அவதார் படத்தின் அடுத்த பாகங்களின் திரைக்கதை எழுதுவதற்கு தாமதமாவதால், இரண்டாம் பாகத்தின் வெளியீடு திட்டமிட்டதை விட ஓராண்டு தள்ளிப்போகும் என இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்துள்ளார்.
2009-ஆம் ஆண்டு வெளிவந்த அவதார் திரைப்படம் இதுவரை வெளியான அனைத்து சினிமாக்களின் சாதனையையும் உடைத்து 2.8 பில்லியன் டாலர்கள் வசூலித்து சாதனை படைத்தது. இதுவரை இந்த சாதனையை எந்தப் படமும் முறியடிக்கவில்லை.
அவதாரின் வெற்றியைத் தொடர்ந்து, அவதார் படத்தின் தொடர்ச்சியாக மேலும் 3 பாகங்கள் திரைப்படங்களாக வெளியாகும் என அதன் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்திருந்தார். அதாவது முழு வீச்சில் படத்தை எடுத்து முடித்து அதை மூன்று பாகங்களாக வெளியிடும் திட்டம் இருந்தது. இதில் முதல் பாகத்தின் வெளியீடு 2016-ஆம் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இது இன்னும் ஓராண்டு தள்ளிப்போகும் என கேமரூன் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய கேமரூன், "தொடர் மூன்று படங்களாக உருவாக்க வேண்டும் என்பதால் அதற்கான கதையை உருவாக்குவதில் சிக்கல் உள்ளது. மூன்று படத்திற்கான கதையும் ஒரே நேரத்தில் எழுத்தப்படுகின்றன. ஒரே ஒரு கதையை எழுதிவிட்டு, அதற்குப் பிறகு ஒன்று என்று நாங்கள் திட்டமிடவில்லை. இதோடு அந்தந்த பாகங்களுக்கு தேவையான கிராபிக்ஸ் காட்சிகள் வடிவமைப்பு, விலங்குகள் மற்றும் சூழலின் அமைப்பு ஆகியவற்றையும் உருவாக்கி வருகிறோம். ஒவ்வொரு பாகமும் அடுத்த பாகத்தோடு ஒழுங்காக சம்பந்தப்பட்டு இருக்க வேண்டும். ரசிகர்கள் குழம்பக் கூடாது" என்று கூறினார்.
முதல் அவதார் படப்பிடிப்பை நியூசிலாந்தில் நடத்திய கேமரூன், அடுத்த பாகங்களின் படப்பிடிப்பையும் அங்கேயே நடத்தத் திட்டமிட்டுள்ளார். லைட் ஸ்டார்ம் எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் ட்வெண்டியத் சென்சுரி ஃபாக்ஸ் இரண்டும் இணைந்து இந்தப் படங்களை தயாரிக்கின்றன.
0 comments:
Post a Comment