முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக், கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘பாலக்காட்டு மாதவன்’. இப்படத்தை எம். சந்திரமோகன் இயக்கியுள்ளார். எஸ். சஜீவ் இதனை தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. பாடல்களை அனிருத் வெளியிட நடிகர் சிவகார்த்திகேயன் பெற்றுக் கொண்டார்.
விழாவில் விவேக் பேசும் போது “பாலக்காட்டு மாதவன்’ படம் முதலில் பட்ஜெட் படம் போலத் தொடங்கி விரிவாகி செலவு அதிகமாகி பெரிய படமாகி விட்டது.
மலேசியாவில் இலவசமாக எடுக்கலாம் என்று அழைத்துப் போனார்கள். ஆனால் பார்த்த இடங்களில் எல்லாம் கட்டணம் வசூலித்து விட்டார்கள். இதில் வரும் விலையுயர்ந்த கார்களுக்குக் கூட லட்ச கணக்கில் வாடகை கொடுத்தோம். எனவே பட்ஜெட் அதிகமாகி செலவு பெரிதாகி விட்டது.
நான் இதில் பாடல் எழுதியிருக்கிறேன். நான் பரம்பரை ஆண்டி அல்ல. பஞ்சத்து ஆண்டி. படப்பிடிப்புக்கு அவசரமாக செல்ல வேண்டி இருந்ததால் நான் எழுத வேண்டியதாகி விட்டது. அதை அனிருத் பாடியுள்ளார்.
ஒரு காமெடியன் கூட ஜோடியாக நடிக்க எல்லா நடிகைகளும் தயங்குவார்கள். ஏதாவது சாக்கு போக்கு சொல்லி தட்டிக் கழித்து விடுவார்கள்; நடிக்கமாட்டார்கள்.
நடிகைகள் எல்லாருமே தங்கள் வருங்காலக் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்றால் நகைச்சுவை உணர்வு உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று பேட்டி யெல்லாம் கொடுப்பார்கள். ஆனால் காமெடியே வாழ்க்கையாக உள்ள, சிரிக்க வைப்பதையே தொழிலாக உள்ள ஒரு காமெடியன் கூட நடிக்க மட்டும் வர மாட்டார்கள்.
ஆனால் என் படத்தில் என்னுடன் நடிக்க சோனியா அகர்வால் சம்மதித்தார். அதற்காக சோனியா அகர்வாலுக்கு நன்றி. அது மட்டுமல்ல அவருடன் நடிக்கும் போது அவரது இடுப்பை நான் கிள்ளுவது போன்ற காட்சி இருந்தது. அப்படி நடிக்க நான் தயங்கினேன். கூச்சப்பட்டேன். ஆனால் சோனியா அகர்வால் கூச்சப்பட வேண்டாம் கிள்ளுங்க நடிப்பு தானே என்றார். தைரியம் கொடுத்தார்.
‘இனி இது உங்க ஏரியா தாராளமாக கிள்ளுங்க’ என்றார். அப்புறம் என்ன? அது போதாதா எனக்கு? தமிழனுக்கு கோடு போட்டாலே ரோடு போடத் தெரியாதா என்ன? பிறகு நானும் புகுந்து விளையாடி விட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
0 comments:
Post a Comment