↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 35 ஆவது தேசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் தொடக்க விழா கடந்த சனிக்கிழமை கிரீன் பீல்ட் மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. தொடக்க விழா நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக பிரபல மலையாள நடிகர் மோகன்லாலின் 'லலிசம்' என்ற இசைக்குழுவின் நிகழ்ச்சி ஒன்றும் நடந்தது.

ஆனால், இவர்களின் நிகழ்ச்சி மிகவும் மோசமாக இருந்ததாக சமூக வலை தளங்களில் விமர்சனம் எழுந்தது. மோகன்லாலின் 'பிளாக்'கிலும் சமூக வலைதள கணக்கிலும் கடுமையான விமர்சனங்களை பலர் பதிவு செய்தனர்.

கேரள அரசிடமிருந்து நிகழ்ச்சிக்காக வாங்கிய தொகையை மோகன்லால் திரும்பக்கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சமூக வலைதளம் மூலம் எதிர்ப்பு போராட்டமும் நடைபெற்றது. இந்த சம்பவங்களால் மனவேதனை அடைந்ததாக மோகன்லால் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், “நான் நிகழ்ச்சிக்காக வாங்கிய ஒரு கோடியே 63 லட்சத்து 77 ஆயிரத்து 600 ரூபாய் பணத்தையும் அரசிடம் திரும்ப கொடுக்க தயாராக இருக்கிறேன். இது அனைத்து சர்ச்சைகளையும் முடிவுக்கு கொண்டுவரும் என நம்புகிறேன்” என்று தெரிவித்து கேரள அரசுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

தேசிய விளையாட்டு துவக்க விழாவில் 'லலிசம்' குழுவின் இசை நிகழ்ச்சியை நடத்த கடைசி நிமிடத்தில் அழைப்பு கிடைத்ததால் சில குறைகள் ஏற்பட்டதாக தனது ரசிகர்களுக்கு மோகன்லால் விளக்கம் அளித்திருந்தார். இருப்பினும், இந்த சர்ச்சை ஓய்ந்தபாடாக இல்லை.

இந்நிலையில், விமர்சனக் கணைகளை எதிர்கொண்டு வரும் சக நடிகர் மோகன்லாலுக்கு ஆதரவாக நடிகர் மம்முட்டி தற்போது குரல் எழுப்பியுள்ளார். கொச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மம்முட்டி, 'மோகன்லால் நமது கவுரவம். நல்ல நோக்கத்தின் அடிப்படையில் அந்த நிகழ்ச்சியை நடத்த மோகன்லால் முடிவு செய்தார்.

அவர் மீது எந்த அழுத்தத்தையும் திணிக்காதீர்கள். மன அமைதியுடன் அவரது பணிகளை தொடர வழிவிடுங்கள். அவரது நடிப்புத்திறனை வைத்து அவரை ஒரு நடிகராக ஏற்றுக் கொண்டுள்ளோம். அவரை விமர்சிப்பதை விடுத்து, ஆதரவு அளியுங்கள். சகக் கலைஞன் என்ற வகையில் மோகன்லாலுக்கு எனது ஆதரவை வெளிப்படுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top