இந்த ஆண்டின் ஸ்பெஷல் என்ன?
இளைய தளபதி விஜய் நடிக்கும் 'புலி' படத்துக்கு நான்தான் இசையமைக்கிறேன். இது இந்த ஆண்டின் துவக்கத்திலேயே எனக்குக்கிடைத்த சந்தோஷம். பெரிய ஹீரோக்கள் படங்களில் பெரும்பாலும் நடனப்பாடல்களுக்குத் தான் முக்கியத்துவம் இருக்கும். அதில் விஜய் படம் என்றால், துள்ளலும் துடிப்பும் அதிகமாக இருக்கும். அவரது படத்தில் இடம்பெறும் பாடல்கள் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடிக்கும் வகையில் அமைய வேண்டும் என்று விரும்புவார்.
எனக்கும் அந்த ஸ்டைல்தான் பிடிக்கும். அந்தவகையில் 'புலி' படத்துக்கு நான் இசையமைத்த முதல் பாடலைக் கேட்டதுமே ஒட்டுமொத்த யூனிட்டும் புல்லரித்துப் போய் உற்சாகத்தில் ஆடிவிட்டது.
'வில்லு' படத்துக்கு நான் இசையமைத்திருந்தபோதே, 'எனது படத்தில் எல்லாப் பாடல்களும் ஹிட்டாகிய பட்டியலில் இந்தப் படமும் சேரும்' என்று கட்டிப் பிடித்து வாழ்த்தினார். அதே வாழ்த்தை இந்தப் படத்திலும் பெறவேண்டும் என்பதற்காக பயம் கலந்த கவனத்துடன் இசையமைத்துக் கொண்டிருக்கிறேன்.
தெலுங்கில் நிறைய... தமிழில் கொஞ்சம்... - இது ஏன்?
திட்டமிட்டு அப்படி இசையமைப்பதில்லை. தெலுங்கில் அடுத்தடுத்து பெரிய படங்களில் பணியாற்றும் வாய்ப்புகள் அமைந்து விடுகின்றன. அந்தநேரத்தில் தமிழ்ப் படங்களுக்கு இசையமைக்கச் சொல்லிக் கேட்கும்போது, இயலாமல் போகிறது.
அப்படியிருந்தும் தமிழில் செலக்டிவாக இசையமைத்துக் கொண்டுதான் இருக்கிறேன். கடந்த ஆண்டில் அஜித் சாரின் 'வீரம்' படத்தில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. இனி தொடர்ந்து தமிழ்ப் படங்களில் எனது இசையைக் கேட்கலாம்.
தெலுங்குப்பட பிஸியிலும் வெளிநாட்டு இசைக்கச்சேரி எப்படி சாத்தியமானது?
அதற்கான எங்களது உழைப்பு ரொம்பப் பெரியது. புகழ்பெற்ற பெரிய அரங்குகளில் கச்சேரி நடத்தினோம். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கச்சேரி நடந்தது. பார்வையாளர்களின் ஆதரவு எங்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது. 65 வயது மூத்த பெண்மணி ஒருவர் என்னுடன் இணைந்து ஆடியதைப்பார்த்து அரங்கு கள் அதிர்ந்தன. வெளிநாடு தந்த உற்சாகத்தில் நம்நாட்டிலும் பெரிய அளவில் கச்சேரி நடத்த திட்டமிட்டுள்ளேன்.
மாண்டலின் ஸ்ரீனிவாஸ் எனது குருநாதர். சின்னவயதிலேயே அவரிடம் இசை கற்றேன். அமரராகிவிட்ட அந்த மேதைக்கு பிறந்தநாள் வருகின்ற பிப்ரவரி மாதத்தில், இசைக் கலைஞர்கள் ஒன்றிணைந்து, பெரிய அளவில் இசைக்காணிக்கை செய்ய உள்ளோம்.
0 comments:
Post a Comment