↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள ஜாமீன் உள்ளிட்ட மனுக்கள் மீதான வக்கீல்களின் வாதம் தொடங்கியுள்ளது. ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி ஆஜராகி வாதிட்டு வருகிறார். ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுதான் தண்டனை தரப்பட்டுள்ளது. எனவே அரசுத் தரப்பு வழக்கறிஞரின் கருத்தைக் கேட்கத் தேவையில்லை. அவசியமும் இல்லை. கேட்காமலேயே ஜாமீன் வழங்கலாம். ஜெயலலிதாவின் உடல் நிலையைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் மாநில முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. ஜாமீன் வழங்கினால் அவர் எங்கும் ஓடி விட மாட்டார். ஜெயலலிதாவுக்கு தனி நீதிமன்றம் பிறப்பித்துள்ள தண்டனையை ரத்து செய்யக் கோரும் மனுவை விசாரிக்க தாமதம் ஏற்படும் என்பதால் முதலில் ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவர் நீதிபதி சந்திரசேகரா முன்பு வாதிட்டார். ஜெயலலிதாவின் மனுக்கள் 73வது வழக்காக நீதிபதி சந்திரேசகரா பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் மனுக்கள் விசாரணைக்கு வருகின்றன. ஜெயலலிதாவின் மனுக்களை முதல் வழக்காக விசாரிக்க நீதிபதி சந்திரசேகரா மறுத்து விட்டார். எனவே வரிசைப்படியே வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

கடந்த 10 நாட்களாக சிறையில் அடைபட்டிருக்கும் ஜெயலலிதா உள்ளிட்டோரின் ஜாமீன் மனுக்கள் ஏற்கனவே 2 முறை ஒத்திவைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனவே இன்றாவது ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற பெரும் எதிர்பார்ப்பில் அதிமுகவினர் உள்ளனர். ஜாமீன் மனுக்கள் தவிர, தனி நீதிமன்றம் அளித்த தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரும் மனு, தீர்ப்பை ரத்து செய்யும் மனு, சொத்துக்களைப் பறிமுதல் செய்வதை நிறுத்தி வைப்பது ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களையும் நான்கு பேரும் தாக்கல் செய்துள்ளனர். சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் தனி நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து கடந்த மாதம் 27-ந் தேதி தீர்ப்பு கூறியது. 

இதையடுத்து ஜெயலலிதா உள்ளிட்டோர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் நான்கு பேரும் ஜாமீன் கோரி கடந்த 29ம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த மனுக்கள் 30ம் தேதிக்கு விசாரணைக்கு வந்தன. விடுமுறை கால நீதிபதி ரத்னகலா விசாரணை நடத்தினார். அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர் யாரும் இல்லாத காரணத்தால் விசாரணையை அதிரடியாக அக்டோபர் 7ம் தேதிக்கு தள்ளி வைத்தார் நீதிபதி ரத்னகலா. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுக வக்கீல்கள் உடனடியாக இந்த மனுவை விசாரிக்குமாறு கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளரிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து தலைமை நீதிபதி டி.எச்.வகேலா தலையிட்டார். அவரது உத்தரவின் பேரில் அக்டோபர் 1ம் தேதி அதே நீதிபதி ரத்னகலா பெஞ்ச் விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அக்டோபர் 1ம் தேதி யாரும் எதிர்பாராத வகையில் விசாரணையே நடத்தாமல் 2 நிமிடங்களிலேயே வழக்கை ரெகுலர் பெஞ்ச் விசாரிக்கும் என்று கூறி விட்டு போய் விட்டார் நீதிபதி ரத்னகலா. இந்த பின்னணியில் இன்று ரெகுலர் பெஞ்ச் முன்பு ஜெயலலிதா உள்ளிட்டோரின் மனுக்கள் விசாரணைக்கு வந்துள்ளன. சசிகலா சார்பில் வித்யாசாகர், மணிசங்கர் ஆகியோரும், இளவரசிக்கு அஸ்மத் பாஷா, அசோகன் ஆகியோரும், சுதாகரனுக்கு மூர்த்தி ராவ், சீனிவாசன் ஆகியோரும் ஆஜராகியுள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top