↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad சினிமாவில் சம்பாதிப்பதை, சினிமாவிலே முதலீடு செய்பவர் கமல் என்ற பெயர் உண்டு. எல்லா தொழில்களிலும் ரிஸ்க் இருக்கிறது, அது சினிமாவுக்கும் விதிவிலக்கல்ல. படம் ஹிட்டாகி லாபம் பார்த்தால் தான் அந்த தயாரிப்பாளர் தப்பிப்பார்... இல்லையேல் தன்னுடைய வீடு,வாசல் எல்லாவற்றையும் இழந்து தெருவிற்கு வந்து நிற்கும் சூழலையும் இந்த சினிமா தொழில் செய்யும் என்பதை யாரும் மறுக்க முடியாது. சினிமாவில் ஜெயித்து வெற்றி பெற்றவர்களும் இருக்கிறார்கள், இதில் தோற்று நடுத்தெருவிற்கு வந்தவர்களும் இருக்கிறார்கள். யார் தோற்றாலும், ஜெயித்தாலும் சினிமா சினிமா தான்....!

இந்த சினிமாவில் பேர் புகழ் அந்தஸ்து எல்லாமே கிடைக்கும். மஞ்சப்பை தூக்கி வந்த காலம் எல்லாம் போய்விட்டது. பல்வேறு துறையை சார்ந்தவர்களும் இப்போது சினிமாவில் படம் எடுக்க வருகின்றனர். இதில் கையை சுட்டு கொண்டு கடன் கட்ட முடியாமல் கை, கட்டி நிற்பவர்களும் உண்டு. சிவி.குமாரை போல் சின்ன பட்ஜெட்டில் பெரிய லாபம் பார்த்தவர்களும் உண்டு. இவ்வளவு ரிஸ்க் தொழிலில் இப்போதுள்ள நடிகர்கள் பலரும் துணிச்சலுடன் தயாரிப்பாளர்களாக களம் இறங்குவது ஆச்சர்யமாக இருக்கிறது. சில படங்களில் நடித்து சேர்த்த பணத்தை தயாரிப்பில் விடணுமா என்பதை விட, நான் எடுக்கும் கதை ரசிகர்களை போய் சேரும் என்ற நம்பிக்கையோடு பல நடிகர்கள் இப்போது தயாரிப்பாளர்களாகி வருகின்றனர்.

என்.எஸ்.கிருஷ்ணன், சந்திரபாபு, எம்.ஜி.ஆர்., சிவாஜி, எஸ்.எஸ்.ஆர்., என்று ஆரம்ப கால சினிமா வரலாற்றில் தொடங்கிய சினிமா தயாரிப்பு, இப்போதும் சில நடிகர்கள் ஆர்வமாக சொந்த நிறுவனத்தில் படம் எடுக்க விரும்பகின்றனர். அவர்கள் யார் யார் என்பதை பற்றிய ஸ்பெஷல் ரிப்போர்ட் இது...


சூர்யா

1997-இல் ''நேருக்கு நேர்'' படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி அஞ்சான் படம் வரை கிட்டத்தட்ட 35 படங்களில் நடித்து விட்டார். தற்போது தன் மகன் மகள்(தியா, தேவ்) என்ற பெயரின் முதல் எழுத்தை வைத்து 2டி எண்டர்டெயின்மென்ட் என்ற சொந்த நிறுவனத்தை தொடங்கி விட்டார். முதல் படமாக மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தை தனது மனைவி ஜோதிகாவை வைத்து தயாரித்து வருகிறார். சமீபத்தில் தான் இதன் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. தொடர்ந்து பாண்டிராஜ் படம், சூர்யா அடுத்து நடிக்கும் ஹரி படம் என்று அடுத்தடுத்து படங்களை தயாரிக்க இருக்கிறார்.

விஷால்

அப்பா ஜி.கே.ரெட்டி பல படங்களை தயாரித்துள்ளார். அண்ணன் விக்ரம் கிருஷ்ணா பல படங்களை தயாரித்துள்ளார், சில படங்களில் நடித்தும் உள்ளார். விஸ்காம் முடித்த விஷால், இயக்குனராக ஆசைப்பட்டு, அர்ஜுனிடம் வேதம் படத்தில் உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ளார். 2004-ல் செல்லமே படம் மூலம் எதிர்பாராத விதமாக நடிகராக அறிமுகமானார். பாலா, லிங்குசாமி, ஹரி, சுந்தர்.சி என்ற பல இயக்குனர்களிடம் நடிகராக அனுபவம். 2013-ல் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தை தொடங்கினார். பாண்டியநாடு படத்தை வெளியிட்டார். அடுத்து நான் சிகப்பு மனிதன், ஜீவா, பூஜை போன்ற படங்களை தயாரித்து வெளியிட்டார். தற்போது ஆம்பள படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தொடர்ந்து சில படங்களுக்கு கதை கேட்டு வருகிறார் விஷால்.


தனுஷ்

அண்ணன் இயக்குனர், அப்பா இயக்குனர் என்ற அடையாளத்தோடு 2002-ல் ''துள்ளுவதோ இளமை'' படம் மூலம் நடிகரானார் தனுஷ். ஆரம்பத்தில் அப்பா, அண்ணன் இயக்கத்தில்

நடித்து வந்தார். சுப்ரமணிய சிவாவின், ''திருடா திருடி'' படம் ரசிகர்களிடம் தனுசுக்கு பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. ஆடுகளம் படம் தேசிய விருதை பெற்று தந்தது. இந்தியில், ரான்ஜனா படம் பெரிய அடையாளத்தை கொடுத்தது. கொலவெறி பாடல் உலகம் முழுக்க பிரபலமாக்கியது. நடிகர் தயாரிப்பாளர், ஸ்கிரிப்ட் ரைட்டர், பாடல் ஆசிரியர், பாடகர் என்ற பலமுகங்கள் இவருக்கு உண்டு. 2012-ல் வொண்டர் பார் பிலிம்ஸ் என்ற பேனர் தொடங்கி 3 படத்தை வெளியிட்டார். எதிர்நீச்சல் இவருக்கு பெரும் லாபத்தை கொடுத்தது. தொடர்ந்து சிவகார்த்திகேயன் படம், வெற்றிமாறன் படம் என்று பிசியான தயாரிப்பாளராக இருக்கிறார்.

சித்தார்த்

2002-ல் கன்னத்தில் முத்தமிட்டால் படம் அறிமுகம். பாய்ஸ் படம் தாமதம், மணிரத்னம் முந்தி கொண்டார். பிசினஸ்மேனேஜ்மெனட் படித்தவர். தமிழ், தெலுங்கு, இந்தி என்று 25 படங்கள் நடித்து விட்டார். உதவி இயக்குனர், ஸ்கிரிப்ட் ரைட்டர், நடிகர், பாடகர், என்ற பல முகங்கள் இவருக்கு உண்டு. 2012-இல் இட்டாக்கி எண்டர்டெயின்மென்ட் என்ற சொந்த நிறுவனத்தை தொடங்கி, லவ் பெலியர் என்ற தெலுங்கு படத்தையும், தமிழில் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தையும் தயாரித்தார் சித்தார்த். தற்போது சில கதைகளை கேட்டு வருகிறார். விரைவில் அடுத்த தயாரிப்பு பற்றி அறிவிப்பார். இவருக்கும் படம் இயக்க ஆசை இருக்கு. மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக இருந்துள்ளார்.


விதர்ர்த்

எந்த சினிமா பின்னணியும் இவருக்கு இல்லை. டிரைவராக பணி தொடங்கிய இவரின் கடின உழைப்பு, கூத்து பட்டறையின் பயிற்சி என்று... சினிமாவை அடையாளம்

காட்டியது. 2001-ல் மின்னலே படத்தில் சின்ன ரோல், மற்றும் சண்டைக்கோழி, கொக்கி, லாடம் என்று சின்ன சின்ன ரோலில் நடித்து, பிரபு சாலமனின், ''மைனா'' படம் மூலம் தன்னை ஒரு சிறந்த நடிகராக நிலையான இடத்தை பிடித்து கொண்டார். கிட்டத்தட்ட 25 படங்களில் நடித்தவர், தன் தம்பிகளை தயாரிப்பாளராக பார்க்க ஆசைப்பட்டு ஒரு சில மாதங்கள் முன்பு, டான் புரொடக்ஷ்ன் என்ற நிறுவனத்தை தொடங்கி, காக்கா முட்டை பட இயக்குனர் மணிகண்டனின் குற்றம் கடிதல் என்ற படத்தை எடுத்து வருகிறார். தொடர்ந்து நல்ல கதை கொண்டு வரும் இயக்குனர்களுக்கு வாய்ப்பு தர விரும்புகிறார்.

விஜய்சேதுபதி

எந்த சினிமா இலக்கணமும் இல்லாமல் முயற்சியும், உழைப்பும் இருந்தால் முன்னேறலாம் என்ற வார்த்தைக்கு உதாரணம் விஜய்சேதுபதி. மார்கெட்டிங் வேலை பார்த்தவர்.வேலை பிடிக்காமல் துபாய் சென்று கணக்காளராய் வேலை பார்த்தார், அதுவும் பிடிக்காமல் சென்னை வந்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து, பின் கூத்துபட்டறையில் கணக்காளராய் வேலை பார்த்தார். அங்கே நடிப்பு வாசம் பிடித்து டிவி சீரியல்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட குறும்படங்களில் நடித்து, 2004-ல் செல்லமே மற்றும் புதுபேட்டை, வெண்ணிலா கபடி குழு, டிஷ்யூம், நான் மகான் அல்ல போன்ற படங்களில் சிறு ரோலில் தலை காட்டினார் விஜய்சேதுபதி. பின்னர் 2011-ல் தென்மேற்கு பருவகாற்று படம் நாயகனாக உயர்த்தியது. அவ்ளோதான் வெற்றி இவரை இறுக்கமாக பிடித்து கொண்டது. பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என அடுத்தடுத்த படங்கள் வெற்றியாக அமைந்து இன்று இவரை தயாரிப்பாளராக உயர்த்தியுள்ளது. விஜய்சேதுபதி பிலிம்ஸ் என்ற பேனர் தொடங்கி ஆரஞ்சு மிட்டாய், மேற்கு தொடச்சி மலை போன்ற படங்களை தயாரித்து வருகிறார். விரைவில் ஆரஞ்சு மிட்டாய் ரிலிஸ் ஆக உள்ளது.


ஆர்யா

இன்ஜினியர் படித்தவர். சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்தவர் அந்த வேலைக்கு முழுக்கு போட்டுவிட்டு ஒளிப்பதிவாளர் ஜீவாவை சந்தித்து உள்ளம் கேட்குமே படத்தின் மூலம் அறிமுகமானார். பல வெற்றி படங்களை கொடுத்திருகிறார். பாலா, விஷ்ணுவர்தன் விஜய் போன்ற இயக்குனர்களோடு வேலை பார்த்துள்ளார். 2010-ல் ''தி ஷோ பீப்புள்'' என்ற பேனரில் பாஸ் என்ற பாஸ்கரன் படத்தை தயாரித்தார். பின் அமரகாவியம், ஜீவா போன்ற படங்களை தயாரித்துள்ளார். கைவசம் 5 படங்களை வைத்துள்ளார். தற்போது, ஆர்யா, ராஜேஷ் இயக்கத்தில், தமன்னாவுடன் நடித்து வருகிறார்.

ஸ்ரீகாந்த்

எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவுக்குள் வந்தவர்களில் ஸ்ரீகாந்த்தும் ஒருவர். படிக்கும் போதே மாடலிங் செய்தவர். 2002-ல் ரோஜாக்கூட்டம் படம் மூலம் அறிமுகம். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் கிட்டத்தட்ட 33 படங்களில் நடித்துள்ளார். தற்போது கோல்டன் பிரைடே பிலிம்ஸ் என்ற பேனரில் நம்பியார் என்ற படத்தை தயாரித்துள்ளார். விரைவில் படம் வெளியிட ஏற்பாடுகள் செய்து வருகிறார். தொடர்ந்து நல்ல படங்கள் தயாரிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

சந்தானம்

லொள்ளு சபா என்ற டிவி நிகழ்ச்சி மூலம் ஒவ்வொருவரின் வீட்டிலும் தன் தொடர் பேச்சால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து கொண்டவர் சந்தானம். இந்த ஷோவை பார்த்த சிம்பு, 2004-ல் தனது மன்மதன் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அந்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்தி கொண்டு, ரஜினி, விஜய், அஜித், சூர்யா, ஆர்யா, என்று அத்தனை ஹீரோக்களின் முக்கிய பெரிய படங்களில் எல்லாம் காமெடி பண்ணினார். வடிவேலு விட்ட இடத்தை சந்தானம் கெட்டியாக பிடித்து கொண்டார். ஹீரோக்களின் கால்ஷீட் கேட்கும் போதே முக்கியமாக இவரது கால்சீட் கேட்ட காலம் உண்டு. 2013-ல் ஹேண்ட்மேட் பிலிம்ஸ் என்ற பேனரில், ''கண்ணா லட்டு தின்ன ஆசையா'' என்ற படத்தை தயாரித்தார். 2014-ல் ''வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்'' என்ற படத்தை கொடுத்தார். தொடர்ந்து முருகானந்தம் இயக்கும் படத்தில் அவர் பேனரில் நடித்து வருகிறார். தவிர ஐ, லிங்கா, நண்பேன்டா என்று பல படங்களில் மற்ற ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார்.

இன்றைய இளம் நடிகர்கள் பலர் தயாரிப்பாளராவது நல்ல விஷயம் தான். தாங்கள் மட்டுமே பலன் பெறாமல் நிறைய திறமையோடு காத்திருக்கும் இளம் தலைமுறையினருக்கும் இவர்கள் வாய்ப்பளிப்பது வரவேற்கத்தக்கது.

சரி, இதைப்பற்றி தயாரிப்பாளர்கள் சிலர் என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம்...

அம்மா கிரியேசன்ஸ் சிவா பேசுகையில், என்னை கேட்டால் எல்லா நடிகர்களும் தன் சொந்த பேனரில் ஒரு படமாவது நடிக்க வேண்டும். அப்போது தான் படத்தின் வரவு-செலவு பற்றி அவர்கள் தெரிந்து கொள்ள முடியும். எல்லா தொழில்களையும் போல சினிமாவிலும் ரிஸ்க் அதிகம். ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் இந்த தொழிலுக்கு வரக்கூடாது. பின் யாரையும் குறை சொல்லி எந்த பயனும் இல்லை. நடிகர்கள் எல்லா துறையையும் தெரிந்து வைத்து கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து என்கிறார் சிவா.

திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் ஞானவேல் ராஜா கூறுகையில், நடிகர்கள், தயாரிப்பாளர்களாவது நல்ல விஷயம். ஒரு தயாரிப்பாளரின் வேலையை புரிந்து கொண்டு அடுத்து, அவர்களை கமிட் பண்ணும் படங்களுக்கு அந்த அனுபவம் பெரும் உதவியாக இருக்கும் என்கிறார்.

தயாரிப்பாளர் சி.வி.குமார்

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் சரியான படங்களை தேர்ந்து எடுத்து, எந்த நஷ்டமும் இல்லாமல் ஓடி கொண்டிருக்கும் நிறுவனம் இவருடையது. இதுவரை 9 படங்கள் ரிலிஸ் செய்து விட்டார். கைவசம் 6 படங்கள் இருக்கிறது. நடிகர்கள், தயாரிப்பாளர்களாவது பற்றி இவர் கூறுகையில், ரொம்பவும் வரவேற்க தக்க விஷயம். நடிகர்கள் மட்டுமில்லை, எந்த துறையில் இருந்தும் இந்த துறைக்கு வரலாம். ஆனால் திட்டமிடுதல் அவசியம் என்கிறார் குமார்.

யாராக இருந்தாலும் நிச்சயம் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். இரவு பகலாக உழைத்து, சம்பாதித்த பணத்தை, சினிமா மீது உள்ள காதலால், நல்ல கதை, நடிகர்களை நம்பி படம் எடுக்க வருபவர்கள் ஏராளம். இதில் வெற்றி பெற்றவர்களும் இருக்கிறார்கள். வீடு, வாசல் எல்லாவற்றையும் இழந்தவர்களும் இருக்கிறார்கள். சரியான முடிவை சரியான நேரத்தில் எடுக்க வேண்டும், கணக்கு வழக்கை சரி பார்த்து பொறுப்பான வேலையை இன்னொருவரிடம் ஒப்படைத்தாலும், பணம் போட்டவர்களும் இதில் பங்கு எடுத்தல் அவசியம். எல்லாத்தையும் தவற விட்டு தூக்கம் இழந்து, துன்பம் துரத்தி, நம்பிக்கையை தொலைத்து, சேர்த்த பணத்தை இழக்காமல், நாளைய சந்ததியரையும் மனதில் வைத்து புதிய முயற்சியோடு உங்களது கடின உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால் எல்லா நட்சத்திரங்களும் எளிதில் ஜெயிக்கலாம்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top