↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

இந்திய புராணங்களில் வரும் கதாபாத்திரங்களில் ஒன்றான மண்டோதரியைப் பற்றிய பல்வேறு சம்பவங்களைக் கேள்விப்பட்டிருப்போம். மண்டோதரி அழகானவள், தெய்வீக சக்தி கொண்டவள் மற்றும் மிகவும் ஒழுக்கமுள்ளவள் என்று அனைத்து குறிப்புகளிலும் அவர் குறிப்பிடப்பட்டுள்ளார். பாவங்களைப் போக்கும் சக்தியைக் கொண்ட பஞ்ச கன்னிகைகளில் ஒருவராகவும் இவர் கருதப்படுகிறார். 

பதிவிரதத்திற்காக பெயர் பெற்ற மண்டோதரி, தன்னுடைய கணவன் மேல் மிகவும் பக்தி கொண்டவளாக சிறப்பிக்கப்படுகிறார். இவருடைய பதிவிரத்தின் காரணமாகத் தான் அசுர குணம் படைத்தவராக கருதப்பட்டும், பல்வேறு தவறான செயல்களைச் செய்தவராக கருதப்பட்டும் வரும் இராவணனின் தீஞ்செயல்களுக்கான தண்டணைகள் அல்லது பாவங்கள் சுத்தம் செய்யப்பட்டன.

மண்டோதரி அழகியாகவும், செல்வ வளம் பொருந்தியவளாகவும் வளர்க்கப்பட்டாள். மிகவும் திறமை பொருந்திய பொறியியல் கலைஞராக விளங்கிய மாயாசுரனின் இருப்பிடத்திற்கு ஒருமுறை வந்திருந்த இராவணன், அவரிடம் தனக்காக ஒரு நகரத்தை நிர்மாணிக்குமாறு கேட்டுக் கொண்டான். இந்த நேரத்தில் தான் இராவணன் மண்டோதரியைக் கண்டதும் காதல் கொண்டார். இராவணன், மண்டோதரியின் தந்தையிடம் தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தினார், மாயாசுரரும் அதற்கு மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்தார். வேத முறைப்படி இராவணன்- மண்டோதரி திருமணம் நடைபெற்றது. இந்த வகையில் சிவபெருமானின் அருளும் இராவணனக்கு கிடைக்கப் பெற்றது. இந்த சூழ்நிலையில் தான் இராவணன் வீரமிக்க அரசனாக மட்டுமல்லாமல், சிறந்த சிவ பக்தராகவும் பரிமளிக்கத் துவங்கினார். தங்கதிலான மிகவும் அழகிய நகரத்தை தன்னுடைய மருமகனுக்காக உருவாக்கி பரிசளித்தார் மயூராசுரர்.


மண்டோதரி-இராவணன் தம்பதிகளுக்கு மேகநாதன், அதிகயா மற்றும் அக்சயகுமாரர் ஆகிய மூன்று மகன்கள் பிறந்தனர். மண்டோதரி சிறந்த மற்றும் பதி பக்தியுள்ள மனைவியாக இருந்தாள். இராவணனிடம் கர்வம் மற்றும் மூர்க்க குணம் போன்ற சில தீய குணங்கள் இருந்தன. அந்நாட்களில் இருந்த வழக்கப்படி, இராவணனுக்கு மண்டோதரியைத் தவிர, வேறு சில மனைவிகளும் இருந்தார்கள்.

தன்னுடைய மனைவி அல்லாத ஒரு பெண்ணின் மேல் இராவணன் மையல் கொண்டான் - அந்த பெண்ணின் பெயர் வேதவதி. இந்த விஷயங்களை எல்லாம் மண்டோதரி தெரிந்து கொண்டிருந்தாலும், தன்னுடைய கணவனை நல்வழிப்படுத்த அறிவுரை கூறினாள். மேலும் இராவணனுக்கு உண்மையானவளாகவும், நம்பிக்கைக்கு உரியவளாகவும் இருந்தாள். இராவணனை நல்ல வழியை நோக்கி, நீதியை நோக்கி வழிநடத்திச் செல்ல மண்டோதரி முயற்சித்தாள். நவகிரகங்களை துன்புறுத்த வேண்டாம் என்றும் மற்றும் வேதவதியின் மேல் மையல் கொள்ள வேண்டாம் என்றும் அவள் அறிவுரை வழங்கினாள். இந்த வேதவதி தான் சீதா தேவியாய் மறுபிறப்பெடுத்து, இராவணனின் அழிவுக்குக் காரணமாக இருந்தாள். இராவணன் மண்டோதரியின் அறிவுரையைக் கேட்கவில்லை.

விஷ்ணுவின் அவதாரமான இராம பிரான் அயோத்தியிலிருந்து வனவாசம் சென்றிருந்த வேளையில், அவனுடைய மனைவியான சீதா தேவியை கடத்தினான் இராவணன். மண்டோதரி சீதா தேவியை உடனடியாக இராமனிடம் திருப்பி அனுப்புமாறு கேட்டுக் கொண்டார் - ஆனால் இந்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. இந்த மையல் இராவணனின் அழிவைக் கொண்டு வரும் என்று மண்டோதரி நன்கு அறிந்திருந்தாள்.


வால்மீகியின் இராமாயணத்தில் மண்டோதரி மிகவும் அழகான பெண் என்று குறிப்பிடப்பட்டுள்ளார். இராமபக்தரான அனுமான் சீதா தேவியைத் தேடி இலங்கைக்கு வந்த போது, இராவணனின் அந்தப்புரத்தில் பார்த்த மண்டோதரியை சீதா தேவி என தவறாக எண்ணிக் கொண்டார். ஆனால், அனுமன் சீதா தேவியை கண்டறிந்த வேளையில், இராவணன் சீதா தேவியிடம் தன்னை மணம் புரிந்து கொள்ளாவிடில், கொன்று விடுவதாக மிரட்டிக் கொண்டிருந்தான். சீதா தேவி மறுத்த போது, சீதா தேவியின் தலையை துண்டிப்பதற்காக தன்னுடைய வாளை ஓங்கினார் இராவணன். ஆனால், மண்டோதரி இராவணனின் கையைப் பிடித்து அந்த பாவச்செயலைத் தடுத்து நிறுத்தினாள்.

ஒரு பெண்ணைக் கொலை செய்வதென்பது கொடும் பாவச் செயல், அதனால் சீதா தேவியை இராவணன் கொல்லக் கூடாது என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டாள் மண்டோதரி. மேலும், இராவணனை அவருடைய பிற மனைவியரிடம் சென்று திருப்திப்படுத்திக் கொள்ளுமாறும், சீதா தேவியை மணந்து கொள்ளும் எண்ணத்தை மறந்து விடுமாறும் கேட்டுக் கொண்டாள். மண்டோதரியை விட சீதா தேவி அழகில் குறைந்தவராக இருந்தாலும், இராமன் மீது சீதை கொண்டிருந்த பக்தியை மிகவும் மதித்திருந்தாள் மண்டோதரி. மேலும் சீதையை சாக்கி மற்றும் ரோகிணி ஆகிய கடவுளர்களுடன் ஒப்பிட்டாள் மண்டோதரி.


சீதையை அமைதியான முறையில் திரும்பப் பெற செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்த பின்னர், இராமன் இராவணனுடைய இலங்கையின் மேல் போர் தொடுப்பதை அறிவித்தார். இராமனுடனான இறுதிப் போருக்கு முன்னரும் கூட மண்டோதரி இராவணனிடம் ஒருமுறை கேட்டுக் கொண்டாள், ஆனால் அந்த முயற்சியும் தோல்வியடைந்தது. இறுதியாக, தன்னுடைய கணவனுக்கு உண்மையுள்ள மனைவியாக இறுதிக் கட்டப் போரில் இராவணனுக்குத் துணை நின்றாள். மேலும், இந்திரனை வென்று இந்திரஜித் என்ற பட்டத்துடன் இருந்த, தன் மகன் மேகநாதனையும் கூட இராமருடன் சண்டையிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாள்.

இராவணனுடைய அனைத்து மகன்களும், வீரர்களும் போரில் இறந்து விட்ட பின்னர், தன்னுடைய வெற்றியை உறுதி செய்யும் படியாக ஒரு அக்னி யாகத்தை நடத்த விரும்பினார். அனுமனையும், வானர இளவரசரான அங்கதனையும் கொண்ட வானர வீரர்களின் படைகளை அனுப்பி அந்த யாகத்தை இராமர் கலைக்க விரும்பினார். இராவணனின் அரண்மனையில் பெரும் சேதத்தை வானரங்கள் ஏற்படுத்தினாலும், இராவணன் தன்னுடைய யாகத்தை தொடர்ந்து செய்து வந்தார். இந்நேரத்தில் அங்கதன் மண்டோதரியின் தலைமுடியைப் பற்றிய படி இராவணன் முன் இழுத்து வந்தார். மண்டோதரி தன்னைக் காப்பாற்றும் படியும், இதே செயலைத் தான் இராவணன் இராமனின் மனைவிக்கு செய்து கொண்டிருக்கிறான் என்றும் நினைவுபடுத்தினாள். இதனால் கோபமுற்ற இராவணன் தன்னுடைய யாகத்தை நிறுத்தி விட்டு, அங்கதனுடன் சண்டையிடுவதற்காக கத்தியுடன் பாய்ந்தார். எனினும், வந்த காரியத்தை முடித்து விட்ட திருப்தியுடன், மண்டோதரியை விட்டு விட்டு அங்கதன் தப்பிச் சென்றார். மண்டோதரி மீண்டும் சீதையை இராமனிடம் சேர்ப்பிக்கும் படி கேட்டர், ஆனால் இராவணன் மறுத்து விட்டார்.


வால்மீகி இராமாயணத்தில் மண்டோதரியை சீதையின் தாயாக எவ்விடத்திலும் குறிப்பிடவில்லை, பின்னர் வந்த இராமாயண படைப்புகளில் மண்டோதரியை சீதையின் தாயாகவோ அல்லது சீதையின் பிறப்பிற்கு காரணமான பெண்ணாகவோ குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இராவணனால் கொல்லப்பட்ட யோனிவர்களின் இரத்தத்தை ஒரு பெரிய பானையில் சேகரித்து வைத்திருந்தார்கள். இந்நேரத்தில் கிரிட்சமாடா என்ற முனிவர் இலட்சுமி தேவி தன்னுடைய மகளாகப் பிறக்க வேண்டும் என்ற வரம் வேண்டி தவமிருக்கத் தொடங்கினார். அவர் தர்ப்பைப் புல்லின் பாலை, தன்னுடைய மந்திரங்களால் சுத்திகரித்து வைத்திருந்தார். எனவே, இலட்சுமி தேவி அதில் வாழ்ந்திடுவார் என்பது முனிவரின் எண்ணம். இந்த பாலை தன்னுடைய இரத்தம் நிறைந்த பானைக்குள் ஊற்றி விட்டார் இராவணன். இராவணனின் இந்த அடாத செயலைக் கண்டு மனம் வெறுத்த மண்டோதரி, மிகவும் கொடிய விஷமாகக் கருதப்பட்ட அந்த இரத்தத்தைக் குடித்து தற்கொலை செய்து கொள்ள விரும்பினால். அதைக் குடித்த மண்டோதரி, மரணமடைவதற்குப் பதிலாக, கிரிட்சமாட முனிவரின் தவ வலிமையால் இலட்சுமி தேவியின் அவதாரத்தைப் குழந்தையாகப் பெற்றார். இந்த குழந்தையை குருஷேத்திரத்திற்கு அருகில் அவர் புதைத்து வைத்தார். அந்த பெண் குழந்தையைக் கண்டெடுத்த ஜனகர் அவளுக்கு சீதை என்று பெயரிட்டார்.

மண்டோதரியை மணந்து கொள்ள வேண்டும் என்று மாயாசுரரிடம் இராவணன் கேட்டுக் கொண்ட போது, அவருடைய ஜாதக கணிப்பின் படி, இந்த தம்பதிகளுக்குப் பிறக்கும் முதல் குழந்தை இராவணனின் வம்சத்தை அழித்து விடும் மற்றும் அந்த குழந்தையைக் கொன்று விட வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். மாயாசுரரின் அறிவுரையை கருத்தில் கொள்ளாத இராவணன், மண்டோதரிக்குப் பிறந்த முதல் குழந்தையை ஜனகரின் நகருக்கு அருகில் ஒரு கூடையில் வைத்து புதைத்து விட்டார். வாசுதேவஹிந்தி, உத்தர புராணம் மற்றும் பிற சமண வகை இராமாயணங்களில் சீதையானவள் இராவணனுக்கும், மண்டோதரிக்கும் பிறந்த குழந்தையாகவே குறிப்பிடப்பட்டுள்ளார். இராவணனின் வம்சம் சீதையினால் அழிந்து விடும் என்று ஜோதிடர்கள் குறிப்பிட்டதால் தான், தன்னுடைய மகளான சீதையை இராவணன் விட்டு விட்டான் என்றும் சொல்லப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top