↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

உலக கோப்பையில், வங்கதேசத்துக்கு எதிராக காலிறுதி போட்டியில், இந்தியா 109 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை பெற்று அரையிறுதிக்குள் பிரவேசித்தது. இதன் மூலம், நடப்பு உலக கோப்பையில் தொடர்ந்து 7வது வெற்றியை பதிவு செய்த இந்தியா, ஆறாவது முறையாக உலக கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. 

உலக கோப்பை காலிறுதி போட்டியில் இந்தியா-வங்கதேசம் இன்று மெல்போர்ன் மைதானத்தில் மோதின. முதலில் பேட் செய்த இந்தியா ரோகித் ஷர்மா சதம் உதவியுடன் 302 ரன்கள் குவித்தது. இதையடுத்து பேட் செய்ய வந்த வங்கதேசம் பதற்றமின்றி சேஸிங்கை தொடங்கியது.

வங்கதேசம் 6.3 ஓவர்களில் 33 ரன்கள் எடுத்திருந்தபோது, உமேஷ் யாதவ் பந்து வீச்சில் டோணியிடம் கேட்ச் கொடுத்து தமிம் இக்பால் 25 ரன்களில் வெளியேறினார். அந்த அதிர்ச்சியில் இருந்து வங்கதேசம் மீள்வதற்குள், அதற்கு அடுந்த பந்திலேயே, தேவையில்லாமல் ஓடி, ஜடேஜாவால் இம்ருல் கையேஸ் ரன் அவுட் செய்யப்பட்டார். அவர் 5 ரன்களுடன் நடையை கட்டினார்.

அதன்பிறகு அந்த அணியின் சரிவை தடுக்க முடியவில்லை. சவுமியா சர்க்கார் 29 ரன்களும், மஹ்மதுல்லா 21 ரன்களும் எடுத்த நிலையில், அடுத்தடுத்து முகமது ஷமி பந்து வீச்சில் வெளியேறினர். சகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம் போன்ற, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பேட்ஸ்மேன்களும், முறையே 10 மற்றும் 27 ரன்களில் நடையை கட்டினர். அந்த அணியிலே அதிகபட்ச ரன் என்றால், அது நாசிர் ஹொசைன் எடுத்த 35 ரன்கள்தான். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த நிலையில், ரன் ரேட்டை உயர்த்த முடியாமல் வங்கதேசம் திணறியது.

45வது ஓவரில் வங்கதேசம், 193 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதனால், இந்தியா 109 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. முன்னதாக, டாசில் வெற்றி பெற்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்த இந்தியாவுக்கு ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் நல்ல தொடக்கம் தந்தனர். இந்த ஜோடி 75 ரன்கள் சேர்த்திருந்தபோது, தவான் ஸ்டம்பிங்காகி அவுட் ஆனார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம், விராட் கோஹ்லி வெறும் 3 ரன்களில் நடையை கட்டினார். சற்று நம்பிக்கையளித்த ரஹானேவும் மோசமான ஒரு ஷாட் மூலம் 19 ரன்களில் அவுட் ஆனார்.


28 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களை மட்டுமே இந்தியா சேர்த்திருந்தது. எனவே மேற்கொண்டு விக்கெட்டை பறிகொடுத்து விடக்கூடாது என்பதற்காக இந்திய வீரர்கள் ரோகித் மற்றும் ரெய்னா இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். ஆனால், ஓவர்கள் முடிவடைய இருந்த நிலையில், ரோகித் ஷர்மா மற்றும், ரெய்னா அதிரடியை ஆரம்பித்தனர். இதற்கு வசதியாக 35வது ஓவரில் பேட்டிங் பவர் பிளேயை இந்தியா வாங்கியது.

நன்கு ஆடிக் கொண்டிருந்த சுரேஷ் ரெய்னா 65 ரன்கள் எடுத்திருந்தபோது மோர்டசா பந்து வீச்சில் முஸ்பிகுர் ரஹிமிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதைத் தொடர்ந்து டோணி களமிறங்கினார். ஆனால் 11 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் டோணி தஸ்கின் அகமது பந்து வீச்சில் நாசிர் ஹொசைனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். முன்னதாக 126 பந்துகளில், 137 ரன்கள் குவித்த ரோகித் ஷர்மாவும், அதே பவுலரால் கிளீன் பௌல்ட் செய்யப்பட்டார்.

ஆனால் இறுதி கட்டத்தில் ரவீந்திர ஜடேஜா காட்டிய அதிரடியால் இந்திய அணி 300 ரன்களை தாண்டியது. 50 ஓவர்கள் முடிவில், இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் எடுத்தது. 10 பந்துகளில் 23 ரன்களுடன் ஜடேஜாவும், 3 ரன்களுடன் அஸ்வினும் களத்தில் நின்றனர். அந்த அணியின் தஸ்கின் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருது, ரோகித் ஷர்மாவுக்கு கிடைத்தது. 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top