↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்குத் தண்டனை கொடுத்ததைக் கண்டித்து தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் போராட்டங்கள் நடந்து வருவது ஒருபக்கம் அதிகரித்தபடி இருந்தாலும், மறுபக்கம் ஜெயலலிதாவுக்கு எதிரான மைக்கேல் டி குன்ஹாவின் தீர்ப்பு விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பைக் கூட்டிக் கொண்டேதான் போகின்றன. அந்த வகையில் ரூ. 53 கோடி சொத்துக்களை எப்படி ஜெயலலிதா சேர்த்தார் என்று நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள சில தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 3000 ஏக்கர் நிலங்களை ஜெயலலிதா தரப்பு வாங்கிக் குவித்துள்ளது தீர்ப்பில் விலாவாரியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் வட சென்னை மாவட்ட பதிவாளராகப் பணியாற்றியவரான ராஜகோபால் என்பவர்தான் ஜெயலலிதாவுக்கு எதிரான முக்கிய வாக்குமூலத்தைக் கொடுத்தவர்களில் ஒருவர்.

இதுகுறித்து ராஜகோபால் அளித்த வாக்குமூலத்திலிருந்து சில பகுதிகள்... முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு நான் 1994ம் ஆண்டு அழைக்கப்பட்டேன். அங்கு வி.என். சுதாகரன் இருந்தார்.


அவர் என்னிடம், தமிழகம் முழுவதும் சுற்றுப்ப பயணம் செல்லுங்கள். எங்கெல்லாம் நிலம் விற்பனைக்கு உள்ளதோ அதைக் கண்டறியுங்கள் என்று எனக்கு உத்தரவிட்டார்.

அதன்படி நிலங்களைக் கண்டறிந்ததும், அவற்றை ஜெயலலிதா மற்றும் சசிகலா பெயரில் இருந்த நிறுவனங்களின் பெயர்களுக்கு மாற்றி எழுதுமாறு உத்தரவிடப்பட்டது. மிகவும் குறைந்த விலைக்கு அவற்றை ஜெயலலிதா, சசிகலா பெயர்களில் இருந்த நிறுவனங்களுக்கு மாற்றி எழுதினோம்.

இந்த விவகாரத்தில் சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கரான சிவா என்பவருடன் இணைந்து செயல்படுமாறு நான் அறிவுறுத்தப்பட்டேன்.

இந்த 3000 ஏக்கர் நிலத்தில் நெல்லை மாவட்டத்தில் மட்டும் 1994 ஆகஸ்ட் முதல் 1995 மார்ச் மாத கால இடைவெளியில் 1000 ஏக்கர் நிலங்கள் கைப்பற்றப்பட்டன.

நெல்லை நிலங்களை வாங்குவதற்கு முன்பு 2 முறை சுதாகரனும் எங்களுடன் வந்தார் என்று கூறியுள்ளார் ராஜகோபால்.

சுதாகரன், இளவரசி ஆகியோரை இயக்குநர்களாகக் கொண்டிருந்த ரிவர்வே அக்ரோ பிராடக்ட்ஸ் என்ற நிறுவனம் ரூ. 25 லட்சம் என்ற அடிமாட்டு விலையில் 1200 ஏக்கர் நிலத்தை வாங்கிப் போட்டுள்ளதும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுகுறித்து நீதிபதி குன்ஹா கூறுகையில், சட்ட விதிமுறைகளை ஒட்டுமொத்தமாக வளைத்துள்ளார் சார் பதிவாளரான ராஜகோபால். அவரை ஜெயலலிதா முழுமையாக தவறாகப் பயன்படுத்தியுள்ளார். அனைத்து நிலத்தையும் அரசு நிர்ணயித்த விலையை விட பல மடங்கு குறைத்து வாங்கியுள்ளனர் என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top