கோவாவில் மிகப்பெரிய போதைப் பொருள் கடத்தல் மன்னனாக வலம்வருபவன் ஜோதி. இவன் பெயரைத் தவிர, அவன் யார்? எப்படி இருப்பான்? என்பது யாருக்குமே தெரியாது. அவனுடைய நெருங்கிய கூட்டாளிகளுக்குகூட ஜோதி பற்றிய எந்த விவரமும் தெரியாது.இந்நிலையில், ஜோதியை பிடிக்க மும்பை போலீஸ் ரகசிய ஆபரேஷன் ஒன்றை தொடங்குகிறது. அதில் ஆர்யாவும், அவரது நண்பரான ரமணாவும் முக்கிய அதிகாரிகளாக இருக்கின்றனர்.
ஜோதியை வெளிக்கொண்டு வர அவரது ஆட்களில் ஒருவராக மாறினால்தான் முடியும் என முடிவு செய்து, ஆர்யா தனது பெயரை மாற்றி ஜோதியின் கூட்டத்தில் அடியாளாக சேருகிறான்.அவர்களுடன் சேர்ந்து தன் திறமையை வெளிப்படுத்தி, ஜோதியின் வலதுகரமாக இருக்கும் மகாதேவனுக்கு நெருக்கமாகிறார்.மறுபுறம், ஜோதியை எப்படியாவது வெளியே கொண்டுவர வேண்டும் என்று ரமணா திட்டமிட்டுக் கொண்டே இருக்கிறார். ஆர்யாவும் பொறுமையாக அந்த டீமில் இருந்து எப்படி ஜோதியை வெளியே கொண்டு வருவது என்ற யோசனையில் இருக்கிறார்.
இந்நிலையில், இவர்கள் ஒரு ஆபரேஷனை செய்ய நினைக்கிறார்கள். அதாவது, போதை பொருள் ஏஜென்டாக இருக்கும் ஆஷிஷ் வித்யார்த்தியிடம் 1000 கிலோ போதைப் பொருளை விற்கக்கூறி, அவர்மூலம் ஜோதியை எப்படியாவது வெளியே கொண்டு வந்துவிடலாம் என முடிவு செய்கின்றனர்.அதன்படி, 1000 கிலோ போதை மருந்தை ஆஷிஷ் வித்யார்த்திடம் கொடுத்து விற்றுத்தரச் சொல்கிறார் ரமணா. ஆஷிஷ் வித்யார்த்தியும், ஜோதியின் ஆட்களிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஜோதி முன்னிலையில் இந்த டீலை முடித்துக் கொள்வதாக ஆஷிஷ் வித்யார்த்தி கூறுகிறார்.
அவர்களும் ஜோதியிடம் இந்த தகவலை தெரிவிக்கின்றனர். ஜோதியோ, முதலில் சாம்பிளாக 100 கிலோ போதை மருந்தை கொடுக்கச் சொல்லுமாறும், அது சரியாக நடந்தால், பிறகு நானே நேரில் வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று கூறுகிறான்.இதற்கிடையில், ஜோதி எப்படியாவது வெளியே வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில், அவனை கைது செய்ய ரமணாவின் உயரதிகாரியான அனுபமா குமார் தீவிர முயற்சியில் இறங்குகிறார். ஆனால், அதற்குள் முதலில் ஜோதிக்கு கொடுப்பதாக இருந்த 100 கிலோ போதை மருந்தையும் போலீஸ் கைப்பற்றிக் கொள்கிறது.
தனக்கு வந்த பெரிய ஆர்டர் கைநழுவிப் போனதே என்று ஜோதி மிகுந்த வேதனையடைகிறான். ரமணாதான் இந்த விஷயத்தை போலீசுக்கு காட்டிக் கொடுத்தான் என்று அவனைப் பிடித்து ஜோதியின் ஆட்களிடம் ஒப்படைக்கிறார் ஆஷிஷ் வித்யார்த்தி.மேலும், ஜோதியின் கூட்டத்திலேயே எதிரி ஒருவன் இருக்கிறான் என்றும் சொல்லிவிட்டு செல்கிறார்.இறுதியில், ஜோதியின் கூட்டத்தில் உள்ள ஆர்யாவை அவர்கள் கண்டுபிடித்தார்களா? அல்லது ஆர்யா, ஜோதியை வெளியே கொண்டு வந்து கைது செய்தாரா? என்பதே மீதிக்கதை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆர்யா, முழுநீள ஆக்ஷன் படத்தில் நடித்துள்ளார். தன்னைவிட்டு ஆக்ஷன் சென்றுவிடவில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் ஆர்யா. இறுக்கமான முகத்துடன் இருக்கும் போலீஸ் அதிகாரி வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.
ஹன்சிகாவுக்கு படத்தில் மிகப்பெரிய வேலை இல்லை. முழுநீள ஆக்ஷன் படமென்பதால் இவருடைய கதாபாத்திரம் படத்தில் வீணடிக்கப்பட்டிருக்கிறது. ஒருசில காட்சிகளே வந்தாலும் வசீகரிக்கும் முகத்துடன், நடிப்பையும் வெளிப்படுத்தி கவர்கிறார். படத்தின் வில்லனாக வரும் அஷுடோஸ் ராணா வித்தியாசமான நடிப்பால் கைதட்டல் பெறுகிறார். கோலிவுட்டில் மிரட்டலான வில்லனாக வருவார் என நம்பலாம்.
இவரைத்தவிர, படத்தில் ஏகப்பட்ட வில்லன்கள் இருக்கிறார்கள். அவரவர் தங்கள் கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள். ஆர்யாவின் நண்பராக வரும் ரமணாவுக்கும் அழுத்தமான கதாபாத்திரம். அதை அழகாக செய்திருக்கிறார்.தமிழ் சினிமாவுக்கு பழகிப்போன கேங்ஸ்டர் படத்தையே வித்தியாசமான கதைக்களத்தோடு படமாக்கியிருக்கிறார் இயக்குனர் மகிழ்திருமேனி. குடும்பத்தோடு சென்று ரசிக்க பொழுதுபோக்கு படமாக இல்லாமல், இளைஞர்களை கவர்கிற மாதிரியான தரமான படமாக தந்திருக்கிறார். படத்திற்கு தேவையான காட்சிகளை மட்டும் படமாக்கி, ரசிக்கும்படி செய்திருக்கிறார்.
படம் ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக செல்வதால் தமன் இசையில் வந்த பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. ஆனால், பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். பின்னணி இசையுடன் சதீஷ்குமாரின் ஒளிப்பதிவும் சேர்ந்து மிரட்டுகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.