ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் தான் எவரையும் அரசியல் ரீதியாக பழிவாங்கவில்லை எனவும் பழிவாங்கும் அரசியல் தன்னிடம் இருக்கவில்லை எனவும் மகிந்த ராஜபக்ச நேற்று கொழும்பில் தெரிவித்திருந்தார்.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸவின் மனைவி ஷசி வீரவன்ஸவை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பார்த்து விட்டு வெளியேறும் போது ஊடகவியலாளர்களிடம் அவர் இதனை கூறியிருந்தார்.
எனினும் மகிந்த ராஜபக்ச தனது ஆட்சிக்காலத்தில் மேற்கொண்ட அரசியல் பழிவாங்கலுக்கு இரண்டு மிகப் பெரிய உதாரணங்கள் உள்ளன.
2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முடிந்த சில நாட்களில் இராணுவ சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக கூறி தன்னை எதிர்த்து போட்டியிட்ட முன்னான் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்ததுடன் அவருக்கு வழங்கப்பட்டிருந்த பதவி பட்டங்கள், ஓய்வூதியம் என்பவற்றை பறித்து சில வருடங்கள் சிறையிலும் அடைக்க வழிவகுத்தார்.
அத்துடன் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தனக்கு தேவையான வகையில் தீர்ப்பை வழங்கவில்லை என்பதற்காக அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை திரட்டி, அரசியல் ரீதியான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்து பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்கியதுடன் அவருக்கு கிடைக்க வேண்டிய கொடுப்பனவுகள் எதனையும் வழங்கவில்லை என்பது மகிந்த ராஜபக்சவின் மிகப் பெரிய இரண்டாவது அரசியல் பழிவாங்கலாகும் எனவும் அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வாறான நிலையில், நாட்டிற்குள் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி மக்களின் அனுதாபத்தை பெற மகிந்த ராஜபக்ச, தான் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடவில்லை என்ற பொய்யை கூறி வருகிறார்.
அத்துடன் தனக்கு எதிராக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எதிர்ப்பை சமாளித்து குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிக்க அரசியல் பழிவாங்கல் தொடர்பான குற்றங்களை கோத்தபாய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் மீது சுமத்தும் செயற்பாடுகளை மகிந்த ராஜபக்ச முன்னெடுத்துள்ளதாக அரசியல் அவதானிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment