↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் செய்து 287 ரன்களை குவித்தது. அந்த அணி கேப்டன் பிரெண்டன் டைலர் அதிரடியாக ஆடி 138 ரன்களை குவித்தார். இதையடுத்து பேட் செய்ய வந்த இந்தியா, 21 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்துடன் தனது துரத்தலை தொடங்கியது. 

இருப்பினும் கேப்டன் டோணி, ரெய்னா ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. குரூப் பி பிரிவில் இந்தியா தனது கடைசி லீக் போட்டியில் இன்று ஜிம்பாப்வேயை சந்தித்தது. ஆக்லாந்தில் தொடங்கிய இப்போட்டியில், டாசில் வெற்றி பெற்ற, இந்தியா, முதலில் ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர் சம்பு சிபாபா 7 ரன்களிலும், ஹேமில்டன் மசகட்சா 2 ரன்களிலும், முறையே, ஷமி மற்றும் யாதவ் பந்து வீச்சில் நடையை கட்டினர். சாலமன் மிரேவும் 9 ரன்களில் மோகித் ஷர்மா பந்து வீச்சில் அவுட் ஆனார்.

எனவே அந்த அணி 11 ஓவர்களில் 33 ரன்களுக்கு, 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும், சீன் வில்லியம்ஸ் மற்றும் பிரெண்டன் டைலர் ஜோடி சிறப்பாக ஆடி, அணியை சரிவில் இருந்து மீட்டது. 50 ரன்கள் எடுத்த நிலையில் வில்லியம்ஸ், அஸ்வின் பந்து வீச்சில் அவுட் ஆனார்.

37 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால் கடைசி கட்ட ஓவர்களில், டைலரும், எர்வினும் அதிரடி ஆட்டத்தை தொடங்கினர். இதனால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. சிக்சரும், பவுண்டரியுமாக விளாசி, டைலர் 110 பந்துகளில் 138 ரன்கள் குவித்து, மோகித் ஷர்மா பந்து வீச்சில், ஷிகர் தவானிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

இதையடுத்து 27 ரன்களில் எர்வினும், 28 ரன்களில் சிக்கந்தர் ராஜாவும் அவுட் ஆகினர். 48.5 ஓவர்களில் அந்த அணி 287 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையுமே இழந்தது. இதையடுத்து இந்தியாவுக்கு 288 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால், இந்தியாவுக்கு தொடக்கமே மோசமாக இருந்தது. ரோகித் ஷர்மா, 16 ரன்களிலும், ஷிகர் தவான் 4 ரன்களிலும், அவுட் ஆகி அதிர்ச்சியளித்தனர். ரோகித் ஷர்மா, பன்யங்காரா பந்து வீச்சில் சிக்கந்தர் ரசாவிடம் கேட்ச் கொடுத்தார். தவான், பன்யங்காரா பந்து வீச்சில் பௌல்ட் ஆனார்.

இந்தியா 6.5 ஓவர்களில், 21 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும், விராட் கோஹ்லி மற்றும் ரஹானே ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். ஆனால் அந்த முயற்சியும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ரஹானே 19 ரன்களில் அவுட் ஆன நிலையில், கோஹ்லி, 38 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். எனவே இந்தியா, 92 ரன்களுக்கே நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இருப்பினும் சுரேஷ் ரெய்னா மற்றும் கேப்டன் டோணி ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. முதலில் சற்று மெதுவாக ரன் கணக்கை தொடங்கிய இந்த ஜோடி, அதன்பிறகு பந்துகள் குறைவாக இருப்பதை கணக்கிட்டு, அடித்து நொறுக்க ஆரம்பித்தது. 48.4 ஓவர்களில் இந்திய அணி 288 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. ரெய்னா 110 ரன்களுடனும், டோணி 85 ரன்களுடனும் களத்தில் நின்றனர். டோணி வழக்கம்போல சிக்சருடன் வெற்றிக்கான ரன்னை எட்டச் செய்தார். சுரேஷ் ரெய்னா மேன் ஆப் தி மேட்ச்சை தட்டிச் சென்றார்.


இந்த வெற்றியின் மூலம், நடப்பு உலக கோப்பையில், தோல்வியே காணாத அணி என்ற பெருமையுடன், காலிறுதிக்குள் அடியெடுத்து வைக்கிறது இந்தியா. ஏ பிரிவில் நியூசிலாந்தும் இதே பெருமையுடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top