தன் படங்களில் ஏதாவது ஒரு மாவட்டத்தை முன்னிலைப்படுத்தி கதைக்களத்தை அமைக்கும் இயக்குநர் ஹரி, விஷாலின் ‘விஷால் பிலிம் பேக்டரி’க்காக இயக்கியிருக்கும் ‘பூஜை’யில் கோயம்புத்தூரைக் கதையின் களமாக்கியிருக்கிறார். ‘பூஜை’ பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.
‘வேந்தர் பிலிம்ஸ்’ வெளியீட்டில் தீபாவளிக்கு திரையரங்குகளைக் குறிவைக்கும் படத்தின் ஹைலைட்டுகளில் ஒன்று, படத்தில் விஷாலுடன் ஷ்ருதிஹாசன் ஜோடியாகியிருப்பது. சற்று தாமதமாக வந்தாலும், (ஃபிளைட் லேட்டாம்…ஹி…ஹி…) ஷ்ருதியின் வரவால் களை கட்டியது பிரஸ்மீட்.
“இந்தப்படத்தை விஷாலைத் தவிர வேறு எந்த தயாரிப்பாளராலும் இத்தனை பிரமாண்டமாகவும், தேதியை அறிவித்துவிட்டு படத்தை ரிலீஸ் பண்ணவும் முடியாது…” என்று ஆரம்பித்த இயக்குநர் ஹரி, “நடிகனாகவும் என் தாமிரபரணி படத்தில் நடித்ததற்குப் பிறகு நிறைய வளர்ந்திருக்கிறார். அதற்காக ஆக்க்ஷன் தாண்டியும் நிறைய சென்டிமென்ட் காட்சிகள் வைத்திருக்கிறேன்..!” என்று முடித்தார்.
“சத்யராஜ் சார் கூட சேர்ந்து நடிக்க வாய்ப்பு கொடுத்த டைரக்டருக்கு நன்றி. அவருக்குக் கிடைக்கும் கைத்தட்டலில் எனக்கும் கொஞ்சம் கிடைக்கும்….” என்று அடக்கமாக ஆரம்பித்தார் விஷால்.
“கோயம்புத்தூரிலிருந்து கதை பாட்னா வரை போகிறது. நடிகன் கண்டிப்பாக எட்டு மணிநேரம் தூங்க வேண்டும் என்பதையெல்லாம் கணக்கில் வைத்துக் கொள்ளாமல் டைரக்டர் ‘பேக் அப்’ சொல்லும்வரை நடித்துக் கோண்டே இருந்தோம். ஒவ்வொருநாளும் நடித்த காட்சிகளில் கிடைத்த திருப்தியோடு தூங்கப் போனேன்.
நிச்சயம் இந்தப்படத்தைத் தயாரித்ததற்காக, ஒரு தயாரிப்பாளராக எனக்கு சந்தோஷம்தான். எனக்கு இந்தப்படத்தில் லாபம் கிடைக்கும் என்பதை நிச்சயமாகச் சொல்லமுடியும். அதனை பட ரிலீசுக்குப்பின் லாபக் கணக்கைச் சொல்லியே உறுதிப்படுத்துகிறேன்..!” என்ற விஷாலிடம், “ஹரி படத்தில் வழக்கமாக அரிவாள் தூக்க வேண்டும். நீங்களும் தூக்கினீர்களா..?” என்ற கேள்வி கேட்கப்பட்டது.
“அரிவாளைவிட ஷ்ருதி ஹாசனை அதிகமாகத் தூக்கினேன்…” என்று காமெடியாக பதில் சொன்ன விஷால், “கோயம்புத்தூரில் அரிவாளையும், பாட்னாவில் துப்பாக்கியையும் இடத்துக்கு ஏற்றமாதிரி எதிரிகளை நோக்கித் தூக்குகிறேன்..!” என்றார்.
“ஏழாம் அறிவு’, ‘3’ படங்களின் வரிசையில் ‘பூஜை’ எனக்கு ஒரு வித்தியாசமான படமாக இருக்கும். நான் தமிழில் மட்டும் நடிப்பதைத் தாண்டி இந்திய மொழிகள் அனைத்திலும் நடிப்பதை விரும்புகிறேன்..!” என்று சிம்பிளாகப் பேசினார் ஷ்ருதி…” அப்பாவுக்குத் தப்பாத இந்திய உணர்வுடன்.
0 comments:
Post a Comment