9வது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2007ம் ஆண்டு மார்ச் 13ம் திகதி முதல் ஏப்ரல் 28ம் திகதி வரை மேற்கிந்திய தீவுகளில் முதல் முறையாக நடைபெற்றது.
ஒவ்வொரு அணிகளும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெறும்.
சூப்பர்-8 சுற்றில் தாவிய கத்துக்குட்டி அணிகள்
லீக் முடிவில் எதிர்பாராத விதமாக முன்னாள் சம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான் வெளியேற, அவுஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகளுடன் அனுபவம் இல்லாத வங்கதேசம் மற்றும் அயர்லாந்து அணிகள் சூப்பர்-8 சுற்றுக்குள் நுழைந்தன.
இந்த சுற்றிலும் ஒரு சில திருப்பங்கள் இருந்தன. வங்கதேசம் 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்தது. இருப்பினும் இதனால் தென்ஆப்பிரிக்காவுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
அரையிறுதியில் அசத்தல் அணிகள்
சூப்பர்-8 சுற்றில் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றிகளை அள்ளிய அவுஸ்திரேலியா (14 புள்ளி), இலங்கை (10 புள்ளி), நியூசிலாந்து (10 புள்ளி), தென் ஆப்பிரிக்கா (8 புள்ளி) ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
அரையிறுதி ஆட்டங்களில் அவுஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவையும்,, இலங்கை அணி 81 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தையும் வீழ்த்தின.
வரலாறு படைத்த அவுஸ்திரேலியா
பிரிட்ஜ்டவுனில் அவுஸ்திரேலியா- இலங்கை இடையிலான இறுதி ஆட்டம் நடந்தது. மழையால் 38 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த மோதலில் முதலில் ஆடிய செய்த அவுஸ்திரேலியா 38 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 281 ஓட்டங்கள் குவித்தது.
தொடக்க ஆட்டக்காரர் கில்கிறிஸ்ட் அதிரடியாக 104 பந்துகளில் 13 பவுண்டரி, 6 சிக்சருடன் 149 ஓட்டங்கள் விளாசினார்.
பின்னர் இலங்கை அணி ஆடிய போது ஜெயசூர்யா (63 ஓட்டங்கள்), சங்கக்காரா (54 ஓட்டங்கள்) களத்தில் நின்ற வரை ஓரளவு நல்ல நிலையில் இருந்தது. அவர்கள் வெளியேற ஆட்டத்தை அவுஸ்திரேலியா தங்கள் பக்கம் முழுமையாக ஆக்கிரமித்து கொண்டது.
மீண்டும் மழை குறுக்கிட்டதால் இலங்கை 36 ஓவர்களில் 269 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.
அவுஸ்திரேலியா வெற்றியை நோக்கி பயணித்த சமயத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது 33 ஓவர் முடிந்திருந்தது.
‘டக்வொர்த்-லீவிஸ்’ விதிப்படி இலங்கை அணி 37 ஓட்டங்கள் பின்தங்கி இருந்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டு நடுவர்கள் பெவிலியன் திரும்பியதால், வெற்றி கொண்டாட்டத்தில் அவுஸ்திரேலியர்கள் திளைத்தனர்.
ஆனால் நடுவர்கள் வேண்டுமென்றால் ஆட்டத்தை நாளை தொடரலாம் என்று யோசனை கூறியனர்.
இதைத் தொடர்ந்து இரண்டு தரப்பு அணித்தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்னர் அன்றே ஆட்டத்தை தொடர இலங்கை அணித்தலைவர் மஹேலா ஜெயவர்த்தனே சம்மதித்தார்.
வெளிச்சம் இல்லாததால் எஞ்சிய 3 ஓவர்களுக்கும் சுழற்பந்து வீச்சாளரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து கடைசி 3 ஓவர்களும் ஏறக்குறைய இருளில் தான் நடந்தது. இலங்கை அணியால் 36 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 215 ஓட்டங்களே எடுக்க முடிந்தது.
அவுஸ்திரேலியா 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வாகை சூடி 4வது முறையாக உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது. இதில் 1999, 2003, 2007 என்று தொடர்ச்சியாக ஹாட்ரிக் முறையில் வென்று வரலாற்று சாதனை படைத்தது அவுஸ்திரேலியா.
0 comments:
Post a Comment