“லிங்கா’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் இயக்குநர் அமீர் பேசிய பேச்சினால் அது அரசியல் மேடையாகிவிட்டது..” என்று ‘லிங்கா’ படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் வருத்தப்பட்டிருக்கிறார்.
மேலும் அமீரின் அன்றைய பேச்சு ரஜினியை கையைப் பிடித்திழுப்பது போல அமைந்துவிட்டதாக திரையுலகத்திற்குள்ளும் கசமுசா பேச்சுக்கள் எழுந்துள்ளது. அது குறித்து இந்த வாரத்திய ‘குமுதம்’ பத்திரிகையில் அமீர் பேட்டியளித்திருக்கிறார்.
அமீர் தன் பேட்டியில், ”ரஜினி எங்கே இருந்தாலும் அங்கே அரசியல் இருக்கும்.. அரசியலுக்கு வர ரஜினிக்கு தகுதியிருக்கிறதா இல்லையா என்பதை அவர்தான் விளக்க வேண்டும். அந்தப் பொறுப்பு அவருக்கு இருக்கிறது. இன்றைக்கு ஊடகங்கள் என்ன சொல்கின்றன..? ‘ஒவ்வொரு முறையும் அவரது படங்கள் வெளிவரும்போது ரஜினி வேண்டுமென்றே இந்த பரபரப்பை ஏற்படுத்துகிறார்..’ என குற்றம்சாட்டுகின்றன.
ரஜினிக்கு ஒரு கிளீன் இமேஜ் உள்ளது. வைகோவுக்கு அந்த இமேஜ் 96-ல் இருந்தது. இப்போது இல்லை. ராமதாஸுக்கு இருக்கிறதா..? பா.ம.க. ஜாதிக் கட்சியாக சுருங்கிவிட்டது. நல்லகண்ணு, சங்கரய்யாவுக்கு அந்த இமேஜ் இருக்கிறது. ஆனால் மக்கள் கூட்டமில்லை. ஆகவே ‘ரஜினியை தலைவனாக ஏற்கிறேன்’ என அந்த மேடையில் சொன்னேன்.
‘சி.எம். பதவி காலியாக இருக்கிறது. உடனே வந்து உட்காருங்கள்’ என்று நான் சொல்லவில்லை. விழாவில் பேசிய பலரும் ரஜினியிடம் ‘உங்களுக்கு ஒரு பதவி, பொறுப்பு காத்திருக்கிறது’ என்று திரும்பத் திரும்ப பூடகமாகவே பேசினார்கள்.
தெரியாமல்தான் கேட்கிறேன்.. அவருக்கு என்ன பதவி காத்துக் கொண்டிருக்கிறது..? ஜட்ஜ் பதவியா..? கவர்னர் பதவியா..? அதனால்தான் நான் வெளிப்படையாக ‘ஸார்.. எல்லாரும் உங்களை சி.எம். ஆகச் சொல்கிறார்கள்…’ என சொன்னேன்..
20 வருடங்களாக தமிழகத்து மக்களும், அவரது ரசிகர்களும் ரஜினியை அரசியலுக்கு அழைத்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். அவரும் ‘இதோ’, ‘அதோ’ என சொல்கிறார். வருவீர்களா..? இல்லையா..? விருப்பம் இருக்கிறதா..? இல்லையா..? என்பதை அவர் இப்போதாவது மக்களுக்குச் சொல்லியே ஆக வேண்டும்.
நாம் அவரது சொந்தப் பிரச்சினை பற்றி கேட்கவில்லை. சமூகம் சார்ந்த பிரச்சினைக்குத்தான் தீர்வு கேட்கிறோம். அதற்கு இந்தப் பிறந்த நாளிலாவது ரஜினி விடை கொடுக்க வேண்டும். அவர் அப்படிச் சொல்லாமல் திரும்பத் திரும்ப சர்ச்சையை மட்டுமே வளர்த்து, தன் திரைப்படத்தை வியாபாரம் செய்யப் பார்க்கிறார் என்றால், இதைவிட ஒரு பெரிய துரோகத்தை தமிழக மக்களுக்கு அவர் செய்துவிட முடியாது..” என்று காரசாரமாக பேட்டியளித்திருக்கிறார்.
இது அன்றைக்கு ‘லிங்கா’ பட மேடையில் பேசியதைவிட அதிகமாக இருக்கிறது..!
இயக்குநர் அமீர் ரொம்ப ஓவரா போறாரோ..?
0 comments:
Post a Comment