
டாம் க்ரூஸ் ரொம்பவே சிலாகித்துப் போய்ப் பேசுகிறார் தனது மிஷன் இம்பாசிபிள் 5 படத்தின் ஷூட்டிங்கின்போது ஏற்பட்ட அனுபவம் குறித்து. இப்படத்தில் க்ரூஸ் போட்ட சண்டைகள் குறித்துத்தான் இப்போது பலரும் பேசி வருகிறார்கள். குறிப்பாக, படத்தின் டிரெய்லர் அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளது. அதில் குரூஸ் போட்டுள்ள சண்டைகள் குறித்து அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள்.
ஆனால் டாம் க்ரூஸோ, எனக்குத்தானே தெரியும் அந்த சமயத்தில் நான் சந்தித்த சங்கடங்கள் குறித்து என்று சிரிக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ஏர்பஸ் விமானத்தில் வெளியில் தொங்கியபடி போட்ட சண்டைக் காட்சி மறக்க முடியாது. அந்தக் காட்சியின்போது விமானம் தரையிலிருந்து 5000 அடி உயரத்தில் இருந்தது.
அக்காட்சியின்போது மொத்தம் 8 டேக் வாங்க விட்டேன். பலத்த காற்று, பதட்டம், பீதி என எல்லாமே கலந்த உணர்வில் இருந்தேன். இருந்தாலும் தைரியத்தை விட்டு விடாமல் சண்டைக் காட்சியில் நடித்தேன்.
2வது டேக்கில் நடித்தபோது என் மீது ஏதோ பலமாக மோதுவது போல உணர்ந்தேன். பெரிய சம்பவமாக அது இல்லை. இருந்தாலும் எனது விலா எலும்புகள் நொறுங்கியது போல உணர்ந்தேன்.
ஒரு கட்டத்தில் என்னுடைய உடம்பிலிருந்து எல்லாமே பிதுங்க வந்து விடும் போல உணர்ந்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார் குரூஸ்.
குரூஸ் இப்படி பயங்கரமாக சண்டை போடுவது புதிதல்ல. ஏற்கனவே 2011ம் ஆண்டு வெளியான மிஷன் இம்பாசிபிள் - கோஸ்ட் புரோட்டோகால் படத்திலும் கூட துபாயின் புர்ஜ் கலீபா கட்டடத்தின் மீது தொங்கியபடி சண்டை போட்டு அதிர வைத்தவர் அவர்.

0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.