↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad பூமியில் கடல்களுக்கு அடியில் வசிக்க இயலாது. எவ்வளவோ பிரச்சினைகள். பூமிக்கு மேலே ஆகாயத்திலும் வசிக்க இயலாது. அதிலும் பல பிரச்சினைகள். ஆனால் வெள்ளி கிரகத்தில்  ஆகாயத்தில் மேகங்களுக்கு நடுவே வசிக்க முடியும் என்று நாஸா கூறுகிறது.

நாஸா ஒரு படி மேலே போய் வெள்ளி (Venus) கிரகத்தில் மனிதர்கள் வாழும் ஆகாயக் காலனிகளை உண்டாக்க முடியும் என்றும் கூறுகிறது. செவ்வாய் (Mars)  கிரகத்தில் போய் குடியேறுவதில் உள்ள பிரச்சினைகளுடன் ஒப்பிட்டால் வெள்ளி கிரகத்துக்குப் போய் ஆகாயக் காலனிகளில் குடியேறுவதில் உள்ள பிரச்சினைகள் குறைவு.

செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை இப்போதைக்கு மூட்டை கட்டி வைத்து விட்டு வெள்ளி கிரகத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்புவதில் கவனம் செலுத்தலாம் என்றும் நாஸா விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளார்.

வெள்ளி கிரகம் அப்படி என்ன மனிதர்கள் வாழ உகந்த நிலைமைகளைக் கொண்டதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். சொல்லப்போனால் வெள்ளி கிரகம் ஒரு நரகம். வெள்ளியில் தரை வெப்ப நிலை சுமார்  470 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கும்.  வெள்ளியில் வானிலிருந்து அமில மழை பெய்யும் . அது போதாதென வெள்ளியில் காற்றழுத்தமானது பூமியில் உள்ளதை விட 92 மடங்கு அதிகம்.

எப்போதும் மேகங்களால் மூடப்பட்ட வெள்ளி கிரகம்
வெள்ளியின் காற்றழுத்தம் எல்லாப் பக்கங்களிலிருந்தும் அழுத்தும் என்பதால் வெள்ளியில் இறங்கும் விண்கலமானது யானையின் காலடியில் சிக்கிய பிளாஸ்டிக் பொம்மை போல நொறுங்கி விடும்.

கடந்த காலத்தில் அமெரிக்காவும் ரஷியாவும் வெள்ளி கிரகத்துக்கு விண்கலங்களை அனுப்பத்தான் செய்தன. அமெரிக்க விண்கலத்தில் எதுவுமே செயல்படாது போயின. ஒரு சில ரஷிய விண்கலங்கள் சிறிது நேரம் செயல்பட்டு தகவல்களை அனுப்பின. 1981 ஆம் ஆண்டில் ரஷியா அனுப்பிய வெனிரா-13 என்னும் பெயர் கொண்ட ஆளில்லா விண்கலம் வெள்ளியில் இறங்கி 127 நிமிஷங்கள் செயல்பட்டது.  இவ்விதக் காரணங்களால் கடந்த பல ஆண்டுகளாக ரஷியாவோ அமெரிக்காவோ வெள்ளி கிரகத்தின் பக்கம் திரும்பவில்லை.

வெள்ளிக்கு இப்போது சுக்கிரதசை போலும். ஆகவே தான் வெள்ளி பக்கம்  நாஸா திரும்பியுள்ளது. ( வெள்ளி கிரகத்துக்கு சுக்கிரன் என்ற பெயரும் உண்டு.ஜோசியர்கள் வெள்ளி கிரகத்தை சுக்கிரன் என்றே குறிப்பிடுகின்றனர்).

வெள்ளியில் தரை மட்டத்தில் தான் நிலைமைகள் பயங்கரமாக உள்ளன. ஆனால் வெள்ளியின் தரை மட்டத்திலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் உயரத்தில் காற்றழுத்தம் பூமியில் உள்ளதைப் போலவே உள்ளது. அந்த உயரத்தில் வெப்பம் 70 டிகிரி செல்சியஸ் அளவுக்குத் தான் உள்ளது. ஒரு விதமாக சமாளிக்கலாம்.

அந்த அளவில் வெள்ளியின் மேகங்களின் ஊடே பாதுகாப்பாக பறந்தபடி வாழ இயலும். இவையெல்லாம் முன்பே அறியப்பட்டவை. ஏட்டளவில் இருந்தவை. நாஸா இப்போது இதற்கு செயல் திட்டத்தைத் தயாரித்துள்ளது என்பது தான் புதியது.

ஹிண்டன்பர்க் என்னும் பெயர் கொண்ட ஆகாயக்கப்பல் (1936)
இதில் சுமார் 90 பேர் பயணம் செய்தனர்.
ராக்கெட் மூலம் வெள்ளி கிரகத்தை அடைய வேண்டும். பின்னர் அதற்குள்ளிருந்து  ஹீலியம் வாயு  நிரப்பப்பட்டதாக ஆகாயக் கப்பல் (Airship) வெளிப்படும். அது பலூன் போல நடுவானில் நிலையாகப் பறக்கக்கூடிய ஒன்றாகும். அதன் அடிப்புறத்தில் புரோப்பல்லர்களைப் பொருத்தினால் மெதுவான வேகத்தில் முன் நோக்கிச் செல்லும்.

ஆகாயக் கப்பலின் அடிப்புறத்தில் விண்வெளி வீரர்கள் பாதுக்காப்பாகத் தங்கியிருப்பதற்கான கூடுகள் பொருத்தப்பட்டிருக்கும். விண்வெளி வீரர்கள் இதற்குள்ளாக இருந்து பணி புரியலாம்.

ஹிண்டன்பர்க் ஆகாயக்கப்பலில் அமைந்த உணவுக்கூடம்
வெள்ளி கிரகத்துக்கு முதலில் ஆளில்லாத விண்கலத்தை அனுப்புவது திட்டமாகும். பின்னர் விண்வெளி வீரர்கள் அடங்கிய விண்கலம் செல்லும். அந்த விண்கலம் சில நூறு கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி வெள்ளியை சுமார் ஒரு மாத காலம் சுற்றும்.அதன் பின்னர் அவர்கள் பூமிக்குத் திரும்புவர்.  அடுத்த கட்டமாக விண்வெளி வீரர்கள் வெள்ளியின் மேகங்களுக்கு ஊடே சுமார் 50 கிலோ மீட்டர் உயரத்தில்  ஆகாயக்கப்பலில் இருந்தபடி 30 நாட்கள் தங்கியிருப்பர். ஆகாயக் காலனிகளை அமைப்பது அடுத்த திட்டமாக இருக்கும்.

செவ்வாய்க்கு மனிதனை அனுப்புவதுடன் ஒப்பிட்டால் வெள்ளிக்கு மனிதனை அனுப்புவது ஒப்பு நோக்குகையில் சுலபம். செவ்வாயில் கனமான விண்கலங்களை இறக்குவதில் பிரச்சினை உண்டு.செவ்வாய் கிரகத்தில் விண்வெளியிலிருந்து ஆபத்தான கதிர்கள் தாக்கும் பிரச்சினை உண்டு என்பதால் நிலத்துக்குள்ளாகத்தான் குடியிருப்புகளை ஏற்படுத்திக் கொண்டாக வேண்டும். எல்லாவற்றையும் விட செவ்வாயின் தரையிலிருந்து கிளம்பி மேலே வருவதில் உள்ள பிரச்சினைக்கு இன்னும் நம்பகமான ஏற்பாடு உருவாக்கப்படவில்லை.

வெள்ளி விஷயத்தில் தரையில் இறங்கும் பேச்சுக்கே இடமில்லை. ஆகவே மேலே வருகின்ற பிரச்சினையும் இல்லை. வெள்ளிக்கு விண்வெளி வீரர்கள ஏற்றிச் செல்லும் அதே விண்கலம் மூலம் பூமிக்குத் திரும்ப முடியும்.

வெள்ளி கிரகத்தை கனத்த மேகங்கள் போர்த்தியுள்ளதால் விண்வெளியிலிருந்தும் சூரியனிலிருந்தும் வருகிற ஆபத்தான கதிர்களை அந்த மேகங்கள் தடுத்து விடும்.

தவிர, செவ்வாய் அல்லது பூமியுடன் ஒப்பிடுகையில் வெள்ளி கிரகமானது சூரியனுக்கு அருகாமையில் உள்ளது. ஆகவே சூரியனின் ஒளிக் கதிர்கள் மூலம் நிறைய மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.(சூரியனிலிருந்து வெள்ளி 10 கோடி கிலோ மீட்டர். பூமி 15 கோடி கி.மீ.செவ்வாய் 22 கோடி கி.மீ)

எனினும் வெள்ளிக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டம் இப்போதைக்கு ஏட்டளவில் தான் உள்ளது. உறுதியாக நிதி ஒதுக்கப்பட்ட பின்னரே எதுவும் சாத்தியமாகும்.

ஆகாயக்கப்பல் பற்றிய குறிப்பு: ஆகாயக்கப்பல் (Airship)  இப்போதைய விமானங்களிலிருந்து மாறுபட்டது. ஹைட்ரஜன் வாயு அல்லது ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட ஆகாயக்கப்பல் வானில் பலூன் போன்று மிதக்கக்கூடியது. சுழலிகள் (Propeller)  உதவியுடன் முன்னே செல்லக்கூடியது. விமானம் கண்டுபிடிக்கப்பட்டதற்கு முன்னர் ஐரோப்பா- அமெரிக்கா இடையே ஆகாயக்கப்பல்கள் இயங்கின. ஆகாயக்கப்பலின் அடிப்புறத்தில் இணைந்த கூட்டில் விமானிகளும் பயணிகளும் இருந்தனர். ஆகாயக்கப்பலில் படுக்கை அறைகள் உணவுக்கூடம் முதலிய பல வசதிகள் இருந்தன.   ஆனால் ஆகாயக்கப்பலின் வேகம் குறைவு. பாரிஸிலிருந்து நியூயார்க் செல்ல சுமார் மூன்று முதல் நான்கு நாட்கள் பிடிக்கும். இப்படியான பல காரணங்களால் ஆகாயக்கப்பல்கள் இடமிழந்தன.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top