5 மனைவிமாரை திருமணம் செய்திருந்த ஒருவர், குடும்பங்களை நடத்தி செல்வதற்காக 90 வீடுகளில் கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நடந்துள்ளது.
90 வீடுகளை கன்னமிட்டு ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்ட நபர் அண்மையில் மானிப்பாய் மற்றும் புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொள்ளையிடப்பட்ட 81 பவுண் தங்க ஆபரணங்கள், 35 தண்ணீர் பம்பி மோட்டார்கள்,மின் தளபாடங்கள், துவிச்சக்கர வண்டிகள் உட்பட மேலும் சில பொருட்கள் சந்தேக நபரின் வீட்டில் இருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மானிப்பாய் பிரதேசத்தில் வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து கிடைத்த முறைப்பாடு தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து இந்த சந்தேக நபர் பற்றிய தகவல்கள் வெளியாகின.
மானிப்பாய், நவாலி தெற்கு பிரதேசத்தில் உள்ள சந்தேக நபருக்கு சொந்தமான வீட்டை சோதனையிட்ட போது தங்க ஆபரணங்களை அடகு வைத்தமைக்கான பல பற்றுச்சீட்டுக்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேக நபரை தேடப்பட்டு வந்த நிலையில், அவர் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு தப்பிச் சென்றிருந்தார்.
மானிப்பாய் பொலிஸார் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு இது குறித்து தகவல் வழங்கியிருந்ததுடன் இரண்டு பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட தேடுதலை அடுத்து சந்தேக நபர் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.
புதுக்குடியிருப்பில் அவரது மனைவி ஒருவரின் வீட்டில் இருந்த நிலையிலேயே பொலிஸார் அவரை கைது செய்திருந்தனர்.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் 90 வீடுகளில் கொள்ளையிட்டுள்ளமை தெரியவந்துள்ளதுடன் அவற்றில் 60 சம்பவங்கள் தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.
மானிப்பாய் பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான இந்த நபர் 5 பெண்களை திருமணம் செய்துள்ளதுடன் அவர்களின் குடும்பத்தை நடத்த இவ்வாறு வீடுகளை கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் தடுப்பு காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
0 comments:
Post a Comment