ஸ்மைல் வெப் ரேடியோ – முற்றிலும் இளைஞர்களால் முன்னெடுத்து நடத்தப்படும் இந்த இணைய வானொலி, பண்பலை வானொலிகளுக்கு சிறிதும் சளைக்காத வித்தியாசமான பல நிகழ்ச்சிகளை கொண்டு உலகத்தின் பல்வேறு இடங்களில் வாழும் தமிழர்களை ரசிகர்களாகக் கொண்டுள்ளது.
எல்லா இனியத் தருணங்களையும் வித்தியாசமாகக் கொண்டாடி மகிழும் ஸ்மைல் வெப் ரேடியோ, இம்முறை பத்மபூஷன். டாக்டர். கமல்ஹாசன் அவர்களின் 60வது பிறந்தநாளை பிரம்மாண்டமான முறையில் ஒரு சாதனை முயற்சியாகப் பதிவு செய்ய உள்ளது.
அதன்படி, ஆஹா பண்பலையில் கடந்த நான்கு வருடங்களாக நன்கு அறியப்பட்ட ஆர்.ஜே. “கோல்மால்” விக்னேஷ், தொடர்ந்து 12 மணி நேரம், அதாவது 720 நிமிட தொடர்பேச்சு (டாக் மாரத்தான்) சாதனை முயற்சியை நடத்தவிருக்கிறார். இதற்க்கு முன்பு தமிழ்நாட்டில் ஆர்.ஜே. தீனா 198 மணி நேரம் தொடர்ந்து ரேடியோவில் பேசியதே சமீபத்திய சாதனையாக உள்ளது.
ஆனால் அவருடைய சாதனை “ரேடியோ மாரத்தான்” வகையைக் சார்ந்தது. அதில் ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ஒருமுறை மட்டும் ஆர்.ஜே. பேசினால் போதும். மற்ற நேரங்களில் பாடல்கள், விளம்பரங்கள் ஒலிபரப்பப்படும். ஆனால் ஆர்.ஜே.விக்னேஷ் செய்யப்போவதோ, இதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட சாதனை முயற்சி. இது “டாக் மாரத்தான்” வகையைச் சார்ந்தது.
இதன் மூலம் ஆர்.ஜே. எந்த வித பாடலோ, விளம்பரமோ, பிறர் உடனோ உரையாடல் மேற்கொள்ளக் கூடாது. இந்த சாதனை முயற்சியை, கமலின் பிறந்தநாளான நவம்பர் 7,2014 அன்று, சென்னை அமைந்தகரையில் உள்ள ஸ்கை வாக் மாலில், காலை 8 மணித் தொடங்கி மாலை 8 மணி வரை தொடர்ந்து 720 நிமிடங்கள் எந்தவித இடைவெளியுமில்லாமல் பேசிக்கொண்டேயிருக்கப்போகிறார்.
இதில் கமல்ஹாசனின் திரை உலகப் பதிவுகள், 55 வருட சாதனைகள், தொழில்நுட்ப கூர்மை, இலக்கியம், சமூக பொறுப்பு, அரசியல் என அவரது அத்தனை பரிமாணங்களைப் பற்றியும் 12 மணி நேரம் பேசப்போகிறார்.
ஆர்.ஜே.விக்னேஷ் இப்படி தொடர்ந்து பேசுவதால், வோக்கல் கார்ட் எனப்படும் குரல்வளை கிழிவதற்கான வாய்ப்பிருந்தும், கமல் மீது கொண்டிருக்கும் தீராத அன்பாலும், ரேடியோ மீது கொண்டிருக்கும் பற்றாலும், இந்த சாதனையை படைக்கத் துணிந்துள்ளார். இது தமிழ்நாடு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், ஆசியா புஃக் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்படவுள்ளது.
0 comments:
Post a Comment