↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பழம்பெரும் இயக்குநர் பாலச்சந்தர் மறைவுக்கு நாம் தமிழர் கட்சி இரங்கல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
 
அந்த அறிக்கையில் சீமான் கூறியிருப்பதாவது்:-
 
நாடகக்கலைஞராக கலையுலகில் அடியெடுத்து வைத்த அய்யா பாலச்சந்தர் அவர்கள் தமிழ்த் திரையுலகில் நிகழ்த்தாத புரட்சி இல்லை. சாதியமும் மதப்பிடிப்பும் பெரிதாக நிலவிய அந்த காலகட்டத்திலேயே யாரும் நினைத்துப் பார்க்க முடியாத புதுமைகளை நிகழ்த்திக்காட்டிய பெருமை அய்யா பாலச்சந்தர் அவர்களையே சேரும். 
 
நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியும் மிகப் பிரசித்தியான நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தியும் தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கியவர் அய்யா பாலச்சந்தர் அவர்கள்.
 
நாகேஷ், கமலஹாசன், ரஜினிகாந்த், சரிதா, சுஜாதா, மேஜர் சுந்தர்ராஜன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட எத்தனையோ கலைஞர்களைத் தமிழ்த் திரையுலகுக்கு அடையாளப்படுத்தி வைத்த கலையுலகக் கண்டுபிடிப்பாளர் அவர்.
 
தனது இறுதிக்காலம் வரை இளைய தலைமுறைக் கலைஞர்களுக்கும் மாற்று சிந்தனையோடு வந்தவர்களுக்கும் ஊக்கமளித்து உதவியது அய்யா அவர்களின் தனிச்சிறப்பு.
 
தனக்குப் பிடித்த திரைப்படங்களைப் பாராட்டி, தனது கைப்படவே கடிதம் எழுதி சம்பந்தப்பட்டவர்களை ஊக்கப்படுத்தும் நற்குணம் கொண்டவர் அய்யா பாலச்சந்தர் அவர்கள். 
 
விவசாயம், சாதியம், தமிழிசை, கலப்பு திருமணம், தேசப்பற்று என சகலவிதமான விதைப்புகளையும் மிகுந்த தைரியத்துடன் தனது படங்களில் செய்துகாட்டியவர்.
 
மிக உயரிய பால்கே விருதைப்பெற்ற அய்யா பாலச்சந்தர் அவர்கள் தனது இறுதிக்காலம் வரையிலும் தமிழ்த் திரையுலகின் ஆக்கபூர்வங்களுக்காகவே பாடுபட்டவர்.
 
உடல்நிலை நலிவுற்ற போதும் உத்தமவில்லன் படத்தில் நடித்த அவருடைய ஆர்வமும் பிடிப்பதும் வேறு எவருக்குமே கைவராதது. கலையுலகில் மட்டுமல்லாது தனிப்பட்ட வாழ்விலும் மிகுந்த கண்ணியத்துடன் வாழ்ந்த அந்த பெருமகனின் இழப்பு தமிழ்கூறும் நல்லுலகின் பேரிழப்பு. 
 
அய்யா அவர்களின் குடும்பத்துக்கும் கோடிக்கணக்கான அவர் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை நாம் தமிழர் கட்சி தெரிவித்துக்கொள்கிறது.
 
அய்யா அவர்களின் பெயரில் விருதுகளை அறிவித்து மத்திய மாநில அரசுகள் அந்த நிகரற்ற கலைஞரை கௌரவிக்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி கோரிக்கை வைக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top