↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
எதிர்கால கூட்டணி சேர்ப்புக்கு வித்திடும் விதத்தில், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே, அதிரடியாக வேட்பாளர் பெயரை வெளியிட்டு உள்ளது, தி.மு.க., தலைமை. ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டு, ஏற்கனவே தோல்வி அடைந்த ஆனந்த் என்பவரையே, வேட்பாளராக தி.மு.க., அறிவித்து உள்ளது. இதன்மூலம், அ.தி.மு.க., - பா.ஜ., தவிர்த்து, பிற கட்சிகள் நேரடியாக களமிறங்க முடியாத அளவுக்கு, மறைமுக நெருக்கடியை, தி.மு.க., ஏற்படுத்தி உள்ளது.

தி.மு.க.,வின் இடைத்தேர்தல் வியூகத்தால், தே.மு.தி.க., - ம.தி.மு.க., - காங்., - பா.ம.க., - கம்யூ., போன்ற கட்சிகள், என்ன முடிவு எடுக்கப் போகின்றன என்ற எதிர்பார்ப்பு, அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

பொது வேட்பாளர்:

கடந்த இடைத்தேர்தல்கள் போலவே, ஸ்ரீரங்கத்திலும் பொது வேட்பாளரை நிறுத்தலாம் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், அதற்கான முயற்சியை எந்த கட்சியும் துவங்கவில்லை. அதற்கு காரணம், அடுத்த ஆண்டில் சட்டசபைத் தேர்தலை சந்திக்க வேண்டியிருப்பதால், இப்போதே கூட்டணி வலைக்குள் சிக்க கட்சிகள் தயாராக இல்லை.எனவே, பொது வேட்பாளர் முயற்சி தோல்வியில் முடிந்தது. ஆளுங்கட்சி எதிர்ப்பு என்பதில், தி.மு.க., - தே.மு.தி.க., - பா.ம.க., - ம.தி.மு.க., - காங்., மற்றும் பா.ஜ., என, எல்லா கட்சிகளும் ஒரு நிலையில் உள்ளன. ஆனாலும், இக்கட்சிகள் நெருங்க முடியாத அளவுக்கு, இடையில் சிக்கல்களும் உள்ளன.சமீபகாலமாக, பா.ஜ.,வுடன் இணக்கமான போக்கை கொண்டிருந்த தி.மு.க., தலைமை, கட்சிப் பொதுக்குழுவில், பா.ஜ.,வுக்கு எதிராக கடுமையான தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது. இது, இருகட்சிகளும், ஒன்றை ஒன்றை ஆதரிக்க இயலாத சூழலை ஏற்படுத்தி விட்டது.

எதிர்பார்ப்பு:

எனவே, ஸ்ரீரங்கத்தில் பா.ஜ., நேரடியாக போட்டியிடுவது, தவிர்க்க முடியாததாகி விட்டது. மீதமுள்ள எதிர்க்கட்சிகளில், எதெல்லாம் தி.மு.க.,வை ஆதரிக்க போகின்றன என்பது தான், இப்போது எழுந்துள்ள கேள்வி மட்டுமல்ல; தி.மு.க.,வின் மிகப் பெரிய எதிர்பார்ப்பும் அது தான்.லோக்சபா தேர்தலின் போது, மிகப்பெரிய கூட்டணியை அமைக்க, தி.மு.க., தலைமை விரும்பியது. ஆனால், தி.மு.க., வுடன் கூட்டு சேர, தே.மு.தி.க.,- ம.தி.மு.க., - பா.ம.க., மற்றும் கம்யூ., கட்சிகள் முன்வரவில்லை. 

அதுபோன்ற நிலைமை, அடுத்து வரவுள்ள சட்டசபைத் தேர்தலிலும், நேர்ந்து விடக் கூடாது என்பதற்காகவே, இடைத்தேர்தலில் வலை விரிக்க முன்வந்துள்ளது. எதிர்கால கூட்டணியை திட்டமிட்டே, வேட்பாளர் அறிவிப்பை தி.மு.க., அவசரமாக வெளியிட்டு உள்ளது என்கிறது, அறிவாலய வட்டாரம். சில விஷயங்களை கருத்தில் கொண்டே, தி.மு.க., இதை செய்துள்ளதாக, அக்கட்சி வட்டாரத்தில், மேலும் கூறப்படுகிறது. 

அது பற்றிய விவரம் வருமாறு:

*தி.மு.க., முதலில் வேட்பா ளரை அறிவித்து விட்டதால், அக்கட்சியிடம் ஆதரவு கேட்டு,வேறு எந்த கட்சியும் வர முடியாது. அ.தி.மு.க.,வை எதிர்க்கும் கட்சிகள், ஒன்று தி.மு.க.,வை ஆதரிக்க வேண்டும்; அல்லது, நடுநிலைமை வகிக்க வேண்டும். இது, தி.மு.க.,வுக்கு சாதகமானதாக அமையும்.
*வேட்பாளர் தேர்வில், கட்சியில் கோஷ்டி பூசலுக்கு இடம் இல்லாமல் செய்யப்பட்டு உள்ளது. உடனடியாக வேட்பாளரை அறிவித்து விட்டதால், கட்சியில் அதிகார மையமாக இருக்கும் வேறு எவராலும், தன் ஆதரவாளர் என்று யாரையும் கொண்டு வந்து நிறுத்த முடியாது.


*நீதிமன்ற தீர்ப்பால், ஆளுங்கட்சி தலைமை நெருக்கடியில்இருக்கிறது. பிரசாரத்திற்குவருவது கூட சந்தேகமாகிஉள்ளது. எனவே, தி.மு.க., வினரால், ஆளும் தலைமைக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை குறித்தும், அக்கட்சி சந்திக்கும் சட்டச் சிக்கல்கள் குறித்தும், மக்கள் மத்தியில் பிரசாரம் செய்ய முடியும். அது, சட்டசபைத் தேர்தலுக்கும் உதவும். எனவே, இதற்கான களமும், வாய்ப்பும் வேறு கட்சிக்கு போய் விடாமல் தடுக்க, தி.மு.க., முந்திக் கொண்டுள்ளது.

பிந்தியது அ.தி.மு.க.,:

தமிழகத்தை பொறுத்தவரை, சமீபகாலமாக, எந்த தேர்தல் அறிவிக்கப்பட்டாலும், அ.தி.மு.க.,வே முதலில் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது வழக்கம். கடந்த லோக்சபா தேர்தலில், மற்ற கட்சிகள் யாருடன் கூட்டணி வைக்கலாம் என முடிவெடுக்க, திணறிக் கொண்டிருந்த போது, அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தேர்தல் பிரசாரத்தை துவக்கியது. அதேபோல், இடைத்தேர்தல்களிலும் அ.தி.மு.க., முதலில் வேட்பாளரை அறிவித்து, வெற்றி பெற்று வந்தது. தற்போது, ஸ்ரீரங்கம் தொகுதிக்கு, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. வழக்கம் போல், அ.தி.மு.க., உடனடியாக, வேட்பாளர் பெயரை அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாளே, தி.மு.க., வேட்பாளரை அறிவித்து விட்டது.ஜெயலலிதா பதவி இழந்ததால், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள, ஸ்ரீரங்கம் தொகுதியில், யாரை வேட்பாளராக நிறுத்துவது என, முடிவெடுக்க முடியாததால், அ.தி.மு.க., வேட்பாளர் அறிவிப்பு தாமதமாகி வருகிறது. எனினும், வரும் 20ம் தேதி, வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என, தகவல் வெளியாகி உள்ளது. இம்முறை வேட்பாளர் அறிவிப்பில், தி.மு.க., முந்திக் கொண்டது, அக்கட்சியினரிடம் உற்சாகத்தையும், அ.தி.மு.க.,வினரிடம் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ஜெ.,விடம் தோற்றவர்

கடந்த 2011ம் ஆண்டு, நடந்த சட்ட சபைத் தேர்தலில், ஜெயலலிதாவை எதிர்த்து ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டு, தோல்வி அடைந்த அதே வேட்பாளர், தி.மு.க., சார்பில் மீண்டும் களம் இறக்கப்பட்டு உள்ளார். ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலில், தி.மு.க., சார்பில், என்.ஆனந்த் போட்டியிடுகிறார் என, அக்கட்சித் தலைவர் கருணாநிதி, நேற்று அறிவித்தார். முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்த ஆனந்திற்கு, தி.மு.க., சார்பில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுடன், வேட்பாளர் ஆனந்த், நேற்று கோபாலபுரம் வீட்டிற்கு வந்து, கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது, அங்கு விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் வந்தார். தி.மு.க., தலைவராக, 11வது முறையாக கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு, திருமாவளவன் வாழ்த்துதெரிவித்தார். தொடர்ந்து, ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வெற்றி வியூகம் குறித்து, கருணாநிதியும், திருமாவளவனும் ஆலோசனை நடத்தினர்.

காங்கிரஸ் வேட்பாளர் யார்?

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் சார்பில் நடிகை குஷ்புவை களம்இறக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கட்சித் தலைவர் இளங்கோவனிடம் தெரிவித்து வருகின்றனர். அவர் பிரபலமான நடிகை என்பதால், குஷ்பு தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில், கட்சி குறிப்பிட்டு சொல்லக் கூடிய அளவுக்கு ஓட்டுகளை பெறும் என, நம்புகின்றனர். இந்நிலையில், 'தி.மு.க., வேட்பாளர் ஆனந்துக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில், 2016ல் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுடன் காங்கிரஸ் கூட்டணி சேர வாய்ப்பிருக்கிறது' என சிலர், இளங்கோவனை வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து, சத்தியமூர்த்தி பவனில் நேற்று, இளங்கோவன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. 

அதில், அகில இந்திய காங்கிரஸ் செயலர் திருநாவுக்கரசர், சட்டசபை காங்கிரஸ் தலைவர் கோபிநாத், முன்னாள் தலைவர் குமரி அனந்தன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் யசோதா, செல்வப்பெருந்தகை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கோஷ்டி தலைவர்களிடமும் இளங்கோவன், தொலைபேசி மூலமாக, ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் குறித்து கருத்துக்களை கேட்டறிந்தார். 

அதன் பின், நிருபர்களிடம் இளங்கோவன் கூறியதாவது:ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், போட்டியிடலாமா என்பது குறித்து, ஆலோசனை நடத்தியிருக்கிறோம். வேறு கட்சி வேட்பாளருக்கு ஆதரவளிப்பது, பொது வேட்பாளருக்கான முயற்சி எடுப்பது என, பல விஷயங்கள் குறித்தும் கருத்து பரிமாற்றம் நடந்திருக்கிறது. அதை, அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு தெரியப்படுத்துவோம். மேலிட முடிவுக்கு 
கட்டுப்படுவோம். இவ்வாறு, அவர் கூறினார். 

இணையதளத்தில் வெளியீடு:

ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதி வாக்காளர்கள், தங்கள் பெயர், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என, இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.தேர்தல் கமிஷனின், www.elections.tn.gov.in என்ற இணையதளத்தில், ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர் பட்டியல், முழுமையாக வெளியிடப்பட்டு உள்ளது.ஓட்டுச்சாவடி, அதில் இணைக்கப்பட்டுள்ள தெருக்கள் என, அனைத்து விவரங்களும், இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top