யேமெனில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற இரு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 70 பொதுமக்கள் கொல்லப் பட்டிருப்பதாக யேமென் அதிகாரிகள் உறுதிப் படுத்தியுள்ளனர்.
முதலாவது குண்டுத் தாக்குதல் தலைநகர் சனாவில் கூடியிருந்த ஷைட்டி முஸ்லிம்களின் ஹௌத்தி சிறுபான்மை கிளர்ச்சியாளர்களையும் 2 ஆவது தாக்குதல் தெற்கே இராணுவ காவல் நிலையத்தையும் குறி வைத்து மேற்கொள்ளப் பட்டுள்ளது.
தலைநகர் சனாவிலுள்ள டஹ்ரிர் சதுக்கத்தில் புரட்சியில் ஈடுபட ஆயத்தமான ஹௌத்திக்கள் மீது நிகழ்த்தப் பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 47 பேர் ஸ்தலத்திலேயே உடல் சிதறி பலியானதாகவும் இதில் புரட்சியில் பங்கேற்ற 8 சிறுவர்களும் அடங்குவதுடன் 75 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் யேமென் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இது கடந்த மாதம் யேமெனின் தலைநகர் சனாவை ஹௌத்திக்கள் கைப்பற்றியதில் இருந்து உருவான அரசியல் பதற்ற நிலையினதும் குழப்பத்தினதும் உச்சக் கட்டம் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. அடுத்த தாக்குதல் ஹடர்மௌட் மாகாணத்திலுள்ள தெற்கு துறைமுக நகரமான முக்கல்லா இல் பாதுகாப்புப் படை முகாம் மீது தற்கொலைக் குண்டுகளுடன் ஓட்டி வந்த காரைச் செலுத்தி வெடிக்க வைக்கப் பட்டது. இதில் 20 படையினர் பலியானதுடன் 15 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர்.
ஹடர்மௌட், யேமெனில் இயங்கி வரும் அல்-கொய்தா பிரிவினர் ஆதிக்கம் செலுத்தும் முக்கிய மாகாணமாகும். இந்நிலையில் இவ்விரு தற்கொலைத் தாக்குதல்களுக்குமே எந்த ஒரு இயக்கமும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. ஆயினும் யேமனில் தொடர்ச்சியாக இராணுவத் துருப்புக்கள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரச அலுவலகங்களைக் குறி வைத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டு வரும் அல்கொய்தா கிளை இதற்கும் பின்னணியில் இருக்கலாம் என ஊகிக்கப் படுகின்றது. கடந்த வாரம் இந்த அல்கொய்தா கிளை ஹௌத்திக்களுக்கு எதிரான சண்டையை ஆரம்பிக்கப் போவதாக எச்சரித்திருந்ததுடன் இதற்குக் கைகோர்க்க சுன்னி பிரிவினரை ஒன்று சேர்ந்து வருமாறு அழைப்பும் விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் இந்த தற்கொலைத் தாக்குதல்களுக்கு மத்தியிலும் வியாழன் மாலை சுமார் 4000 ஹௌத்திக்கள் அதிபர் ஹாடி இனைப் பதவி விலகும் படியான கோரிக்கையுடன் அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவுக்கு எதிரான பதாதைகளுடன் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். இதேவேளை கடந்த மாதம் சனாவைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்ததற்குப் பிறகு ஐ.நா மும்மொழிந்த ஒப்பந்தத்தின் படி ஹௌத்திக்கள் வீதிகளில் இறங்கி வன்முறையில் ஈடுபடுவதற்கும் முடிவு எட்டப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment