↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தொண்ணூறுகளின் இறுதியில் இந்தியா முழுவதும் ஐ.டி. என்ற வார்த்தை லட்சோப லட்சம் இளைஞர்களையும்,  இளம்பெண்களையும் மயக்கிய வார்த்தை.
வெளிநாடுகளின் குறிப்பாக அமெரிக்காவின் வங்கிகள், ஏற்றுமதி நிறுவனங்களின் நிழல் உலகம் இந்தியாவில் குறிப்பாக தமிழகம்,கர்நாடகம் ஆகிய தென் மாநிலங்களில் உருவாகின. டாடா கன்சல்டன்சி,இன்போசிஸ்,விப்ரோ,ஐ.பி.எம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்கள்  இதற்கு  நிலம் தேர்வு செய்து, கட்டடம் கட்டி, ஆட்களை அமர்த்தி வெள்ளைக்கார மனிதர்களின் "வெள்ளை நிழல்களை" வார்த்தெடுத்தன.
இந்த வெள்ளை நிழல்களான நம்மூர் ஆண்கள், பெண்களுக்கு அவ்வளவு மரியாதை.. மதிப்பு. எங்கு நோக்கினும் ஐ.டி. பொறியியல் படிக்க, தனியார் பொறியியல் கல்லூரிகளில் அலை மோதுபவரை காணா தவர்கள்   யாரும் இல்லை. ஒரு மிகப் பெரிய சமுதாய வளர்ச்சியை பொருளாதார அளவில் உருவாக்கிய இந்த ஐ.டி. துறை, ஏறத்தாழ 15 ஆண்டுகளில் யாரை ஏற்றி உயர்த்தியதோ அவர்களை தெருப் புழுதியில் வீசி உள்ளது என்ற யதார்த்த உண்மையைக் கண்டு இளைய சமுதாயம் திகிலடித்துக் கிடக்கிறது.
சமீப காலமாக ஐ.டி. நிறுவனங்களைப் பற்றி  வருகிற செய்திகள் உண்மையாகவே இந்தியாவில்தான் இருக்கிறோமா அல்லது ஐரோப்பிய நாடுகளில் இருக்கிறோமா என்று ஐ.டி. பணியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன.

முழுக்க வணிக நோக்கத்தில் செயல்படும் நிறுவனங்கள் இவை என்றாலும், இந்திய தொழிலாளர்கள் அந்நிய நாட்டின் கொள்கைகளால் வதைபடுவதுதான் கொடுமையானதாக உள்ளது. மென்பொருள் நிறுவனங்களின்  கட்டாய பணிநீக்க  விவகாரத்தை வேடிக்கைப் பார்க்கமால், அதில் தலையிட்டு   மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் குரல்கள் பல தரப்பில் இருந்தும் எழ ஆரம்பித்துள்ளன.
இந்திய தொழிலாளர் நலச் சட்டங்களையும், மனித உரிமைகளையும் மதிக்காமல் மென்பொருள் நிறுவனங்கள், 8 முதல் 12  ஆண்டு காலம் பணியாற்றியவர்களை திறன் குறைந்தவர்கள்  ( non-performers) என்று கூறி மேற்கொண்டுள்ள  பணியாளர் ( layoffs ) வெளியேற்றம் பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டி.சி.எஸ். (Tata Consultancy Services) தான் அதிக எண்ணிக்கையிலானவர்களை நீக்கம் செய்து வீட்டிற்கு அனுப்பியுள்ளது. மொத்தம் 25,000 பேர்களை  பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ள இந்நிறுவனம், அவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவர்களை முதல் "தவணையாக" வெளியேற்றி விட்டது. மீதமுள்ளவர்களை அடுத்த மாத இறுதிக்குள் வீட்டுக்கு அனுப்ப டி.சி.எஸ். முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதேபோல், ஐ.பி.எம். நிறுவனம் இந்தியாவில் 2500 பேரை வேலை நீக்கம் செய்திருக்கிறது. இன்னும் பல நிறுவனங்களும் ஆயிரக்கணக்கான மென்பொருளாளர்களை வெளியில் தெரியாமல் வேலைநீக்கம் செய்து வருகின்றன.

வேலை நீக்கப்படும் பொறியாளர்கள் அனைவரும் 8 முதல் 12 ஆண்டுகள் அனுபவம் கொண்ட இடைநிலை மற்றும் முதுநிலை ஊழியர்கள். மென்பொருள் நிறுவனங்களில் முதுநிலை பணியிடங்கள் மிகவும் குறைவு என்பதாலும், குறைந்த ஊதியம் பெறத் தயாராக உள்ள இளைஞர்களைத்  தான் மென்பொருள் நிறுவனங்கள் வேலைக்கு சேர்க்கும் என்பதாலும் இது போன்று செயல்படுகின்றன இந்த "வெள்ளைக்கார நிறுவனங்கள்".
பணி நீக்கப்பட்டவர்கள்  வேறு நிறுவனங்களில் வேலைக்கு சேருவது மிகவும் கடினம். 30 வயதைக் கடந்து ஏராளமான குடும்பப் பொறுப்புகளுடனும், பொருளாதார சுமைகளுடனும் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கும் இவர்கள் திடீரென பணி நீக்கப்பட்டால் அவர்களின் எதிர்காலம் நரகமாகிவிடும் என்பதுதான் யதார்த்தம். அத்துடன் வெளியேற்றும் பணியாளர்களையும் சும்மா அனுப்பாமல், திறன் குறைந்தவர்கள்   ( non-performers)  என்ற முத்திரை குத்தி அனுப்பினால் வேறு நிறுவனங்களில் எங்களுக்கு எப்படி வேலை கிடைக்கும்? என்று குமுறுகிறார்கள் இந்த ஐடி பணியாளர்கள்.

பணியாளர்களை பணியில் அமர்த்தும் போது சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியதைப் போலவே, பணியிலிருந்து ஒருவரை நீக்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளும் உள்ளன. அதேபோல், ஒருவரை பணியிலிருந்து நீக்கவும் வலுவான காரணங்கள் இருக்க வேண்டும். ஆனால், எந்தக்  காரணமும் இல்லாமல், எந்த விதிகளையும் கடைபிடிக்காமல் ஒரு மணி நேர இடைவெளியில் வேலையை விட்டு வெளியில் போகும்படி ஆணையிடுவது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும்.

ஆனால், இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத டி.சி.எஸ். நிர்வாகம், "இவையெல்லாம் சாதாரணம்; சில நேரங்களில் கட்டாய வேலை நீக்கம் செய்துதான் ஆக வேண்டும். ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்கும் அளவுக்கு இதில் எதுவும் இல்லை" என்று கூறி வெந்தப் புண்ணில் வேலை பாய்ச்சியிருக்கிறது.

அனுபவம் வாய்ந்த பணியாளர்களுக்கு அதிக ஊதியம் வழங்க வேண்டும்; அவர்களை நீக்கி விட்டால்

அவர்கள் ஒருவருக்கு தரும் ஊதியத்தில் மூன்று நான்கு பேரை பணியில் அமர்த்திக்கொள்ள முடியும் என்ற முழுக்க முழுக்க வணிக அடிப்படையிலான காரணத்தின் அடிப்படையில்தான் 25,000 மூத்த பணியாளர்களை டி.சி.எஸ். நிர்வாகம் பணிநீக்கம் செய்து வருகிறது. வயது ஆவது என்பது அந்த ஊழியர்களின் குற்றமா என்ன? அவர்களின் இளமையை தாங்கள் பணியாற்றிய நிறுவனத்திற்கே தாரை  வார்த்தவர்கள்  தானே. இந்தச் செயல் சமூக அமைதிக்கு கெடுதலை விளைவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.  

அதேநேரத்தில், 55,000 புதிய ஊழியர்களை பணி நியமனம் செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்திருக்கிறது என்பதிலிருந்தே அதன் உண்மையான நோக்கத்தை உணர்ந்து கொள்ளலாம். இத்தகைய தொழிலாளர் விரோத போக்கு மிக மிக ஆபத்தானது.
ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வந்த நோக்கியா நிறுவனம் மூடப்பட்டதால் சுமார் 8,000 ஊழியர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். அதே போல அதே வழியில் பாக்ஸ்கான் நிறுவனம் இப்போது மூடப்பட்டுள்ளதால் சுமார்  2,000 பேர் வேலை இழந்துள்ளனர். இது வெறும் வேலை இழப்பு அல்ல. ஆயிரக் கணக்கானவர்களின் வாழ்க்கை இழப்பு.

மென்பொருள் நிறுவனங்களில் இருந்து தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதை அந்த நிறுவனங்களின் உள் விவகாரம் என்று கருதி ஒதுங்கியிருக்கக் கூடாது. ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படும் போது அதை தடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமையே.

சமூகத்தின் செல்லப் பிள்ளைகளாக அந்நிய நாட்டு நிறுவனங்கள் உருவாக்கிய இந்த ஐ.டி. தலைமுறை, இப்போது கடும் நெருக்கடியை சந்தித்து உள்ளது. பல ஆயிரம் குடும்பங்கள் பொருளாதார தன்னிறைவு அடைந்தது உண்மை  என்றால்  இப்படி திடீர் என்று பொற்காலத்தை பறித்துக் கொண்டுள்ளதும் கண்ணில் விழுந்த ஊசி தரும் வலியை உணரத்தான் வைக்கிறது.

அரசு தன் கடமையை தட்டிக்கழிக்கக் கூடாது. (vikatan news)
- தேவராஜன்

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top