↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad தப்பு மட்டுமே செய்யத் தெரிந்த ஒரு கும்பல், அதிரடி வேகத்துடன் பறக்கவிடும் கார்கள் என்று கடந்த 14 வருடங்களில் அடுத்தடுத்து பல பாகங்களாக வெளியாகி இன்றும் ரசிகர்களின் மனதில் ரேஸ் விட்டுக் கொண்டிருக்கும் படம்தான் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் தொடர் பாகங்கள். இதன் ஏழாவது பாகமாக “ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 7” இன்று வெளியாகி ஹிட் அடித்திருக்கிறது. இந்த ஏழு பாகங்கள் பற்றிய விறுவிறு அலசல் இதோ...
ஹாலிவுட் சினிமாவில் கார் சேஸிங் காட்சிகள் மிகவும் பிரபலம். அந்த கார் சேஸிங் காட்சிகள் படத்தின் இடையிலோ கிளைமாக்ஸிலோ இணைக்கப்பட்டு காட்சியின் வேகத்தைக் கூட்டுவதாக இருக்கும். அதில் இருந்து தனிப்பட்டு ஒரு படத்தையே கார் ரேஸ் பற்றி எடுத்தால் எப்படியிருக்கும் என்பதே 'பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' பட வரிசைகள்.
ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படத்தின் முதல் பாகம் 2001-ல் வெளியானது. அதற்கு முன்னரே ஹாலிவுட்டில் கார் ரேஸ் + த்ரில்லர் + ஆக்ஷன் சார்ந்த படங்கள் 1939-களிலேயே தொடங்கிவிட்டது. விபே என்ற இதழில் நியூயார்க் நகரில் இரவு நேரங்களில் நடைபெறும் கார் ரேஸ் பற்றி 'ரேசர் எக்ஸ்' என்ற தலைப்பில் வெளியான கட்டுரையை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டது முதல் பாகம். இந்த பாகத்தை ராப் கோகன் இயக்க, பால் வாக்கர், வின் டீசல், தியானே ஜான்சன், மிச்செல் ரோட்ரிகிஷ், ஜோர்தனா புரூஸ்டெர் போன்ற நட்சத்திரங்கள் நடித்தனர். இவர்களே அனைத்து பாகங்களிலும் நடிக்கும் ஸ்பெஷல் ஸ்டார்கள்.
இரவு நேரத்தில் சட்ட விரோதமாக தெருக்களில் மரணத்துடன் விளையாடும் கார் ரேஸ். அதில் யார் ஜெயிப்பது என்பதே படம். ஆக்ஷன் கலந்த த்ரில்லருடன் வெளியாகி இளசுகளின் மனதை கவரத்தான் செய்தது “2 ஃபாஸ்ட் 2 ஃபியூரியஸ்” என்ற டைட்டிலுடன் வெளியான இரண்டாம் பாகம்.  2003-ல் வெளியான இந்தப் பாகத்தில் நிசான் ஸ்கைலைன் ஜிடிஆர்34 ஸ்போர்ட்ஸ் கார்கள் பயன்படுத்தப்பட்டன. 1999-ம் ஆண்டு மாடலான இந்த கார் ஏராளமான வசதிகளுடன், 100 கிமீ வேகத்தை 6.0 வினாடிகளில் எட்டும் வகையில் எஞ்சினில் மாற்றம் செய்யப்பட்டது. 210 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எஞ்சினுடன் அமெரிக்கர்களுக்காக தயாரிக்கப்பட்ட ஸ்பெஷல் காரான மிட்சுபிஷி எக்லிப்ஸ் ஸ்பைடர் ஜிடிஎஸ் கார்களை இந்தப் படத்தில் உபயோகித்திருந்தனர்.
மூன்றாம் பாகமான “ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் டோக்கியோ டிரிஃப்ட்” 2006-ல் வெளியானது. இந்தப் பாகத்தில் ஃபோர்டு மஸ்டாங் ரேஸ் கார்கள் பயன்படுத்தினர். ஆனால், படத்தில் காட்டப்பட்ட கார்களில் நிசான் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல், சொடான் காராக வர்ணிக்கப்படும் மிட்சுபிஷி லான்சர் கார்களும் உபயோகித்திருக்கின்றனர். இப்படத்தினை ஜெஸ்டின் லின் இயக்கியிருந்தார்.
நான்காவது பாகம் 2009-ல் வெளியானது. எஃப்.பி.ஐ. சீக்ரெட் ஏஜென்ட் பால்வாக்கல், போதைப்பொருள் கடத்தும் கும்பலைப் பிடிக்கும் ஒரு ஆக்ஷன் படமாக வெளியாகி பெரும் ஹிட் அடித்தது. ஆயில் டேங்க் கடத்துவது போன்ற காட்சியில் 3.8 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட சொடான் கார்கள் பயன்படுத்தப்பட்டன.
2011ல் வெளியான ஃபாஸ்ட் ஃபைவ் படத்தின் க்ளைமாக்ஸ் சேசிங் காட்சிகளில் பிரத்யேகமாக டோட்ஜ் சேலஞ்சர் 2010 மாடல் கார்கள் பயன்படுத்தப்பட்டது. மேலும், இந்தப் பாகத்தில் பயன்படுத்தப்பட்ட முக்கிய கார் மாடல் போர்ஷே ஜிடி3 ஆர்எஸ். 3.8 லிட்டர் எஞ்சின் கொண்ட இந்த கார், 450 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். மணிக்கு 310 கிமீ வேகம் வரை பறக்கும் திறன் கொண்டது. மூன்றாம் பாகத்தில் தொடங்கி ஆறாம் பாகம் வரையிலும் ஜெஸ்டின் லின் தான் இயக்குநர்.
6-ம் பாகமாக வெளியான 'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 6'-ல்  நிசான் ஜிடிஆர் கார் கஸ்டமைஸ் செய்து பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சர்வதேச அளவில் குற்றம் மட்டுமே செய்துகொண்டிருந்த வின் டீசல், பால்வாக்கரின் டீம் திருந்தி வாழ அசைப்படுகின்றனர். ஆனால், அவரின் மேல் பல குற்ற வழக்குகள் இருக்கிறது. அதனால், போலீஸிடம் மாட்டினாலே ஜெயில்தான் என்று ஒளிந்து வாழ்கின்றனர். பிரபல பிரிட்டன் கொள்ளைக் கும்பலைப் பிடிக்க உதவுமாறும், அவ்வாறு செய்தால் உங்களின் குற்றங்களை நீக்கி சுதந்திரமாக வாழ்வதற்கு உதவுவதாகவும் கூறுகிறார் அமெரிக்க புலனாய்வுத் துறை அதிகாரி ஒருவர். அதற்கடுத்து நடக்கும் ஆக்ஷன்தான் மீதி கதை. சுமார் 800 மில்லியன் டாலர் வரை வசூலித்து ஹிட் அடித்தது 6-ம் பாகம்.
இதன் தொடர்ச்சியாக வெளியாகிறது பாஸ்ட் ஃபியூரியஸ் 7. ஜேம்ஸ் வான் இயக்கத்தில் 250 மில்லியன் பட்ஜெட்டில் படம் தயாராகி இன்று வெளியாகியிருக்கிறது. இந்தியாவில் மட்டும் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி என 4 மொழிகளில் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு காட்சியிலும் அனல் பறக்கும் வேகம், புவியீர்ப்பு விசையைப் பொய்யாக்கும் ஆக்ஷன் காட்சிகள் என்று திரையின் வேகத்தைக் கூட்டியிருக்கிறது படம். இதைத் தொடர்ந்து எட்டாவது பாகமும் வெளியாகவிருக்கிறதாம். ரேஸின் மேல் ஆர்வமுள்ள இளசுகளை குஷிபடுத்த அடுத்தடுத்து வருகிறது ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top