↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
இன்னும் வெறி அடங்கவில்லை, அந்தப் படுபாதகனுக்கு. இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள், வடக்கு, கிழக்கு ஈழத் தமிழர்கள்தான் என் தோல்விக்குக் காரணம் என பழிவாங்கத் தயாராகும் ஒரு காட்டு விலங்கைப் போல, "சிங்கள மக்கள் என் பக்கம்தான்' என மார்தட்டியிருக்கிறார், மகிந்த ராஜபக்சே.

அரசுத்தலைவருக்கான ’அலரி’ மாளிகையிலிருந்து வெளியேறி, அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள சொந்த ஊரான மெலமுதனவில் போய், இப்படி திருவாய்மலர்ந்து இருக்கிறார், இனப் படுகொலையாளனும் மாபாதகனுமான அந்த மனிதப் பிறவி!
ஆட்சியதிகாரம் எல்லாவற்றையும் மக்கள் ராஜபக்சே குடும்பத்திடமிருந்து பறித்து, இன்னொருவரிடம் கொடுத்து விட்டார்களே? பெரிய மாற்றம் வந்ததாகச் சொன்னார்களே? ராஜபக்சே குடும்பமே நாட்டைவிட்டு ஓடிப்போய் விட்டது என்றார்களே? எப்படி இப்படி பழைய கோதாவில் பேசமுடிகிறது? என்னதான் நடக்கிறது, இலங்கைத் தீவில்?

ராஜபக்சே குடும்பமோ அதைச் சுற்றியிருந்த கூட்டமோ நாட்டைவிட்டு ஓடிவிடவில்லை. இனப்படுகொலையை வழிநடத்தி உத்தரவுகளை இட்ட மகிந்தவின் தம்பி கோத்தபாய ராஜபக்சே, கடந்த ஞாயிறு வரை, அரசாங்க வீட்டை காலி செய்யவில்லை. இரகசியமாக தப்பிவிட்டதாகச் சொல்லப்படும், குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி.யும் இலங்கையைவிட்டு தான் வெளியே செல்லவில்லை என அறிக்கை விட்டிருக்கிறார்.

இதற்கு நேர்மாறாக, ராஜபக்சே கூட்டத்தால் இராணுவத்தை விட்டு நீக்கப்பட்டு, வெளிநாட்டுக்கு விரட்டப்பட்ட முன்னாள் தலைமைத் தளபதி பொன்சேகாவுக்கு நெருக்கமான முன்னாள் தளபதிகள், நாடு திரும்பியிருக்கிறார்கள். மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, பிரிகேடியர் துமிந்த கெப்பிட்டி வலன ஆகிய இருவருமே, சனியன்று கொழும்பு வந்தடைந்த அந்த அதிகாரிகள்.

இவர்களுடன் பொன்சேகாவுக்கு வேண்டப்பட்ட மேலும் சில இராணுவ அதிகாரிகளும் இலங்கைக்குத் திரும்பவுள்ளனர். இவர்களெல்லாம் 2010 அதிபர் தேர்தலில் பொன்சேகா தோற்றதையடுத்து, பதவிப் பறிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதால், வெளி நாடுகளுக்குச் சென்று வசித்து வந்தனர்.
இப்போது அதிபராகியிருக்கும் மைத்திரிக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றிய பொன்சேகாவின் ஆசியால், இவர்களுக்கு மீண்டும் இராணுவப் பதவிகள் அளிக்கப்படும் என்ற தகவலை நடப்பு நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

இத்துடன், மகிந்த அரசாங்கத்தின் கொலைவெறித் தாக்குதல்கள், அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி, வெளிநாடுகளுக்குச் சென்ற பத்திரிகையாளர்கள், மாற்றுக்கருத்து கொண்டவர்களையும் இலங்கைக்குத் திரும்ப புதிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மைத்திரியின் சார்பில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, 10ம் தேதியன்று கொழும்புவில் செய்தியாளர்களைக் கூட்டி அறிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளாக இலங்கையில் நடந்தேறிய அநியாய, அட்டூழியங்களை நேரில் பார்த்தவர்கள், அனுபவித்தவர்களுக்கு உண்மையில் இது குறிப்பிடத்தக்க மாற்றம்தான். குடிமக்களுக்கான அடிப்படையான உரிமைகளைப் பறித்து, பிறந்து, வளர்ந்த பாரம்பரிய மண்ணைவிட்டு, உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வெளிநாட்டுக்குப் போனவர்களுக்கு, இந்த மாற்றம் பெரும் நிம்மதிதான்!

என்ன ஆட்டம்?
2009 மே 18ம் தேதி முள்ளிவாய்க்காலில் பெரும் மனிதப் படுகொலையை நிகழ்த்தி விட்டு, அதை ஒட்டுமொத்த இலங்கையின் வெற்றியாகச் சித்தரித்துக் காட்டியது முதல், கடந்த 9ம் தேதி அதிகாலை அலரி மாளிகையை விட்டு வெளியேறும்வரை.. ராஜபக்சேக்கள் ஆடிய ஆட்டத்தை அந்தத் தீவு மக்களால் மேலும் தாங்கமுடியவில்லை.

இந்தியாவின் தமிழகத்தின் அரசியல் கோமாளிக்கூத்துகளை எல்லாம் மிஞ்சிவிட்ட புகழ்பாடும் பேனர்கள், பெரிய பெரிய படங்கள், இரத்தக்கறையை முன்னவே காட்டிக்கொண்டதன் அடையாளமோ என்னவோ, ஆளுயர இளங்கருஞ்சிவப்பு சால்வையுடன் வெண்பற்களை எல்லாம் காட்டிச் சிரித்தபடி, எங்கு பார்த்தாலும் மகிந்த ராஜபக்சேவின் படங்கள்..!

சுவர்கள், பேருந்துகள், அரசு வாகனங்கள், பொதுப் போக்குவரத்து வாகனங்கள் என எல்லா இடங்களிலும் படங்களாக இருந்தன. பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் சிறு நிகழ்வுகளிலும் ராஜபக்சேவைத் துதிபாடி பாடல்களைப் பாடவைத்தார்கள்.

இலங்கையின் விடுதலைக்காக தமிழ், சிங்களத் தலைவர்கள் எத்தனையோ பேர் உழைத்தும் அவர்களின் பெயர்களை மறைத்துவிட்டு, ராஜபக்சேவை இலங்கையின் தேசத்தந்தை என்றெல்லாம் கல்விக்கூடங்களில் மாணவர்களுக்கு போதிக்கப்பட்டது.

உச்சகட்டமாக, இலங்கையின் பணத்தாள்களில் ராஜபக்சேவின் படம் அச்சிடப்பட்டது வரை போனது, அதிகார அத்துமீறல். தேர்தலில் தோற்று, அலரி மாளிகையைக் காலிசெய்து சொந்த ஊருக்குப் புறப்பட்டபோதுதான், இந்த அதிகாரம் மறையத் தொடங்கியது.

அதுவரை அலரி மாளிகைக்கு அருகில் அமைக்கப்பட்ட இறங்கு தளத்திலிருந்து, ஹெலிகாப்டரில்தான் மகிந்த அய்யா எங்கேயும் கிளம்புவார். ஊருக்குப் பெட்டி படுக்கையைக் கட்டியபோது காரில் போனாலும், அதிபருக்குரிய பாதுகாப்பு வாகனத் தொடரணியும் உடன் சென்றது'' என்கிற கொழும்பு பத்திரிகையாளர்கள், கடைசி நேரத்திலும் இராணுவத்தின் மூலம் ஆட்சியைத் தக்கவைக்க ராஜபக்சேக்கள் முயன்றார்கள் என அதிர்ச்சிக் கதையையும் சொல்கிறார்கள்.

வாக்குப்பதிவு நடந்து முடிந்ததும் மாலையே வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிட்டது. சொந்த ஊரில் வாக்குப்பதிவு செய்த பின்னர், அலரி மாளிகைக்கு இரவு வந்து சேர்ந்த மகிந்த ராஜபக்சே சோர்வாக இருந்திருக்கிறார்; அன்று இரவு முப்படைகளின் தளபதிகளும் மகிந்தாவின் நெருக்கமான ஆதரவாளர்களும் அங்கு வந்தார்கள். 

வழக்கத்துக்கு மாறான ஏதோ ஒன்று நடக்கப் போவது மட்டும் அவர்களுக்குத் தெரிந்தது. ஆனாலும், அமைதியாகவே இருந்தார் மகிந்த ராஜபக்சே. தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்வதற்காக படுக்கையறையிலிருந்து அந்த இரவு மட்டும், நான்கு முறை கீழே வந்து கருங்காப்பி குடித்திருப்பார்.
அதிபரின் செயலாளரான லலித் வீரதுங்க, அவ்வப்போது அவருக்கு தேர்தல் முடிவுகளைச் சொல்லிக் கொண்டிருந்தார் என்கிறார் இலங்கையின் அரசியல் ஆய்வாளரும் பத்திரிகையாளருமான டி.பி.எஸ். ஜெயராஜ்.

அதிகாலை 4 மணிக்குதான் மைத்திரிக்கு வெற்றி என்பதை மகிந்த நம்பியிருக்கிறார். நாடு முழுவதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் அனைவரிடமும் கேட்டு, மொத்த வாக்குகள் எவ்வளவு என்பதை சரியாக வாங்கிய பின்னரே, அவருக்கு தோல்வி முகம் உரைத்திருக்கிறது. கடநேரம் வரை தனக்கு தோல்வி கிடைக்கும் என அவர் நம்பவே இல்லை என்றும் சொல்கிறார், ஜெயராஜ்.
முடிவுகளை உறுதிப்படுத்திக் கொண்ட மகிந்த ராஜபக்சே, ஈழத்தமிழர் பகுதிகளில் குவிக்கப்பட்டிருப்பதைப் போல, தலைநகர் கொழும்பில் அதிகளவில் படையினரை நிறுத்துமாறு உத்தரவிட்டிருக்கிறார்.

வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னரும் பல இடங்களில் முடிவு அறிவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க, அதை ஏற்க மறுத்துவிட்டார்.

தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைத்து, அவசரச் சட்டத்தின் மூலம் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கு உதவ இராணுவத் தரப்பில் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்கள்.

இதுவரை ராஜ பக்சேவுடனேயே இருந்து செயல் பட்ட படைத் தளபதிகளுக்கேகூட, அவர்களின் குடும்ப ஆட்சி யதிகாரம் கடுமையான கோபத்தை உண் டாக்கியிருந்தது. உள்ளுறையாக இருந்த அதிருப்தியை வாய்ப்பு கிடைத்தபோது, சுதந் திரமாகக் காட்டிவிட்டார்கள், ராணுவ அதிகாரிகள் (ராணு வத் தரப்பிலேயே இத்தகவல் உறுதிப் படுத்தப்பட்டது)

வேறு எந்த வழியுமில்லாத ராஜபக்சே, யாரை கடந்த பத்து வருடங்களாக அரசியலிலிருந்து அகற்றி, ஒடுக்கி வைத்திருந்தாரோ, அந்த அரசியல் எதிரியை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, ‘கௌரவ’ (இலங்கையின் மாண்புமிகு) ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே, தொலைபேசியில் இறைஞ்சிக் கூப்பிட்டார்.
2005-ல் விடுதலைப் புலிகளின் முடிவால் அதிபர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், சொந்தக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலிருந்தே விலக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்ட ரணில் விக்கிரமசிங்கே, கடந்துபோன எல்லாவற்றையும் மறந்து, அதிகாலை வேளையில் அரச அதிபரின் ‘அலரி’ மாளிகைக்குச் சென்றார்.

அப்போது, விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததால் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் உயிருக்கு ஆபத்து என்றும் அதனால் இந்தியாவில் முக்கிய பிரமுகர்களுக்குத் தரப்படுவதைப் போல, தங்களுக்கும் இராணுவப் பாதுகாப்பு தரவேண்டும் என்றும் ரணிலிடம் ராஜபக்சே இறைஞ்சிக் கேட்டுள்ளார்.
இலங்கையை மட்டுமல்ல அருகிலுள்ள இந்தியாவின் கண்ணிலும் விரலைவிட்டு ஆட்டியபடி கர்ஜித்துக்கொண்டு திரிந்த இனவெறி மிருகம், ரணிலின் முன்பு மண்டியிடாத குறையாக உயிர்ப் பிச்சை கேட்டு கெஞ்சியிருக்கிறது.

ராஜபக்சேவின் பல்வேறு முகங்களைப் பார்த்த ரணில் என்னும் சக சிங்கள அரசியல்வாதி, அமைதிப் பேச்சுவார்த்தை எனப் புலிகளிடம் கூறி, கருணாவைப் பிரித்தெடுத்த கனவான் ஆயிற்றே.. புதிய அரசின் சார்பில், ராஜபக்சேவின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு உத்தரவாதம் தந்தார், ஏற்கனவே மைத்திரியுடன் பேசி வைத்தபடி.

அமுக்கமாக நடந்தேறிய பரஸ்பர உடன்பாட்டின்படி, பதவியிலிருந்த போது என்ன பாதுகாப்பு தரப்பட்டதோ, அதே பாதுகாப்புடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது, மகிந்த ராஜபக்சேவின் குடும்பம்.

ஆனால் அங்கு போயும் தன் அரவத்தை அடக்காத மகிந்த ராஜபக்சே, அடுத்து வரும் எம்.பி. தேர்தலில் ஒரு கை பார்த்து விடுவோம் என சிங்கள மக்களுக்கு ஆறுதல் கூறியிருக்கிறார். காரணம், சிங்களர்கள் மத்தியில் குறிப்பாக கிராமங்களில் ராஜபக்சேவின் விளம்பர அரசியலுக்கு பலன் கிடைத்திருக்கிறது, இந்தத் தேர்தலில்.

அதிகாரப்பூர்வமற்ற ஒரு புள்ளிவிவரத்தின்படி, தமிழீழப் பகுதியான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் இந்தத் தேர்தலைப் புறக்கணித்திருந்தால், கூடுதல் வாக்குகள் பெற்று, மகிந்த ராஜபக்சேவே மீண்டும் அதிகாரத்துக்கு வந்திருக்கக்கூடும் என்பது தமிழ் மக்களுக்கு எவ்வளவு கசப்பான யதார்த்தமாக இருந்திருக்கும்?

சிங்களவர் பகுதியில், மைத்திரிபாலவின் வாக்குகள்: 52,39,051 தமிழர்கள் வாழும் (வடக்கு கிழக்கில் 9,78,111), சிங்களவர் பகுதியில் ராஜபக்சேவின் வாக்குகள்: 54,44,490 தமிழர்கள் வாழும் (வடக்கு கிழக்கில் 3,23,600) நல்ல வேளையாக, அப்படியொரு முடிவை எடுக்கவில்லை என மனம் பதறுகிறார்கள், தமிழீழத்தில்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது, இனப்படுகொலை குறித்து ராஜபக்சே மீதோ இராணுவத்தினர் மீதோ பன்னாட்டு விசாரணையை நடத்தமாட்டோம் என பகிரங்கமாகச் சொன்னார், மைத்திரி. பாதுகாப்பு தேவைப்படும் இடங்களில் இராணுவம் தொடர்ந்து குவிக்கப்பட்டிருக்கும் என்றும் தெளிவாகவே சொன்னார். ஆனாலும் அதையும் மீறி, மகிந்தவைத் தண்டிக்க, மைத்திரிக்கு மனமுவந்து தமிழர்கள் வாக்களித்திருக்கிறார்கள்.

முன்னாள் அதிபர் சந்திரிகா கொடுத்த உறுதிமொழியை உறுதியாக நம்பி, மைத்திரியை ஆதரிக்கும் முடிவை எடுத்திருக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இது தொடர்பான பேச்சுவார்த்தையில் சந்திரிகாவின் வழக்குரைஞர், பிரச்சாரத்தில் தமிழர் பிரச்சினையைப் பற்றி அக்கறை கொண்டால் சிங்களவர் மத்தியில் வாக்கு கிடைக்காது எனக் கூறியிருக்கிறார். கூட்டமைப்பின் தரப்பில் அதற்குத் தலையாட்டிவிட்டு வந்திருக்கிறார்கள் என உள்தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதவியேற்ற பின்னர் பேசிய இலங்கை அரசுத்தலைவர் மைத்திரி, நாடு முழுவதும் சட்டப்படியான ஆட்சி நடைபெற உறுதியளிப்பதாகக் கூறினார். மூன்று இன (சிங்களம், தமிழ், முஸ்லிம்) -மக்களும் சமமாக நடத்தப்படுவார்கள் என்றும் சொன்னார்.

இனப்படுகொலைப் போரால் வாழ்க்கையை இழந்து நிற்கும் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை, உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள்- சொந்த இடங்களில் மீள்குடியேற்றம், காணாமல் போனவர்களின் நிலையை அறிவிப்பது, விசாரணையே செய்யப்படாமல் 30 ஆண்டுகள் வரை அரசியல் கைதிகளாக அடைபட்டுக் கிடக்கும் தமிழ் கைதிகளை விடுவிப்பது -ஆகியவை.
எரிமலையாய் வெடித்து வாக்குகளில் காட்டியுள்ள தமிழ் மக்களின் மன உணர்வுகளை மைத்திரி அரசு செயல்படுத்த வேண்டும். அதைச் செய்ய வைப்பது தமிழினத்தின் சகோதரக் கடமை.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top