தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான காலிறுதிப் போட்டி சங்கக்காரவின் கடைசி ஒருநாள் போட்டியாக அமைந்தது. ஆனாலும், டெஸ்ட் போட்டிகளில் அவரது பங்களிப்பு சில காலங்கள் தொடரும் என்று அவரே கூறியுள்ளார்.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியுடன் அடைந்த தோல்வி தொடர்பாக இலங்கை அணியின் நட்சத்திர வீரர் சங்கக்காரா கூறுகையில், இலங்கை அணிக்காக கடந்த 16-17 ஆண்டுகளாக பல்வேறு விதங்களில் பங்களிப்பு செய்துள்ள மஹேல ஜெயவர்த்தனே இந்த உலகக்கிண்ணத்தில் சோபிக்கவில்லை. ஆனால் விளையாட்டில் இதெல்லாம் சகஜம்.
தேவதைக் கதைபோன்ற முடிவுகள் எப்போதும் சாத்தியமில்லை. உலகக்கிண்ணத்தில் எவ்வளவு உச்சத்தில் முடிய வேண்டும் என்று நினைக்கிறோமோ அது நடக்காது, அது நடக்கவில்லை. அதற்காக ஏமாற்றத்துடன் செல்ல வேண்டிய அவசியமில்லை.
எங்கள் இருவரிடையே நல்ல நட்பு இருந்தது. பகைமை என்பது அறவே இல்லை. நான் அணியில் நுழையும் போது மஹேல ஏற்கெனவே 2 ஆண்டுகள் அணியில் இருந்தார்.
துணைத்தலைவராகவும் அவர் இருந்தார். எங்கள் இருவருக்கும் ஒரே வயது. இதனாலேயே வெகு விரைவில் நண்பர்களானோம்.
களத்தில் இருவரும் சேர்ந்து துடுப்பாட்டம் செய்யும் போது, அவர் எப்போதும் ஆதிக்கம் செலுத்த விரும்புவார். நான் அவருடன் இன்னிங்ஸை நகர்த்திச் செல்பவனாக திகழ்ந்தேன்.
அவர் அதிரடியாக ஓட்டங்கள் குவிப்பில் செல்லும் போது நான் அடக்கி வாசிப்பேன். அவருடன் சேர்ந்து விளையாடுவது எனக்கு மிகப்பெரிய அனுபவமே.
இலங்கை அணி சிறந்த கைகளில் உள்ளது. அஞ்சலோ மேத்யூஸ் தலைமைத்துவத்தில் சிறப்பாகச் செயலாற்றி வருகிறார். இன்னும் இவர்கள் கற்றுக் கொள்வார்கள், இலங்கைக்காக மேலும் பங்களிப்பு செய்வார்கள் என்று நினைக்கும் போது உற்சாகமாகவே உள்ளது.
தோல்வியடைந்தது ஏமாற்றமே. குறிப்பாக காலிறுதியில் தோல்வி தழுவியது. ஆனால் தென் ஆப்பிரிக்கா போன்ற ஒர் அணியுடன் வெற்றி பெற சிறப்பாக ஆட வேண்டும் என்பதே உண்மை.
என்னுடன் விளையாடியதையும், எனக்கு எதிராக விளையாடியதையும் மகிழ்ச்சியான தருணங்களாக யாராவது கூறினால் நான் அதிக மகிழ்ச்சியடைவேன்.
எவ்வளவோ பெரிய வீரர்கள் ஓய்வு பெற்று விட்டனர். ஆனால் ஆட்டம் தொடர்ந்து போய்க்கொண்டு தான் இருக்கிறது. ரசிகர்கள் எப்போதும் மிகை உணர்ச்சிகளுக்கு ஆட்படக்கூடாது என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment