
நடிகர் சங்க தலைவர் தேர்தலில், சரத்குமாருக்கு எதிராக, இளைய தலைமுறை நடிகர்கள் சார்பில், நடிகர் சிவக்குமாரை போட்டியிட வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள குணச்சித்திர நடிகர் ஒருவரின் வீட்டில், இளைய நடிகர்கள் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர் என, கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன.
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் மே மாதம் நடக்க உள்ளது. தற்போது தலைவராக உள்ள நடிகர் சரத்குமார் எம்.எல்.ஏ.,வும், பொதுச்செயலர் பதவியில் உள்ள நடிகர் ராதாரவியும் மீண்டும், அதே பதவியில் நீடிக்க விரும்புகின்றனர். நடிகர்களை, நாய்கள் என, ராதாரவி, காளை ஆகியோர் ஏற்கனவே, திருச்சியில் நடந்த ஒரு விழாவில், விமர்சித்ததற்கு நடிகர்கள் நாசர், விஷால் கண்டனம் தெரிவித்தனர். ராதாரவி, காளை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என, சரத்குமாருக்கும், செயற்குழு உறுப்பினர்களுக்கும் நாசர் கடிதம் எழுதினார். அக்கடிதத்திற்கு, எட்டு நடிகர்கள் மட்டும் நாசருக்கு பதில் எழுதினர். அதில், சரத்குமார், ராதாரவிக்கு ஆதரவாக எழுதியுள்ளனர்.
குறிப்பாக, சிரிப்பு நடிகர் ஜெயமணி என்பவர், கார் விபத்தில் நாசர் மகன் சிக்கியபோது, அவரை காப்பாற்றும் நடவடிக்கையில் சரத்குமார் ஈடுப்பட்டுள்ளார் என்றும், நாசரின் மகனை, தேவையில்லாமல் தனிப்பட்ட முறையில் விமர்சித்தும் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தை கண்டு நாசரும், அவரது மனைவி ஜமீலாவும் மிகவும் வேதனை அடைந்தனர். இதனால், சரத்குமார் அணியை தோல்வி அடைய வைக்க வேண்டும் என்பதற்காக, நாசர் அணி சபதம் எடுத்துள்ளது.சமீபத்தில், கோடம்பாக்கத்தில் உள்ள குணச்சித்திர நடிகர் ஒருவரின் வீட்டில், நடிகர்கள் விஷால், கார்த்தி, பொன்வண்ணன் உள்ளிட்ட நடிகர்கள் சிலர் பங்கேற்று, நடிகர் சங்க தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர்.
அப்போது, சரத்குமாருக்கு போட்டியாக நடிகர் சிவக்குமாரை நிறுத்த வேண்டும் என்ற முடிவு அக்கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எந்த ஒரு அரசியல் சாயமும் இல்லாத நடுநிலை நடிகரான சிவகுமாரை, நடிகர் சங்கத்தின் தலைவராக்கவும், அவரை ஆதரிக்கவும், இளைய நடிகர்கள் தயாராகி உள்ளனர்.இதையடுத்து, திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல் போன்ற பகுதிகளில் சினிமா படப்பிடிப்புக்கு செல்லும் இளைய நடிகர்கள் சிலர், அந்தந்த மாவட்டத்தில் உள்ள நாடக நடிகர்களின் ஓட்டுகளை பெறும் வகையில் ஆதரவு திரட்ட ஆரம்பித்துள்ளனர்.
சரத்குமார், ராதாரவிக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். தனது, அதிரடி திரைப்படத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு ராதாரவி அணி தான் காரணம் என, நடிகர் மன்சூர்அலிகான் குற்றஞ்சாட்டியுள்ளார். எனவே, அவரும், ராதாரவிக்கு எதிராக திரளும் அணிக்கு ஆதரவாக செயல்படுவார் என தெரிய வருகிறது. இதற்கிடையில், நடிகர்கள் விஷால், ஆர்யா, கார்த்தி போன்ற இளைய நடிகர்களும் நட்சத்திர இரவு நடத்தி, அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து, திரைப்படம் தயாரித்து, நலிந்த நாடக நடிகர்களுக்கு நல உதவி செய்யும் திட்டம், நடிகர் சங்கத்திற்கு சொந்தமான கட்டடம் கட்டும் திட்டத்துடன் தேர்தல் களத்தில் குதிக்க உள்ளனர் என, கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.