‘கத்தி’ படத்தின் கற்பனைக் கதையைப் பார்த்துவிட்டு ‘ஆஹா ஓஹோ’ என பாராட்டி, உங்களுக்கும் சமூக விழிப்புணர்வும் பொறுப்புணர்வும் இருப்பதாக காட்டிக்கொள்ளும் ரசிகர்களே! விமர்சகர்களே! உங்கள் பார்வைக்கு – ஓர் உண்மைக்கதை:-
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பின்புறம் அமைந்துள்ள ஓர் அழகிய கிராமம்தான் சூரியூர். ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன இங்கு தொன்றுதொட்டு இருந்துவரும் ஒரே தொழில் விவசாயம்தான்.
திருச்சியைச் சுற்றி காவிரியாற்றின் தண்ணீரை நம்பித் தான் விவசாயமே உள்ளது. காவிரி வறண்டு போனால் பல ஏக்கர் நிலம் பாலைவனம் ஆவதை நாம் பார்த்திருக்கிறோம்.
ஆனால், சூரியூரில் சிறுஅளவு வாய்கால் பாசனம்கூட இல்லை. வானம் பார்த்த மானாவரி பூமிதான். என்றாலும், தமிழகத்தின் பிற பகுதிகளில் வறட்சி ஏற்பட்டபோதுகூட முப்போகமும் விளைந்த பூமிதான் சூரியூர். காரணம், சூரியூரை சுற்றி முன்னோர்கள் விட்டுச் சென்ற எண்ணற்ற ஏரிகளும், குளங்களும் தான் நிலத்தடி நீரை வற்றாமல் பார்த்துக்கொண்டன.
செயற்கைக்கோள் உதவியோடு சூரியூரில் உள்ள இந்த தண்ணீர் வளத்தைக் கண்டறிந்த ‘பெப்சி (Pepsi)’ குளிர்பான நிறுவனம், தனது தொழிற்சாலையை இங்கு நிறுவ ஆசைப்பட்டது.
‘பெப்சி’ நிறுவனத்தின் இந்த ஆசையை நிறைவேற்ற, அந்நிறுவனத்துடன் கை கோர்த்தது, திருச்சியில் உள்ள ‘எல்.ஏ. பாட்டிலர்ஸ் பிரைவேட் லிமிட்டெட் (LA Bottlers Pvt Ltd) நிறுவனம். இந்த திருச்சி நிறுவனத்தின் உரிமையாளர் அடைக்கலராஜ். காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர்ந்து 3 முறை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.
சூரியூரில் “பாட்டில் (Glass Bottle) தயாரிக்கும் தொழிற்சாலை வரப்போவதாக ”தவறான தகவல், அப்போதைய சூரியூர் ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி மூலம் பரப்பப்பட்டு, தொழிற்சாலையின் கட்டிட வேலை தொடங்கப்பட்டது.
2012ஆம் ஆண்டுமுதல் இந்த தொழிற்சாலை இயங்கியது. அடுத்த மூன்றே மாதத்தில் படிப்படியாக விவசாய கிணறுகளில் தண்ணீர் வற்ற தொடங்கியது. அப்போதுதான் சூரியூர் மக்களுக்கு தெரிய வந்தது – இயங்கிக் கொண்டிருப்பது ‘பெப்சி குளிர்பான கம்பெனி’ என்று.
இதை அறிந்த பெப்சி நிர்வாகம் உடனடியாக சூரியூரில் உள்ள சிலருக்கு தினக்கூலி வேலை வழங்கியது. இருப்பினும், தொடர்ந்து கிணறுகளில் தண்ணீர் வற்றியதால், 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சூரியூர் விவசாய சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரனிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சமூக ஆர்வலர் வினோத்ராஜ் சேஷனும், அவரது நண்பர்கள் சிலரும் சூரியூர் சென்று, அங்குள்ள நிலவரத்தை ஆராய்ந்தார்கள். அப்போது தொழிற்சாலையின் ஆபத்தான, சுத்திகரிக்கப்படாத கழிவுநீர், அங்குள்ள நிலங்களில் நேரடியாக கலக்க விடப்பட்டிருப்பது தெரிய வந்தது. அன்றுமுதல் சூரியூரை சேர்ந்த ராஜேந்திரன் பெயரில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், பல்வேறு துறைகளில் இருந்து தொழிற்சாலையின் உரிமம் சம்பந்தமாக ஆவணங்கள் பெறப்பட்டன.
பெறப்பட்ட ஆவணங்களை பார்த்தபோது, திடுக்கிடும் உண்மை வெளிவந்தது. இந்த தொழிற்சாலை, அனுமதி பெறாமலே கட்டப்பட்டிருப்பது, நகர் ஊரமைப்புத் துறை மூலம் தெரிய வந்தது. அது மட்டுமில்லாமல், போலி ஆவணங்களை சமர்ப்பித்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து உரிமம் பெறப்பட்டிருந்தது.
இந்த ஆவணங்கள் உட்பட பல ஆவணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு, திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரனிடம் புகார்மனு அளிக்கப்பட்டது. ஆனால் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. அதனால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டு, ‘உலக தண்ணீர் தினம்– 2014’ அன்று உண்ணாவிரதம் இருக்க முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில், திருச்சிராப்பள்ளி கோட்டாசியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், அரசு நிர்வாகம் பெப்சி தொழிற்சாலைக்கு மட்டுமே ஆதரவாகப் பேசியதை தொடர்ந்து பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. திட்டமிட்டபடி உண்ணாவிரதம் நடந்தது. இதனை தொடர்ந்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பெப்சி தொழிற்சாலைக்கு உரிமம் புதுப்பித்து நீட்டிப்பு வழங்கவில்லை.
இன்றுவரை மாவட்ட நிர்வாகம், பத்திரிகை, ஊடகம் என்று பல கதவுகளை சூரியூர் மக்கள் தட்டிவிட்டார்கள். ஆனால் அதிகார பலமும், பண பலமும் பாதாளம்வரை பாய்வதால், அறவழியில் போராடும் சூரியூர் மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை.
நமது முன்னோர்கள் அரும்பாடுபட்டு உருவாக்கிய ஏரிகளும், குளங்களும் நம் தலைமுறைகளின் தாகத்தை தணிக்க வேண்டுமே தவிர, அந்நிய நாட்டவர்களின் பணப் பசிக்கும், நம்நாட்டு துரோகிகளின் ஆடம்பர பசிக்கும் விட்டுவிடக் கூடாது.
தற்போது திரைக்கு வந்துள்ள ‘கத்தி’ படத்தின் கற்பனைக் கதையைப் பார்த்துவிட்டு கண்ணீர்விடும், ஆதங்கப்படும், கோபப்படும் ரசிகர்களே! விமர்சகர்களே!
சூரியூரில் பெப்சி கம்பெனிக்கு எதிராக நடைபெறும் மக்கள் போராட்டத்துக்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? உங்கள் பங்களிப்பு என்ன?
‘என்னால் என்ன செய்ய முடியும்’ என்று விலகி போகப் போகிறீர்களா?அல்லது ‘சிறு துரும்பும் பல் குத்த உதவும்’ என்று, போராடும் சூரியூர் மக்களுடன் இணையப் போகிறீர்களா?
மனசாட்சி உள்ளவர்கள், மானம் உள்ளவர்கள் இந்த விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க அவர்களது அறப்போராட்டத்தில் இணைவார்கள் என்று நம்புவோம்.
0 comments:
Post a Comment