‘லிங்கா’ பட விவகாரத்தில் மீண்டும் ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
‘லிங்கா’ படம் பற்றிய தவறான செய்திகளை விநியோகஸதர்கள் தரப்பினர் பரப்பி வருவதாக நினைத்த தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ்.. ‘லிங்கா’ படம் பற்றிய வில்லங்கமான செய்திகள் எதையும் பத்திரிகைள், இணையத்தளங்கள், தொலைக்கா்டசிகளில் வெளியிடக் கூடாதென பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் தடையுத்தரவை பெற்றுள்ளார்.
இந்த உத்தரவின் ஆவண நகல்கள் நேற்று இரவு அனைத்து ஊடகங்களுக்கும் ஈ-மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷின் இந்தச் செயலை தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் திருச்சி ஸ்ரீதர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இது :
“லிங்கா’ படம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் சங்கத் தலைவர் ஆர்.சரத்குமார் ஆகியோருடன் ‘லிங்கா’ திரைப்பட விநியோகஸ்தர்கள் பிப்ரவரி 19-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தினர்.
“மொத்த நஷ்டத்தில் 8 கோடி ரூபாய் நஷ்டத்தை நாங்களே ஏற்றுக் கொள்கிறோம், மீதியைத் தாருங்கள்..” என்று விநியோகஸ்தர்கள் கோரிக்கை வைத்தனர்.
இது சம்பந்தமாக தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், நடிகர் ரஜினிகாந்த் ஆகிய இருவருடனும் பேசி ஒரு சுமூகமான முடிவுக்கு ஏற்பாடு செய்வதாக நடிகர் சரத்குமார் உறுதியளித்தார்.
சுமூகமான சூழலில் இப்பிரச்சனை கையாளப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் லிங்கா தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் ‘லிங்கா’ படத்தின் விநயோகஸ்தர்களுக்கு எதிராகவும், தமிழகத்தில் வெளியாகும் தமிழ், ஆங்கில நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள், மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள், இணையத்தளங்கள் ஆகியவை ‘லிங்கா’ படம் சம்பந்தமான செய்திகளை வெளியிடக் கூடாது என நீதிமன்ற தடை உத்தரவை பெற்றார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன்.
படம் வெளிவருவதற்கு முன்பு ஊடகங்களை தங்களுடைய படத்தின் பிரமோஷனிற்காக பயன்படுத்திக் கொண்ட ரஜினிகாந்த், ராக்லைன் வெங்கடேஷ் தரப்பு படம் வெற்றி, தோல்வி சம்பந்தமாக வரும் எதிர்மறையான செய்திகளை ஜனநாயக அடிப்படையில் சந்திக்க வேண்டுமே தவிர, சர்வாதிகார அடிப்படையில் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லப்படும் மீடியாக்களுக்கு எதிரான நிலையை எடுப்பது வருத்தத்திற்குரியதும், ஏற்றுக் கொள்ளத்தக்கதும் அல்ல.
இது போன்ற ஒரு தடை உத்தரவை நடிகர் ரஜினிகாந்திற்குத் தெரியாமல் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் வாங்கியருப்பதற்கு வாய்ப்பேயில்லை என்றே கருதுகிறேன்.
எனவே, இச்செயலுக்கு நடிகர் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஆகிய இருவரும் அனைத்து ஊடகங்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.
கடந்த 60 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் ‘லிங்கா’ படத்தின் விநியோகஸ்தர் நஷ்ட ஈட்டுப் பிரச்சனையை சுமூகமான முறையில் தீர்ப்பதற்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவரான ஆர்.எம்.அண்ணாமலை, தமிழ்த் திரைப்பட கூட்டமைப்பு தலைவரான ஆர்.ராமசுப்பு என்கிற பாலாஜி ஆகியோர் தலையிட வேண்டுகிறேன்.
‘லிங்கா’ படத்தை திரையிட்டதின் மூலம் தாங்கள் நஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. தங்களை நம்பி அட்வான்ஸ் கொடுத்த திரையரங்குகளும், எம்.ஜி. அடிப்படையில் பணத்தைச் செலுத்திய திரையரங்குகளும் நஷ்டமடைந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்களது பணத்தைத் திருப்பி வாங்கித் தருவதற்குத் தொடர்ச்சியாகப் போராடி வரும் ‘லிங்கா’ பட விநியோகஸ்தர்களை மனதாரப் பாராட்டுகிறேன். அவர்களது முயற்சி வெற்றியடைய வாழ்த்துகிறேன்..!”
இவ்வாறு தனது அறிக்கையில் திருச்சி ஸ்ரீதர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.