↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


நான்கு வருட இடைவெளிக்குப் பின் சரண் இயக்கிவரும் படம் "ஆயிரத்தில் இருவர்'. அவரைச் சந்தித்தோம்.

 "ஆயிரத்தில் இருவர்' தலைப்பே புதுமையாக இருக்கிறதே?

 இரட்டையர் சம்பந்தமான கதைக்கு இதைவிட நல்ல தலைப்பு கிடைக்குமா என்ன...? ஆக்ஷன், காமெடி என முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட படம். ஆக்ஷனை விடக் காமெடி கொஞ்சம் தூக்கலாக இருக்கும். ஆனால், இதைக் காமெடிப் படம் என்றும் சொல்ல முடியாது. அதே நேரம் ஆக்ஷன் படம் என்றும் சொல்ல முடியாது. "கருவிலேயே அடித்துக் கொள்ளும் இருவரை'ப் பற்றிய கதை. இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்.



 வினய்யை வைத்து மீண்டும் படம் பண்ணக் காரணம்?

 வினய்யால் மட்டும்தான் இந்தப் படத்திற்குப் பொருந்திப்போக முடியும். வினய்யை மனதில் வைத்து இந்தக் கதையை எழுதியதால்தான் அவ்வளவு துணிவாகச் சொல்கிறேன். சிலரை முதல் முறை பார்க்கும் போதே இவர்கள் பெரிய உயரங்களைத் தொடுவார்கள் எனத் தோணும். அதுபோல் வினய்யைப் முதல் தடவையாகப் பார்த்தபோதே இந்தப் பையன் பெரிய உயரங்கள் போவான் என்று என் மனதில் பட்டது. காத்திருந்து பாருங்கள், என் கணிப்பு பொய்க்காது.



 இந்தப் படத்தில் மூன்று நாயகிகள் நடிப்பதில் கிளாமர் தவிர்த்து வேறு காரணங்கள் இருக்கிறதா?

 எனது படங்களிலேயே முதல் முறையாக இந்தப் படத்தில்தான் 50 முக்கியமான கலைஞர்கள் நடித்துள்ளனர். திரையரங்கை விட்டு ரசிகர்கள் வெளியேறும்போது அவர்கள் மனதில் இந்த 50 நடிகர்களின் பாத்திரமும் பதிந்துபோகும் வண்ணம் சிரத்தை எடுத்து திரைக்கதை எழுதியுள்ளேன். இந்தப் படத்திற்கு மூன்று நாயகிகள் அவசியம் தேவை. அவர்களை வலிந்து திணிக்கவில்லை. தேவையான அளவு கிளாமர் இருக்கிறது... ஆனால், கதையோடு பார்க்கும் போது கிளாமர் தெரியாது.



 நான்கு வருட இடைவெளி விட்டு படம் இயக்கும் நீங்கள் பெரிய நடிகர்களை வைத்து இயக்காதது ஏன்?

 கதைக்கு பொருத்தமாகத்தான் நான் நாயகனை தேர்ந்தெடுப்பேன். எனது கடைசிப் படம் "அசல்'. அதன் நாயகன் அஜித். ஆனால், "ஆயிரத்தில் இருவர்' போன்ற ஒரு கதையில் அஜித் மாதிரி பெரிய ஹீரோக்கள் நடிக்க முடியாது. அவரின் ரசிகர்களை திருப்திப்படுத்தும் அம்சங்கள் இருந்தால் மட்டுமே அவரை வைத்துப் படம் பண்ண முடியும். அவரது படங்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது, அதை நான் பொய்யாக்க விரும்பவில்லை.



 சில காலம் இசையமைக்காமல் இருந்த உங்களின் ஆஸ்தான இசை அமைப்பாளர் பரத்வாஜ் இந்தப் படத்திற்கு மீண்டும் இசை அமைத்திருக்கிறாரே?

 திருக்குறளுக்கு இசை அமைக்கும் உன்னத பணியில் இருந்ததால் சில வருடங்கள் சினிமாவுக்கு அவர் இசை அமைக்கவில்லை. எனது இந்தப் படத்தின் மூலம் மீண்டும் வருகிறார். "காதல் மன்னன்' படத்தின் மூலமாகத்தான் நாங்கள் இருவரும் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்தோம். இடைப்பட்ட காலத்தில் 14 படங்கள் இயக்கினேன். அதில் "அல்லி அர்ஜுனா'விற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். "மோதி விளையாடு' படத்திற்கு ஹரிகரணும் லூயிஸýம் இசை அமைத்தனர். மீதி 12 படங்களுக்கும் பரத்வாஜ்தான் இசையமைத்தார். "காதல் மன்னன்', "அமர்க்களம்', "வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.', "ஜே ஜே' என பெரும்பாலான படங்கள் மியூசிக்கல் ஹிட். "காதல் மன்னன்' படத்தில் வரும் "உன்னைப் பார்த்த பின்பு நான்' பாடலை ஹம் செய்பவர்களை இன்றும் கூட நான் பார்த்திருக்கிறேன். சிலரை வாழ்க்கையில் எப்போதுமே மிஸ் பண்ணக் கூடாது எனத் தோன்றும். பரத்வாஜ் எனக்கு அப்படிப்பட்டவர்.



 உங்கள் படம் மூலமாக காதலில் விழுந்த அஜித்- ஷாலினி காதலை வைத்து நீங்கள் ஏன் ஒரு படம் இயக்கக் கூடாது?

 "மேட் பார் ஈச் அதர்' என்பார்களே, அஜித்தும் ஷாலினியும் அப்படிப்பட்டவர்கள். நான் இயக்கிய "அமர்க்களம்' படத்தின் படப்பிடிப்பில்தான் அவர்கள் காதலில் விழுந்தார்கள். அவர்களின் காதலுக்கு நானும் ஒரு வகையில் காரணமாக இருக்க வேண்டும் என்பது கடவுளின் விருப்பம். அவர்களின் காதல் உன்னதமானது. அதைப் படமாக எடுக்க முடியாது.



 கார்ட்டூனிஸ்டாகப் பணியாற்றிய அனுபவங்கள்...?

 கே.பி. சாரிடம் உதவியாளராக இருந்த காலத்தில் ஒரு வார இதழில் ஃப்ரீலான்ஸ் கார்ட்டூனிஸ்டாக வேலை செய்தேன். ஷூட்டிங் சம்பந்தமான வேலைகளில் மூழ்கி விட்டு, இரவு இரண்டு மணிக்கு அறைக்கு வந்து கார்ட்டூன் வரையத் தொடங்கி காலை ஆறு மணிக்கு முடிப்பேன். நான் வரைந்து முடிக்கவும் ஷூட்டிங் வண்டி என்னைத் தேடி வரவும் சரியாக இருக்கும். தூக்கம் என்பதையே மறந்து வாழ்க்கைக்காக ஓடிய நாட்கள் அவை. இப்போது நினைத்துப் பார்த்தால் பசுமையாக இருக்கிறது.



 அடுத்த "சூப்பர் ஸ்டார்' யார் என வாக்கெடுப்பு நடத்தி முடிவுகள் அறிவித்ததை கவனித்தீர்களா?

 வாக்கெடுப்பின் மூலமாக "சூப்பர் ஸ்டார்' யார் என்பதை தேர்ந்தெடுக்க முடியாது என்பது எனது தாழ்மையான கருத்து. "சூப்பர் ஸ்டார்' என்றால் அது ரஜினி சார் ஒருவர்தான். அவரே ஜம்னு "லிங்கா' படத்தில் டூயட் ஆடிக்கொண்டிருக்கும் போது அடுத்த சூப்பர் ஸ்டாருக்கு அப்படி என்னதான் அவசரம்...

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top