↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

விளம்பரத்தில் கோக் குடிக்கச் சொன்னதும், திரைப்படத்தில் கோக்கைச் சாடியதும் நடிப்பு என்று விஜய்க்கு நன்றாகத் தெரியும். திரைப்படத்தில் ஒரு காதலுக்காகவோ, மனைவிக்காகவோ உருகுவதும், வாழ்வதும் நடிப்பு என்றும், நிஜத்தில் ஒன்று போனால் இன்னொன்று என்று தன் சொந்த வாழ்க்கையை வெளிப்படையாக வாழும் தெளிவும் கமலுக்கு உண்டு. 

படத்தில் நூறு பேர் வந்தாலும், ஒற்றை 'பாட்சா'வின் பெயரில் நடு நடுங்க வைத்து, நிஜத்தில் தன் திரைப்படம் வரும் நேரம் தன் அரசியல் கொள்கைகளை மாறி மாறி அமைத்துக்கொள்ளும் தெளிவும் ரஜினிக்குப் புரியும்.

நடிகர்களோ, நடிகைகளோ அவர்கள் தொழிலில் கவனமாக இருக்கிறார்கள், ரசிகர்கள் நடிப்பை ரசித்து விமர்சித்துப் போகும்வரை எந்தக் குழப்பமும் இல்லை.

நடிகர்கள் நடிகைகள் தங்கள் ரசிகர்களைக் குறி வைத்து, இந்தக் காபியைக் குடி, கோக்கைக் குடி என்று சொன்னாலும், சிகரெட் பக்கெட்டில், புகைப் புற்றுநோயை வரவழைக்கும் என்று அறிவிப்புச் செய்து வெளியிடுவது போல, நாங்கள் பணத்திற்காகத் தான் இந்த விளம்பரத்தில் நடிக்கிறோம், மற்றபடி பொருளின் தேவை உங்களின் பொருளாதாரத்தைச் சார்ந்தது, அதன் தரத்திற்கோ, பின்விளைவுக்கோ நாங்கள் பொறுப்பில்லை என்று சொல்லி விடலாம்.

படித்தவனோ, படிக்காதவனோ நடிப்பினால் ஈர்க்கப்பட்டு, தன்னுடைய ரசிகன் வழி மாறிச் சென்றுவிடக்கூடாது என்று நினைக்கும் நடிகர்கள் மட்டுமே சமூகத்துக்குப் பணியாற்றுபவர்கள்; மற்ற எல்லாரும் பிழைப்பைப் பார்ப்பவர்கள்.

நடிகர்களில் பலர் சமூகப்பணி செய்கிறார்கள், நடிப்போ, வாழ்க்கையோ தன் கொள்கையில் தனக்கே சந்தேகம் வரும்படியே பலர் நடந்துகொள்கிறார்கள்.

விஜய் போன்ற நடிகர்கள் அரசியலுக்கு வந்து அமைச்சர் கனவு கண்டால், தன் ரசிகர்கள் கோக் குடிக்க வேண்டுமா அல்லது கோக்கை எதிர்க்க வேண்டுமா என்று தெளிவுப்படுத்த வேண்டும்.
வருடத்திற்கு ஒரு படம் செய்து, திரைக்கு வரும் வேளையில் வெளிச்சத்திற்கு வரும் ரஜினி, பாலபிஷேகம் என்று தங்கள் ரசிகர்கள் செய்யும் அலப்பரையை நிறுத்த சொல்லி, நல்ல காரியங்கள் செய்து தங்கள் அன்பை வெளிக்காட்டச் சொல்ல வேண்டும், கமல் தன் ரசிகர்களை வழிப்படுத்தியது போல, அல்லது நடிப்பு என் தொழில், மக்களை ஏமாற்ற விரும்பவில்லை என்று விளம்பரங்களை ஒதுக்கிய அஜித் போல் நடிகர்கள் நேர்மையாக இருக்க வேண்டும்.

சமூகப் பணிகளில், ராகவா லாரன்ஸ், சூர்யா போன்ற நடிகர்களும், நடிகைகளும் ஈடுபட்டிருந்தாலும், பொதுவாகத் தமிழ் நடிகர்கள், இயக்குனர்கள் நிஜத்திற்கும் நடிப்பிற்கும் உள்ள இடைவெளியைக் குறைத்துக்கொள்ள வேண்டும், அல்லது அரசியலுக்கு வரக் கூடிய கனவையாவது மாற்றிக் கொள்ள வேண்டும். சிங்களவன் பணம் என்றாலும், பாகிஸ்தான் பணம் என்றாலும், எங்களுக்குத் தேவைப் பணம், உங்களுக்குத் தேவைப் படம் என்று வெளிப்படையாக அறிவிக்கும் தைரியமேனும் வேண்டும். ஏற்கனவே மந்தைகளாய் மாறியுள்ள தமிழக ரசிகர்களின் கூட்டம் இந்த உண்மையைத் தானாகவேனும் புரிந்து கொள்ள வேண்டும்.

எப்படியெல்லாம் ஏமாற்ற வேண்டுமோ அப்படியெல்லாம் ஏமாற்றி விட்டு, மக்களின் போராட்டத்திற்கு ஒன்றுபடாமல், தலைவர்களின் கைதிற்கு மட்டும் உண்ணாவிரத நாடகம் நடத்தும் சந்தர்ப்பவாதம், சம்பந்தமேயில்லாமல் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தைப் பயன்படுத்திச் செய்யும் அரசியல், தன்னுடைய பட வெளியீட்டிற்காக யாரெல்லாம் முதல்வர்களாய் இருக்கிறார்களோ, எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறதோ, அதற்கேற்றப்படி மாற்றிக் கொள்ளும் சாதுர்யம், தன் படத்தைத் திருட்டு வீ சி டி யில் பார்க்காமல், உழைக்கும் காசில் கொஞ்சம் அரசாங்கத்தின் டாஸ்மாக்கிற்கும், மீதத்தைத் தன் தலைவனின்(?!) படத்தை டிக்கெட் வாங்கித் திரையரங்கில் பார்க்கும் ரசிகனுக்குச் செய்ய வேண்டிய மரியாதையை, அரசியல் தலைவர்களுக்குப் பாராட்டு விழா எடுத்து, கூழைக் கும்பிடு போடும் வேஷம் என என இவற்றையெல்லாம் மாற்றிக் கொள்ளாத நடிகர்கள், அரசியலுக்கு வந்து மக்களுக்கெனச் சாதிக்கப் போவது ஒன்றும் இல்லை ரசிக மடையர்களே!

நடிப்பு ஒரு கலை. அது ஒரு தொழில். அதையும் ஒரு தர்மமாகச் செய்தனர் சுதந்திரப் போராட்டக் காலத்தில். இன்று அது வெறும் தொழில். எங்கோ சில இயக்குனர்கள், வெளியில் வராத சமூக அவலங்களைக் காட்சிப்படுத்தி நீதிக்காக ஆவணப்படுத்துதல் மட்டுமே எஞ்சி நிற்கும் சமூகத் தர்மம். பொழுதுபோக்கு அம்சம் என ரசிகனை மகிழ்விப்பது, அல்லது நல்ல விதமாய்ச் சிந்தனையைத் தூண்டுவது என்பது தொழில் தர்மம்.

எந்தத் துறையாய் இருந்தாலும், பெண்களின் நிலை இங்கேயும் சொல்லிக்கொள்ளும் நிலையில் இல்லை, நடிகர்களின் நடிப்பை நம்பி ஏமாறும் ரசிகன், தலைவன் என்று போற்றும் ரசிகன், பெரும்பாலும் நடிகையின் நடிப்பை விடத் தோற்றத்தைக் கண்டு ரசிப்பதும் காமுறுவதும் மட்டுமே இங்கே எதார்த்தம், அப்படித்தான், அப்படி ஓர் இடத்தை மட்டும்தான் பெரும்பாலான தமிழ்ப்படங்கள் நடிகைகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்து இருக்கின்றன.

தமிழர்களைப் போல எளிதில் காட்சி மாயையில் ஏமாறும் கூட்டம் இருக்கும்வரை, எதுவும் திரைப்படமாகும், விஷம் கூட விளம்பரமாகும்.. நாளை இவர்கள் தலைவர்கள் ஆவர்கள், நம்முடைய பிழைப்பு நாய்ப் பிழைப்பாகும்.


ரசிகர்கள் ரசிகர்களாகவே இருக்கும்வரை நடிகர்கள் நடிகர்களாகவே இருப்பார்கள்... ரசிகர்கள் வெறியர்கள் ஆகும்போது நடிகர்கள் தலைவர்கள் ஆகிறார்கள்!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top