ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'ஐ'. இப்படம் ஜனவரி 14-ம் தேதி வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானதால் இப்படத்துக்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா என அனைத்து மாநிலங்களிலும் ஒரே தேதியில் வெளியானது. இன்று (ஜனவரி 16) இந்தியில் இப்படம் வெளியாகி இருக்கிறது.

இதுவரை தயாரான தமிழ்ப் படங்களைவிட 'ஐ' படத்தின் பட்ஜெட் அதிகம் (சுமார் ரூ.100 கோடி என்கிறார்கள்.) என்பதால் எந்த அளவுக்கு வசூல் இருக்கும் என்பதை பல்வேறு தயாரிப்பாளர்கள் எதிர்நோக்கி இருக்கிறார்கள்.
இந்தியாவில் மட்டும் அனைத்து மொழிகளையும் சேர்த்து சுமார் 5000-க்கும் அதிகமான திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 200 திரையங்குகளில் வெளியாகி இருக்கிறது 'ஐ'.

ஷங்கர், விக்ரம் உள்ளிட்ட மொத்த படக் குழுவினரும் இந்தியா முழுவதும் படத்தை விளம்பரப்படுத்தியதால் பிரம்மாண்டமான முதல் நாள் வசூல் கிடைத்திருக்கிறது என்கிறது திரையுலக வட்டாரம்.

தமிழில் முதல் நாளில் மொத்தமாக ரூ.10.5 கோடி வசூல் கிடைத்துள்ளதாம். அதில் நிகர வசூல் ரூ.8 கோடி. ஆந்திரா மற்றும் தெலுங்கானா இரண்டையும் சேர்த்து ரூ.7.5 கோடி வசூலாகி இருக்கிறதாம். கேரளாவில் எவ்வளவு வசூல் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

அனைத்துத் தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக இப்படம் நிறைவேற்றியதா என்றால், 'இல்லை' என்றே சொல்லலாம். படம் பார்த்தவர்கள் விக்ரமின் நடிப்பையும் உழைப்பையும் கொண்டாடுகிறார்களே தவிர, இயக்குநர் ஷங்கரின் திரைக்கதை அமைப்பில் புதுமை என்று எதுவுமே இல்லை என்றே சொல்கின்றனர்.

திரையரங்குக்குச் சென்று ரசிக்கக் கூடிய சாமானிய ரசிகர்கள் திருப்தி அடையும் அம்சங்கள் இருப்பினும், ஷங்கர் படத்துக்கே உரிய 'ரிப்பீட் ஆடியன்ஸ்' என்ற மேஜிக்கை 'ஐ' கைப்பற்றவில்லை.
விமர்சகர்கள் மத்தியில் இப்படத்துக்கு கலவையான விமர்சனமே கிடைத்தது. பலரும் சுஜாதா இல்லாதது ஷங்கர் படங்களுக்கு எவ்வளவு பெரிய இழப்பு என்பதற்கு 'ஐ' ஓர் உதாரணம் என்று கருத்து பதிந்து வருகிறார்கள்.

சமூக வலைதளங்களில் 'ஐ' படத்துக்கு கலவையான விமர்சனமே கிடைத்திருக்கிறது. விக்ரமின் ரசிகர்களிடம் மட்டுமே 'ஐ'க்கு ஏகோபித்த ஆதரவு கிடைத்திருக்கிறது. பலரின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யவில்லை.
விக்ரமின் திறமையையும், மேக்கிங்கையும் சிலாகிக்கும் இணைய விமர்சகர்கள் பலர், திரைக்கதையையும் வசனத்தையும் கழுவியூற்றி வருகின்றனர். குறிப்பாக, திருநங்கை கதாபாத்திரத்தைக் கையாண்ட விதம் இயக்குநரின் பொறுப்பற்றத்தன்மையைச் சுட்டிக்காட்டுவதாக அவர்கள் அடிக்கோடிட்டுள்ளனர்.

ஆந்திராவில் வசூல் ரீதியில் முதல் நாள் பெரியளவில் இருந்தாலும், அங்கு படம் பார்த்த சினிமா ஆர்வலர்களில் பெரும்பாலானோர் சமூக வலைதளத்தில் "இந்தப் படத்துக்கு ஏன் இவ்வளவு பில்டப்" என்கிற ரீதியில் கருத்து பதிந்து வருகிறார்கள்.

இது விடுமுறை நாட்கள் என்பதால் வசூல் அதிகமாக இருக்கும். ஆனால், திங்கட்கிழமைதான் இப்படம் வர்த்தக ரீதியில் வெற்றி பெற்றுள்ளதா? இல்லையா? என்பதை முடிவு செய்ய முடியும்.

தமிழில் U/A சான்றிதழுடன் வெளியாகி இருப்பதால், தமிழக அரசுக்கு 30% வரி கட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திரா, கேரளா, இந்தி, வெளிநாடு ஆகிய இடங்களில் விநியோகஸ்தர்கள் மூலம் வெளியாகி இருப்பதால் வரும் நாட்களில்தான் தயாரிப்பாளரின் வருவாய் நிலவரம் என்று தெரிய வரும்.