அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா சிறையில் இருப்பதால் தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள “வெற்றிடத்தை” நிரப்ப, நடிகர் ரஜினிகாந்தை பாஜகவுக்கு இழுப்பதில் அந்தக் கட்சியின் மேலிடத் தலைவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். ஹைதரபாத்தில் இருக்கும் ரஜினியிடம் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இருவரும் என்ன பேசினார்கள் என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது
“ரஜினி அரசியலுக்கு வர வேண்டும். அவர் பாஜகவில் சேர்ந்தால் மிகுந்த மகிழ்ச்சி” என அக்கட்சியின் நிர்வாகிகள் வெளிப்படையாக அழைப்பு விடுத்து வருகின்றனர். சமீபத்தில் கொலு விழாவை காரணமாக வைத்து ரஜினி வீட்டுக்கு சென்ற பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், ரஜினியின் மனைவி லதாவுடன் சுமார் ஒருமணி நேரம் அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேசினார்.
இந்த செய்தி வெளியானதை தொடர்ந்து ரஜினி பாஜகவில் சேருவாரா? அல்லது தனிக்கட்சி தொடங்குவாரா? என்பது குறித்து பலத்த விவாதங்கள் நடந்து வருகின்றன.
தற்போது ‘லிங்கா’ படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் இருக்கும் ரஜினியுடன் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா போனில் பேசியதாக தகவல்கள் கசிந்துள்ளன. இது குறித்து ‘தி இந்து’ நாளிதழிடம் பாஜக முக்கிய நிர்வாகிகள் கூறியதாவது:
“ஏற்கெனவே அமித்ஷா 3 முறை ரஜினிகாந்திடம் பேசியிருக்கிறார். ரஜினி தரப்பில் இருந்து ‘அரசியலுக்கு வர மாட்டேன்’ என்று சொல்லவில்லை ‘காலம் கனியட்டும்’ என்று மட்டுமே சொல்லி இருக்கிறார். அதனால்தான் ‘நீங்கள் எதிர்பார்த்த காலம் கனிந்துவிட்டது. உடனடியாக அரசியலுக்கு வாருங்கள்’ என்று இப்போது ரஜினியிடம் பாஜக மேலிடம் வலியுறுத்தி வருகிறது.
“குறிப்பாக, பிரதமர் மோடி இதில் ஆர்வமாக இருக்கிறார். அவரது உத்தரவுப்படியே அமித்ஷா, போனில் ரஜினியிடம் பேசியுள்ளார். ‘நீங்கள் தனிக்கட்சி தொடங்கினாலும் பாஜக ஆதரவு அளிக்கும். ஆனால், பாஜகவில் நீங்கள் இணைவதையே நாங்கள் விரும்புகிறோம். எப்படியாக இருந்தாலும் முதல்வர் வேட்பாளர் நீங்கள்தான்’ என்றுஅமித்ஷா கூறியுள்ளார்.
“ரஜினியும், ‘லிங்கா’ படப்பிடிப்பு முடியட்டும்; உறுதியான பதில் சொல்கிறேன்’ என்று கூறியிருக்கிறார்.”
இவ்வாறு அந்த பா.ஜ.க. நிர்வாகிகள் கூறினர்.
0 comments:
Post a Comment