↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
முத்தரப்பு கிரிக்கெட்டில் சொதப்பி, முதலாவதாக வெளியேறிய இந்தியா, உலக கோப்பை கிரிக்கெட்டில் திடீரென விஸ்வரூபம் எடுத்து நிற்க, எதிர்க்க முடியாமல் திகைக்கின்றன பிற அணிகள். பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளை இந்தியா வீழ்த்திய விதம், இந்த அணி 'ரியல் சாம்பியன்தான்' என்று அனைவரையும் வாயார புகழச் செய்தது. அவ்விரு ஆட்டங்கள் மூலம், சர்வதேச கிரிக்கெட் நாடுகளுக்கு இந்தியா ஆணித்தரமாக சில விஷயங்களை எடுத்துரைத்துள்ளது.
ஷிகர் தவான், விராட் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, அஜிங்ய ரஹானே ஆகிய டாப் 4 பேட்ஸ்மேன்களும், இதுவரை நடந்த இரு போட்டிகளில் ஏதாவது ஒன்றிலோ அல்லது இரண்டிலுமோ தங்களது திறமையை பறைசாற்றிவிட்டனர். மேலும், முதல் 20 ஓவர்களில் ரன் ரேட்டை பற்றி கவலைப்படாமல் வலுவான அடித்தளம் அமைத்து, நடு ஓவர்களில் புகுந்து விளையாடும் வித்தையை செவ்வனே செய்து வருகிறது இந்தியா.
அதன் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவாலும் கூட முடியுமா என்று தெரியவில்லை, ஆனால் இந்தியா, அன்னிய மண்ணில் ஒரு அபார விஷயத்தை செய்து காட்டிவிட்டது. பாகிஸ்தானை 224 ரன்களிலும், தென் ஆப்பிரிக்காவை 177 ரன்களிலும் ஆல்-அவுட் செய்து சாதித்து காண்பித்துள்ளதே.. இந்தியாவின் பவுலிங்கும், அதற்கு சப்போர்ட்டான ஃபீல்டிங்கும், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மேம்பட்டு காணப்பட்டதே இந்த சாதனைக்கு காரணம்.
ஆஸ்திரேலியாவுடனான அடிலெய்டு டெஸ்டில் ஒரு கட்டத்தில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் இருந்த இந்தியா திடீரென தோல்வியை தழுவியது. டோணி தலைமையேற்கும் முன்பு, இதுபோன்ற பல சொதப்பல்களை இந்தியா கண்ட வரலாறு உண்டு. ஆனால் டோணி தலைமையில் சமீப காலமாக இந்த பிசிர் மீண்டும் தட்டுப்பட்டது. உலக கோப்பையை பொறுத்தளவில் இந்தியாவின் வியூகம், சிறப்பாக உள்ளது. உதாரணத்திற்கு, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 35வது ஓவரை நெருங்கும்போது மழை வரும் சூழல் ஏற்பட்டது. ஆனால் முன்கூட்டியே புரிந்து கொண்ட இந்திய வீரர்கள், டக்வொர்த் லீவிஸ் முறையில் இருந்தும் தப்பிக்கும்படியாக கூடுதல் ரன்களை குவித்தனர். இரு போட்டிகளிலுமே 30வது ஓவர்களின்போது எப்படியும் 150 ரன்களை கடந்துவிடுகிறது இந்தியா. அதேபோல, இறுதியில், இரு போட்டியிலுமே 300 ரன்களையும் கடந்துவிட்டது.
ஆஸ்திரேலிய பிட்சுகளில் ஆசிய அணிகள், 180 ரன்களை தாண்டுவதே பெரிய விஷயம். ஆனால் இம்முறை இந்தியா இரு போட்டிகளிலுமே 300 ரன்களை கடந்துள்ளது. பயிற்சி ஆட்டத்தின்போது ஆப்கனுக்கு எதிராகவும் 300 ரன்களை கடந்து சாதித்தது இந்தியா. இதற்கு காரணம், ஆஸ்திரேலிய பிட்சில் பேட்டிங்கிற்கு சாதகமாக செய்யப்பட்டுள்ள மாற்றங்களேயாகும். இந்த மாற்றங்களை சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளது இந்தியா. நியூசிலாந்தின் பிட்சுகள் சிறிது தொந்தரவு தரக்கூடும் என்றாலும், அநேகமாக இந்தியா பங்கேற்க உள்ள அனைத்து நாக்அவுட் போட்டிகளும், ஆஸ்திரேலியாவில் வைத்துதான் நடைபெற உள்ளது என்பதால், இந்தியாவின் வெற்றி நடை தொடவே வாய்ப்புள்ளது.
ஐசிசி தொடர்களில், இந்தியாவுக்கு தொடக்கம் சிறப்பாக அமைந்துவிட்டால், அவர்களை தடுத்து நிறுத்துவது கஷ்டமாகிவிடும். 2003 உலக கோப்பையின்போது லீக் மற்றும் இறுதி போட்டி ஆகியவற்றில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இந்தியா, மற்றபடி 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியது. 2011ல் இங்கிலாந்துடனான போட்டி டையில் முடிந்தது. தென் ஆப்பிரிக்காவிடம் கடைசி ஓவர் வரை போராடி தோற்றது. அதை தவிர்த்து பிற அனைத்து போட்டிகளிலுமே வென்று இந்தியா கோப்பையை கைப்பற்றியது.
ஆஸ்திரேலிய மைதானங்களில் இந்திய அணிக்கு கிடைத்துவரும் அபரிமிதமான ரசிகர்களின் ஆதரவும் வெற்றிக்கு ஒரு காரணம். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி நடந்த அடிலெய்டில் விற்பனையான 55 ஆயிரம் டிக்கெட்டுகளில் 40 ஆயிரம் டிக்கெட்டுகள் இந்திய ரசிகர்களின் பாக்கெட்டுகளில்தான் இருந்தது. மெல்போர்னில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த போட்டியின்போது மொத்தமுள்ள 86 ஆயிரம் இருக்கைகளில் 65 ஆயிரம் இருக்கைகளை இந்தியர்கள் அலங்கரித்தனர்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, ரோஹித் ஷர்மா டக் அவுட் ஆனபோது ஸ்டேடியமே, குண்டூசி போட்டால் சத்தம் கேட்கும் என்ற அளவுக்கு, அமைதிக்கு சென்றது. 5 ஓவர்கள் முடிவில் இந்தியா 10 ரன்கள் எடுத்திருந்தபோது, ஏதோ 60 ரன்கள் எடுத்தது போன்ற கரகோஷங்கள் எழுந்தன. எத்தனை வலிமையான எதிரணியாக இருந்தாலும், இத்தகைய ரசிகர்கள் ஆதரவு கொண்ட அணிக்கு எதிராக விளையாடும்போது கை நடுங்கவே செய்யும்.
Home
»
sports
»
sports.tamil
» ஜீரோவிலிருந்து ஹீரோவாக விஸ்வரூபம்! எப்படி இருந்த இந்திய டீம் இப்படி ஆனதற்கு காரணம் தெரியுமா?
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment