சச்சினை விரட்டி விரட்டி காதலித்து திருமணம் செய்து கொண்டது எப்படி என்பது குறித்து புத்தக வெளியீட்டு விழாவில் அவரது மனைவி அஞ்சலி மனம் திறந்து பேட்டியளித்தார். மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் எழுதிய சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா நேற்றிரவு மும்பையில் நடைபெற்றது. இதில் கிரிக்கெட் பிரபலங்கள் தவிர சச்சின் மனைவி அஞ்சலியும் கலந்து கொண்டார். சச்சினுடனான தனது காதல் அனுபவத்தை அஞ்சலி கூறியது இப்படி:
நான் சச்சினை முதல் முறையாக மும்பை ஏர்போர்ட்டில்தான் பார்த்தேன். அப்போது அவருக்கு வயது 17. பார்த்த உடனே காதல் என்பார்களே அதுபோல காதல் கொண்டேன்
நான் எனது தாயாரை பிக்-அப் செய்வதற்காக ஏர்போர்ட்டுக்கு நண்பரோடு சென்றிருந்தேன். அப்போது சச்சின் ஏர்போர்ட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். என்னுடன் வந்த நண்பர்தான், இது இளம் வயதிலேயே பல மேஜிக்குகளை செய்துவரும் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் என்று எனக்கு காண்பித்தார். ஏனெனில் அப்போது நான் கிரிக்கெட் பார்ப்பது கிடையாது. ஆனால் பார்த்த உடனேயே சச்சினின் கியூட்டான முகம் எனக்குள் பதிவாகிவிட்டது.
சச்சின்… சச்சின் என்று கத்தியபடியே அவர் பின்னால் சென்றேன். ஆனால் அசட்டையே செய்யாமல் சச்சின் சென்றுவிட்டார். எனது தாயை பிக்-அப் செய்ய வந்ததையே நான் அப்போது மறந்து விட்டேன்.
இந்த சம்பவத்துக்கு பிறகு சச்சினை மறக்க முடியாமல், அவரது தொலைபேசி எண்ணை கண்டுபிடித்து வீட்டுக்கு போன் செய்தேன். அப்போது ஏர்போர்ட்டில் நான் பார்த்தது, கத்தியது போன்றவற்றை சொல்லி என்னை நினைவு இருக்கிறதா என்று சச்சினிடம் கேட்டேன். அவரும் நினைவு இருக்கிறது என்றார். இருந்தாலும் எனக்கு சந்தேகம் நீங்கவில்லை. நான் என்ன கலர் ஆடை உடுத்தியிருந்தேன் என்று சச்சினிடம் கேட்டேன். அவர் நீங்கள் ஆரஞ்சு நிற டீ சட்டை அணிந்திருந்தீர்கள் என்று சரியாக சொன்னார். இதை கேட்டதும் எனது மனதுக்குள் பட்டாம்பூச்சிகள் பறந்தன.
இப்படியாக தொலைபேசியில் எங்கள் காதல் தொடர்ந்தது. ஒருநாள் சச்சினின் வீட்டுக்கே நான் சென்றேன். ஆனால் வீட்டில் உள்ளவர்களுக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக நான் பத்திரிகையாளர் என்று பொய் சொல்லிவிட்டு சச்சினை பேட்டி எடுப்பதைப்போல நடித்து சென்றேன். இருப்பினும் சச்சினின் அண்ணிக்கு என்மீது சந்தேகம் வந்துவிட்டது. அந்த பெண்ணை பார்த்தால் பத்திரிகை நிருபர் போல தெரியவில்லையே என்று சச்சினிடம் கேட்டுள்ளார்.
என்னை அவரது வீட்டில் பார்த்ததும் சச்சினுக்கு வெடவெடத்து போனது. ஒரு பெண்பிள்ளை எப்படி என் வீட்டுக்குள் வரலாம் என்று முதலில் கடிந்து கொண்டார். ஆனால் வீட்டை விட்டு கிளம்பும்போது ஸ்பெஷல் சாக்லேட்டுகளை எனக்கு அளித்தனுப்பினார். இதை சச்சினின் அண்ணியும் பார்த்து விட்டார்.
காதலிக்கும் காலங்களில் பெரும்பாலும் சச்சின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருப்பார். அப்போது ஐ.எஸ்.டி போன்களுக்கான கட்டணம் அதிகம் என்பதால் இரவு 10 மணிக்கு மேல்தான் காத்திருந்து சச்சினுக்கு போன் செய்வேன். நான் படித்த மருத்துவ கல்லூரி வளாகத்தை தாண்டி வெளியே உள்ள பகுதியில்தான் போன் பேச வருவேன். அங்கு ரவுடிகள் நடமாட்டம் அதிகம் இருக்கும். இருந்தாலும், சச்சினிடம் பேச வேண்டும் என்பதற்காக பயத்தை மறைத்துக்கொண்டு செல்வேன். கடிதம் எழுதுவதுதான் அப்போது பெஸ்ட் வழியாக இருந்தது.
ஒருவழியாக எங்கள் காதலை வீட்டில் தெரியப்படுத்தும் முடிவுக்கு இருவரும் வந்தோம். ஆனால் சச்சின் தனது வீட்டில் இதுகுறித்து தெரிக்க முடியாது என்று கூறிவிட்டார். ஆக்ரோஷமான ஒரு வேகப்பந்து வீச்சாளரை எதிர்கொள்வதைவிட குடும்பத்தாரிடம் காதலை சொல்வதுதான் எனக்கு பெரிய கஷ்டம் என்று சச்சின் கூறிவிட்டார். பிறகு என்ன…. நான்தான் சச்சின் பெற்றோரிடம் விஷயத்தை எடுத்துச் சொன்னேன். அப்போது நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்ததால் சச்சினுக்கு உதை கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன்.
கிரிக்கெட் ஜாம்பவானின் மனைவியாக இருப்பது வெளியில் இருந்து பார்க்க சுகமாக தெரியும். ஆனால் அது பெரிய முள் கிரீடம். கணவரை விட்டு வெகுநாட்கள் பிரிந்திருக்க வேண்டியது வரும், கணவர் விளையாடும் நாட்டுக்கு உடன் சென்றாலும் ஒரு சிக்கல் ஏற்படும். அந்த தொடரில் கணவர் சரியாக விளையாடாமல் இந்தியா தோல்வியும் அடைந்தால், நம்மால்தான் இந்த நிலை ஏற்பட்டிருக்குமோ என்ற தர்ம சங்கடமும் ஏற்படும். அதிலும் குழந்தைகளை கூட்டிக் கொண்டு பயணிப்பது அதைவிட கஷ்டம். இவ்வாறு அஞ்சலி கலகலப்பாக பேட்டியளித்தார்.
சச்சின்-அஞ்சலி தம்பதிக்கு சாரா மற்றும் அர்ஜுன் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சாரா பிறக்கும்போது முதன்முறையாக தந்தையான சச்சினுக்கு அந்த உணர்வை சொல்ல வார்த்தைகளே இல்லையாம்.
0 comments:
Post a Comment