↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சென்னை புழலில் உள்ள கிணறு காணாமல் போனதாக தொடரப்பட்ட வழக்கில் மாநகராட்சி மண்டல அதிகாரி நேரில் ஆஜராகி தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேவேந்திரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், நான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் புழல் பகுதியில் இருந்த கிணறுகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தேன்.

அதில், புழலை சுற்றி 16 கிணறுகள் உள்ளன என தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது அதில் குறிப்பிட்டுள்ள கிணறுகள் இல்லை.
மேலும், பிள்ளையார் கோயில் தெருவில் இருந்த கிணற்றை மூடிவிட்டு, அதில் தியாகராஜன் என்பவர் கட்டடம் கட்டி வருகிறார்.
அந்தக் கிணற்றை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். அதனால் காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடிக்க வேண்டும். அதன் மீது சட்டவிரோதமாக கட்டடம் கட்டிவரும் தியாகராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடிக்க முடியவில்லை என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதை மறைத்து, தியாகராஜன் தனி நீதிபதியின் முன்பு வழக்கு தொடர்ந்து, தற்போதைய நிலையே தொடரட்டும் என உத்தரவு பெற்றுள்ளார் என தெரிவித்துள்ளனர்.

எனவே மாநகராட்சியின் மண்டல அதிகாரி நேரில் ஆஜராகி, தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் இடைக்கால உத்தரவிட்டுள்ளனர்.

இதையடுத்து ஜனவரி 23ம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top