இலங்கை சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான முக்கிய விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இலங்கையின் முந்தைய அரசாங்கம், சீனா அரசாங்கத்துடன் நெருக்கமாக இருந்து வந்ததுடன் புதிய அரசாங்கம் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை பேணி வருகிறது.
துறைமுக நகர அபிவிருத்தி திட்டம் உட்பட சீனா, இலங்கையில் மேற்கொண்ட அபிவிருத்தி பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இலங்கை நாட்டின் அபிவிருத்தி மற்றும் பொருளாதார உதவிகளை இந்தியாவிடம் கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட அமைச்சரவை அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர்.
அதேவேளை இந்திய பிரதமரும், இலங்கை ஜனாதிபதியும் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளனர்.
முன்னதாக இலங்கை சென்றடைந்த இந்திய பிரதமருக்கு, கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் இருக்கும் ஜனாதிபதி செயலக வளாகத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டதுடன் மரியாதை பீரங்கி வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன.
இதனையடுத்து இந்திய பிரதமருக்கு இலங்கை ஜனாதிபதி செங்கம்பள வரவேற்பளித்தார்.
இதேவேளை இன்று பிற்பகல் 3.15 மணிக்கு இந்தியப் பிரதமர் இலங்கைப் பாராளுமன்றில் உரையாற்றவுள்ளார்.
(இரண்டாம் இணைப்பு)
தற்போது நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. விசா நீடிப்பு, சுங்கத்துறையில் ஒத்துழைப்பு உள்ளிட்ட நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
மோடியின் வருகை வரலாற்றுச் சிறப்புமிக்கது என இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு 28 வருடங்களின் பின்னர் விஜயம் செய்த இந்திய பிரதமர் என்ற வகையில் பெருமைப்படுவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இறுதியாக இந்திய பிரதமர் ஒருவர் 1987 ஆம் ஆண்டே இலங்கை வந்தார்.
இலங்கை ஜனாதிபதி செயலகத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கை வழங்கிய வரவேற்பு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருகோணமலையை, பிராந்தியத்தின் எரிபொருள் மத்திய நிலையமாக மாற்ற இந்தியா உதவும்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில், இலங்கையில் பௌத்தம் வந்த நாளில் இருந்தே தொடர்புள்ளது.
மீனவர்களில் பிரச்சினைக்கு இருத்தரப்பிலும் சுமூகமான தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும்.
இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள் மேம்படுத்தப்படும். இலங்கையில் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா உதவும்.
சம்பூர் அனல் மின் நிலையம் இலங்கையின் மின் சக்தி தேவைக்கு உதவியாக இருக்கும்.
இரு நாடுகளின் உறவின் இதயம் மக்கள். ராமர் ஜெயந்தியை முன்னிட்டு, ஏப்ரல் 14 ஆம் திகதி இராமாயண ரயில் சேவை ஆரம்பிக்கப்படும்.
இலங்கை வந்தடைந்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாலை 5.30அளவில் இலங்கையை வந்தடைந்தார்
அவரை ஏற்றி வந்த விசேட விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
பிரதமர் மோடியை இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரவேற்றார்.
இந்தநிலையில் மோடி, பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்து வரப்படுகிறார்.
கொழும்பில் இன்று அவர் முற்பகலில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் நிகழ்வில் பங்கேற்கவுள்ளார்.
இதனையடுத்து மாலையில் இலங்கையின் நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.
அத்துடன் பல்வேறு தரப்பினரையும் அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இதனையடுத்து நாளை அவர் வடக்குக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
1987 ஆம் ஆண்டின் பின்னர் இலங்கை வந்துள்ள முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.
0 comments:
Post a Comment