிவரை வந்துள்ளது. 1996ல் உலக சாம்பியனாகவும் ஆகியுள்ளது. எனவே இவ்விரு அணிகளுக்கு நடுவேயான போட்டி மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

தென் ஆப்பிரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ் கூறுகையில், "தென் ஆப்பிரிக்கா இம்முறை வரலாற்றை மாற்றி எழுதப்போகிறது. நாங்கள் அதிர்ச்சி தோல்வி அடைபவர்களாக இல்லாமல், வெற்றி பெறும் அணியாக வலம் வரப்போகிறோம். இதற்கு தென் ஆப்பிரிக்காவின் அனைத்து ஆட்டக்காரர்களும் உதவிகரமாக இருப்பார்கள்" என்று நம்பிக்கை தெரிவித்தார். நம்பிக்கை... அதானே எல்லாம்!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top